2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாருமறியாக் காலம்: 2018

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஜனவரி 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலம் எப்போதும் எதிர்பாராதவைகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. அதனால், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பும் அதை எதிர்வுகூறுவதில் ஒரு சுவாரஷ்யமும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது.

 எதிர்காலத்தை முழுமையாக எதிர்வுகூறவியலாது. ஆனால், அரசியல் நிகழ்வுகள், அதன் கடந்த காலத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. கடந்தகாலமும் அதன்வழிவந்த நிகழ்காலமும் எதிர்காலத்தை எதிர்வுகூருவதற்கான அடிப்படையாகின்றன.  புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகளோடு பிறந்துள்ளது. இவ்வாண்டில் நடக்கவுள்ள அல்லது நடக்கலாம் என நினைக்கின்ற, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை அடிக்கோடிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.   

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நிச்சயமின்மைகள், மக்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் எனக் கடந்தாண்டின் பிரச்சினைகளையும் தீர்வுகளற்றுத் தொடரும் கோரிக்கைகளையும் சுமந்தபடியே இவ்வாண்டு மலர்ந்துள்ளது என்பது முக்கியமானது.   

கார்ள்மார்க்ஸின் 200ஆவது பிறந்த தினம்  

2018ஆம் ஆண்டு கார்ள்மார்க்ஸின் 200ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் ஆண்டாகும். 1818ஆம் ஆண்டு பிறந்த கார்ள்மார்க்ஸ், மார்க்சிய ஒளியில் உலகைக் கண்டவர்.   

20ஆம் நூற்றாண்டின் முதன்மையான சிந்தனையாளராக அறியப்படும் மார்க்ஸின் 200ஆவது பிறந்த தினமானது, இவ்வாண்டு கார்ள் மார்க்ஸ் மற்றும் அவரது தோழரான பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் 1848இல் எழுதப்பட்ட கம்யூனிசப் பிரகடனத்தின் 170ஆவது ஆண்டு நினைவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.   

அவ்வகையில், உழைக்கும் மக்களின், போராடுகின்ற மக்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பதாக இவ்வாண்டு அமையும் என எதிர்பார்க்கலாம்.   

 முதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 100 ஆண்டுகள்  

இவ்வாண்டு, முதலாம் உலகயுத்தம் முடிவடைந்த 100 ஆண்டுகள் நினைவைக் குறிக்கிறது. மூன்றாம் உலக யுத்தமொன்றை நிகழ்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபடி உலகம் மூன்றாவது உலகயுத்தத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.   

ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முன்னேற்பாடுகள்  

ஈரானில் மக்கள் போராட்டங்கள் என்பதன் பெயரால் அரசுக்கெதிரான போராட்டங்கள் கிளறிவிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகையில் இவ்வாண்டு பிறந்துள்ளது.   

மத்திய கிழக்கில் அமெரிக்கா அடைந்துள்ள பின்னடைவை எவ்வாறேனும் சரிக்கட்ட வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உண்டு. வெல்லமுடியாத சிரியா யுத்தம், ஈராக்கில் எழுச்சிபெறும் அமெரிக்க எதிர்ப்பு, லிபியாவில் அமெரிக்க சார்பு ஆட்சியொன்றை நிறுவ இயலாமை, யெமனில் நடைபெறும் வெல்லவியலாத போர் என்பன கடந்தாண்டு முன்னெப்போதும் இல்லாதளவு மத்திய கிழக்கின் மீதான அமெரிக்கச் செல்வாக்கைக் குறைத்துள்ளன.   

அதேவேளை அமெரிக்க மேற்குலக நலன்களுக்கு எதிரான வலுவான கூட்டாக ரஷ்யா, சீனா, ஈரான், ஹிஸ்புல்லா ஆகியன உருவெடுத்துள்ளமை அமெரிக்காவுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  

சீனாவின் செல்வாக்கு  

2018ஆம் ஆண்டு, சீனா முன்னெப்போதுமில்லாதளவு தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதோடு தனது அதிகாரத்தை நிறுவும் காலமாக மாறும். உலக அரசியல் அரங்கில் சீனாவுக்கான ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவுகள் சீனாவின் தளத்தை உயர்த்தப் பயனுள்ளவை. அதேவேளை சீனாவின் பொருளாதார பலம் அதன் அதிகாரத்தை விரிவுபடுத்தவும் உறுதிப்படுத்தவும் பயன்படும்.   

சீனாவின் ‘ஒரு பட்டி, ஒரு வழி’ திட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமையக்கூடும். 2013ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திட்டம் ஐந்து ஆண்டுகளின் பின்னர், கடந்தாண்டு இடம்பெற்ற மாநாட்டுடன் உறுதிப்படுத்தப்பட்டது.   

இவ்வாண்டு மார்ச் மாதம் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், தனக்கான புதிய தலைமைத்துவ குழுவை நியமிக்கவிருக்கிறார். இக்குழு சீனாவின் எதிர்காலம் குறித்த கனவை நனவாக்கும் நபர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.   

அவ்வகையில் மேற்குலக நாடுகள் உலகமயமாதலை பின்தள்ளுகையில், அதை முன்தள்ளி முதன்மைப் பாத்திரம் வகிக்கும் நிலையை நோக்கி சீனா முன்னேறுகிறது. இது மேற்குலகம் விரும்பும் செயலல்ல. உலக சந்தையில் மேற்குலகக் கம்பெனிகளுக்கு நிகரான போட்டியாளர்களாக சீனக் கம்பெனிகள் உருவெடுத்துள்ளன. இவற்றுக்கிடையிலான மோதல் இவ்வாண்டு புதிய கட்டத்தை நோக்கி நகரும்.   

சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துகையில் வடகொரியா, தென்சீனக் கடல் மற்றும் தாய்வான் ஆகியவற்றில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்த முயலும்.   
இம்மூன்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவைப் ‘போட்டி அதிகார மையம்’ என அழைத்ததன் ஊடு, நேரடியாக மற்றும் மறைமுகமாக சீனாவை வலுச்சண்டைக்கு இழுக்க அமெரிக்கா முனைகிறது. அதன் ஒருபகுதியாக அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவக் கப்பல்களை தோழமை நோக்கத்துடன் அனுப்ப இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இதைக் கண்டித்துள்ள சீனா, அவ்வாறு நிகழுமாயின் சீனா, தாய்வான் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்கவியலாதது என்று தெரிவித்துள்ளது. இது நீண்டகாலத்துக்குப் பிறகு சீன-தாய்வான் நெருக்கடிக்கு வித்திடக்கூடும்.   

இதேபோலவே, வடகொரிய விடயத்திலும் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளது. வடகொரியா மீதான அமெரிக்க மிரட்டலை எச்சரிக்கையுடன் நோக்குகிறது. 

வடகொரியா போன்றே தென்சீனக்கடலிலும் அமெரிக்காவின் போர்முனைப்பும் வம்புச்சண்டைக்கு இழுக்கும் போக்கும் தொடரக்கூடும். அதன் தன்மையை உலகளாவிய அதிகார மையத்தின் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது என்பது தீர்மானிக்கும்.  

 தொடர்ந்தும் ‘உலகப் பொலிஸ்காரனாக’ அமெரிக்கா தன்னைத் தக்க வைக்க விரும்பினாலும், ஆயுத வலியால் அனைத்தையும் சாத்தியமாக்கும் நிலைவரம் தற்போது இல்லை என்பதை, கடந்த சில ஆண்டுகால நிலைவரங்கள் உணர்த்தியுள்ளன.   

ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், முன்னெப்போதும் இல்லாதளவு பிளவுகளும் முரண்பாடுகளும் கொண்ட பிராந்தியமாக ஐரோப்பிய ஒன்றியம் மாறும்.   

அதேபோல, பிரெக்ஸிட்டின் விளைவாக வெளியேறும் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடக்காது.  

வலது தேசியவாத அலையின் இன்னொருமுறை ஐரோப்பாவில் இவ்வாண்டு வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரியாவில் ஆட்சிக்கு வந்துள்ள தீவிர வலதுசாரிக் கூட்டணி அதற்கான உந்துதலை வழங்கக்ககூடும்.   

31 வயதான செபஸ்தியன் கூர்ஸ் ஆஸ்திரியாவின் தலைவராக பதவியேற்பது இரண்டு வழிகளில் நோக்கற்குரியது. ஒன்று, உலகின் இளவயது அரசுத்தலைவராக இவர் விளங்கப் போகிறார்; ஐரோப்பா புதிய இளவயது நபர்களைத் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தேடுகின்றது என்பதற்கு இவரது வெற்றி ஓர் எடுத்துக்காட்டு.   

இரண்டாவது, வலது தேசியவாத தீவிரவாதத்தை முன்மொழிந்த இவரையும் இவரது கூட்டணியையும் பெரும்பான்மையுடன் ஆஸ்திரியர்கள் தெரிந்திருப்பதானது, ஐரோப்பாவில் அதிகரித்துள்ள அகதிகள் நெருக்கடி, பொருளாதார ஏற்றதாழ்வுகள், சமூக நல வெட்டுகள் என்பன மேலும் மேலும் வெள்ளை நிறவெறியையும் வலது தீவிரவாதத்தையும் நோக்கி சமூகங்களைத் தள்ளுகின்றன, என்பதை உறுதிப்படுத்துகின்றன.   

முன்பைவிட, அதிகாரம் குறைந்த நிலையில் மீண்டும் பதவிக்கு வந்துள்ள அங்கெலா மேர்க்கெலின் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் பிரதான பாத்திரத்தைத் தக்கவைக்க முனைவார்.   

மேர்க்கெலின் அதிகாரம் குறைவடைந்துள்ள நிலையில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் பிரதான சக்தியாகப் பிரான்ஸை நிலைநிறுத்த முயல்கிறார்.   இது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப் 
போட்டியாக மிளிரும். 

ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடிக்குள்ளாகிய நிலையில், அதன் தலைமைத்துவத்தை பல்கேரியா ஏற்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகவும் வறுமையான நாடாக அறியப்பட்ட பல்கேரியாவின் தலைமைத்துவம் சவால் நிறைந்தது.   

ஒருபுறம் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய இரண்டு பெரிய அதிகாரங்களின் நலன்கள் மறுபுறம் கிழக்கு ஜரோப்பியக் கூட்டாளிகளான போலந்து, செக் குடியரசு, ஸ்லவாக்கியா, ஹங்கேரி ஆகியோரின் எதிர்ப்புக் கூட்டணி அதைவிடப் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆஸ்திரிய வலதுசாரித் தேசியவாதிகள், மேற்கு பல்கன் நாடுகளான சேர்பியா, மொன்டனீகிரோ, மசிடோனியா மற்றும் அல்பேனியா ஆகியவற்றை உறுப்பு நாடுகளாக உள்ளீர்ப்பதன் சவால்கள் எனப் பலதரப்பட்ட நெருக்கடிகளை பல்கேரியா எதிர்நோக்கியுள்ளது.   

ஆபிரிக்காவில் முன்னெப்போதுமில்லாதளவு மக்கள் போராட்டங்கள் முனைப்படைந்துள்ளன. ஐரோப்பா இளவயது அரசியல் தலைவர்களைத் தேடுகையில் அதற்கு முரணாக ஆபிரிக்கா மிகவும் வயதான தலைவர்களை மீண்டும் தெரியும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.   

உலகின் மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டுள்ள கண்டமானது, வயதான தலைவர்களைத் தொடர்ந்தும் தெரிவது முரண்நகை. 

வேலையின்மை, வறுமை, சமூகப் பாதுகாப்பின்மை ஆகியன, தொடர்ச்சியான போராட்டங்களை ஆபிரிக்காவில் நிகழ்த்தும். கடந்தாண்டு அரைவாசிக்கு மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளில் பாரியளவிலான மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை பலனளிக்கவில்லை.   

இப்பின்னணியில் இவை இன்னமும் வீறுகொண்ட போராட்டங்களாக அமையும். கடந்தாண்டு கம்பியா ஜனாதிபதியை மக்கள் வீரஞ்செறிந்த போராட்டங்களின் ஊடு அகற்றியது போல, இவ்வாண்டு அவ்வாறு சிலர் அகற்றப்படலாம். ஆனால், ஆபிரிக்க இளைஞர்கள் இவ்வாண்டு இரத்தம் சிந்துவது உறுதி. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காகப் போராடுவர்.   

ஆபிரிக்காவில் குறைவடையும் அமெரிக்கச் செல்வாக்கை கணிப்பில் எடுத்து, பிரான்ஸ் தனது செல்வாக்கை அங்கு அதிகரிக்க முனைகிறது. கடந்தாண்டு மட்டும் நான்கு தடவைகள் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஆபிரிக்காவுக்கு பயணித்துள்ளார்.   

ஆனால், சீனாவின் பொருளாதார அதிகாரம் ஆபிரிக்காவின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்ற நிலையில், பிரான்ஸ் தனது அதிகாரத்தை நிலைநாட்டப் பாடுபட வேண்டியிருக்கும். இதன் விளைவால் சில ஆட்சிக்கவிழ்ப்புகள் இவ்வாண்டு ஆபிரிக்காவில் நிகழலாம். 

ஆபிரிக்காவின் இரண்டு பெரிய நாடுகளிலும் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்து அகற்றி, உப ஜனாதிபதி சிரில் ரமபோசாவை தலைவராக்கியிருப்பது இரண்டு அதிகார மையங்களை உருவாக்கியிருக்கிறது. இது தென்னாபிரிக்காவில் அரசியல் நெருக்கடிக்கு வித்திட்டுள்ளது.   

மறுபுறம் நைஜீரியாவின் ஜனாதிபதி முகம்மது புகாரியின் உடல்நலன் சார்ந்த சந்தேகங்கள் அதிகரித்துள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது அதிகார வெற்றிடத்தையும் அதன்வழி, பல்முனைப் போட்டியையும் உருவாக்கியுள்ளது.  

இவ்விரு பெரிய ஆபிரிக்க நாடுகளிலும் இவ்வாண்டு அரசியல் ரீதியிலான நிச்சயமின்மைகள் பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளை ஏற்படுத்தக் கூடும். இது ஆபிரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.   
மத்திய கிழக்கின் பிரதான அரங்காடியாக இவ்வாண்டு சவூதி அரேபியா தன்னை நிலைநாட்ட முயலும்.  

ஆபிரிக்காவில் பிரான்ஸுடன் கைகோர்த்துத் தனது செல்வாக்கை நிலைநாட்ட சவூதி முனைவதோடு, அமெரிக்காவுடனான புதிய நெருக்கம் ஈரானுடனான முறுகலை மேலும் அதிகரிக்கும். மத்திய கிழக்கில் புதிய முரண்பாடுகளுக்கு சவூதியின் தலையீடு வழிவகுக்கும்.   

கடந்தாண்டு தொடங்கியபோது வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றம் நிகழ்வது நிச்சயம் போன்றதொரு நிலை இருந்தது. அமெரிக்க ஆதரவுப் போராட்டங்கள், பொருளாதாரத் தடைகள் வெனிசுவேலாவில் பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கின.   

ஆனால், இப்போது நிலைமைகள் மாறியுள்ளன. ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோ தனது பிடியை இறுக்கியுள்ளார். இவை இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் அவரின் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதோடு, ஆட்சிமாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கான அமெரிக்க ஆசையில் மண் வீழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.   

இவ்வாண்டு பிரேஸிலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சதியின் மூலம் ஜனாதிபதி டில்மா ரூசேவ் பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து வலதுசாரி சக்திகள் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைக்கப் போராடுகின்றன.   

லூலாவின் மீள்வருகை இடதுசாரிச் சக்திகளுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதோடு, இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டில் இடதுசாரிச் சார்புடைய ஆட்சி அமைவது இன்னோர் ‘இளஞ்சிவப்பு அலை’க்கான தொடக்கமாக இருக்கக்கூடும்.   

பிரேசிலைப் போன்றே ரஷ்யாவிலும் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாயுள்ளது.   

இது ரஷ்யாவின் மக்கள் செல்வாக்குள்ள தலைவராக இன்னமும் புட்டின் இருக்கிறார் என்பதை அடிக் கோடிடும். 2016 போலன்றி 2017 ரஷ்யாவுக்கு ஆரவாரங்களற்ற அமைதியான ஆண்டு; ஆனால் 2018 அவ்வாறிருக்காது.   

உதைபந்தாண்ட உலகக் கிண்ணம் இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவிருக்கிறது. இது கணிசமானளவு கவனத்தைப் பெறும். பிரேஸில் இம்முறை கிண்ணத்தை மீண்டுமொரு முறை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

செல்வாக்குச் செலுத்தும் இரண்டு சிந்தனையாளர்கள்  

இவ்வாண்டில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய இரண்டு சிந்தனையாளர்களுடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். முதலாமவர் 88 வயதான யேர்ஹான் ஹபமாஸினால். இவரது‘பொதுவெளி’ (Public Sphere) என்ற கருத்தாக்கம் இப்போது குறிப்பாக ஐரோப்பிய மையவாத சிந்தனையில் முக்கியத்துவம் பெறுகிறது.   

ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள நெருக்கடியை விளங்கவும் அதற்கு மக்கள் மைய தீர்வுகளைத் தேடுவதற்கான அவசியமும் மக்களை ஒருங்கிணைத்து போராட வேண்டியதன் தேவையும் உணரப்படுகிறது. இதற்குரிய கோட்பாட்டுத்தளத்தை தருவதாக ஹபமாஸின் ‘பொதுவெளி’ என்ற கருத்தாக்கம் இருக்கிறது.   

‘பொதுவெளி’ என்பது மக்கள் தங்களது கருத்துகளை சுதந்திரமாகத் தெரிவிக்கவும் கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபடவும் அதனடிப்படையில் பொது முடிவுக்கு வந்து அதை அரசியல் நடவடிக்கையாக்குவதற்கான களமாகும்.   

அவ்வகையில் ‘ஜனநாயகம்’ என்ற கருத்து நெருக்கடிக்கும் கேள்விக்கும் உள்ளாகியுள்ள நிலையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான நடவடிக்கையாகவேனும் ‘பொதுவெளி’யை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டு ஹபமாஸின் சிந்தனைகள் முன்னிலைபெறும்.   

இரண்டாமவர் கொன்பூசியஸ். இவரை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். இவரது சிந்தனைகள் சீனாவின் கொள்கை உருவாக்கத்திலும் முடிவுகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதனை இவ்வாண்டும் காண முடியும்.   

தனக்குள் எதை உட்பொதிந்து வைத்திருந்தாலும் ‘வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் வரலாற்றில் இருந்து நாம் பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே’ என்ற கொன்பூசியஸின் புகழ்பெற்ற கூற்றை 2018ஆம் ஆண்டு மீண்டுமொருமுறை மெய்பிக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .