2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு

Ahilan Kadirgamar   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு,  யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது.

ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகம், கடனில் சிக்கியுள்ளமை உண்மைதான், ஆனால், அவ்வாறான கடன் நிலைமை ஏற்படக் காரணங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளுக்குள், யாழ்ப்பாண இளைஞர்கள் பற்றிய கலந்துரையாடல், இவ்வளவு பெருமளவுக்கு எவ்வாறு மாறியது?

உள்நாட்டைச் சேர்ந்தோரும் வெளிநாட்டைச் சேர்ந்தோரும், மேலே குறிப்பிட்ட சோம்பேறித்தனத்துக்கு, புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவரிடமிருந்து கிடைக்கும் பணத்தைக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர். சாய்வுக் கதிரையில் இருந்தவாறு மேற்கொண்ட ஆய்வுகளைக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் கதைக்கின்றனர்.

ஏராளமான பணத்தைக் கொண்ட அவர்கள், தங்களுடைய சேமிப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு அனுப்புகின்றனர் எனவும், அதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் சோம்பேறிகளாகவும் சுயதிருப்தியடைபவர்களாகவும் மாறிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளின் வெளிநாட்டுப் பணத்தின் பாய்ச்சல் பற்றிக் கவனமாகப் பார்க்கும் போது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையானோர் எவ்வாறு தடுமாறுகின்றனர் எனவும், குடும்பத் தேவைகளுக்காக, கிராமிய இளைஞர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் எனவும், இன்னொரு பக்கமான பார்வை கிடைக்கிறது.

அடக்குமுறையான கலந்துரையாடல்

கஷ்டமான காலங்களிலும் நெருக்கடிக் காலங்களிலும், மக்களை - குறிப்பாக, சமூகத்தில் ஒடுக்கப்படும் பிரிவினரை - சமூகக் கலந்துரையாடல்கள் குறைசொல்லும் என்பது வழக்கமானது. அப்பகுதியில் காணப்படும் உண்மையான தகவல்களை அவை திரிப்பதோடு மாத்திரமல்லாமல், விளிம்புநிலையில் காணப்படும் அவர்களை மேலும் ஒடுக்குவதற்கும் சுரண்டுவதற்கும் வழிவகுக்கிறது.

அலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் “அலைந்து திரிவதற்கும்” இளைஞர்கள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர் என்றால், யாழ்ப்பாணத்தில் அடிக்கடி கேட்கப்படும், சமூகத்தின் “கலாசாரச் சீரழிவுக்கு”, யுவதிகள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை, இவ்வாறான கருத்துகள், அவர்களையும் அவர்களது உடல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், அவர்களது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குமே உண்மையில் காணப்படுகின்றனர்.

மேலதிகமாக, “கலாசார சீரழிவு” என்பது, இளைஞர்களைப் பொதுவாக விமர்சிப்பதற்கான பொதுவான ஒன்றாகவும் காணப்படுகிறது. அவர்கள் எவ்வாறு உடையணிகிறார்கள், இசையிலிருந்து திரைப்படங்கள் வரை பிரபலமான கலாசாரத்தைப் பின்பற்றுதல், அவர்களது “சோம்பேறித்தனம்” ஆகியவற்றைக் காட்டுவதற்கு, இவ்விமர்சனம் பயன்படுகிறது.

மேல்தட்டுவர்க்க விமர்சகர்கள் தான், மேம்போக்கான இந்த ஆய்வை முன்வைக்கிறார்கள் என்றில்லை; இது, ஊடகங்கள் மூலமாகப் பெருமளவில் பரப்பப்படுகிறது, இறுதியில் கிராமியச் சமூகத் தலைவர்களாலும், சில வேளைகளில் மக்களாலும், இவை பயன்படுத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு நிலவும் பொருளாதார வளர்ச்சியின் மந்தம் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பிய பொருளாதார நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கூட, இவ்வாறான கலாசார விளக்கமளிப்புகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பின்னணியில், கட்டமைப்பு ரீதியான சவால்கள் தொடர்பான எந்தவிதமான அரசியல், பொருளாதார ஆய்வுகளும் புறக்கணிப்படுகின்றன. வேகமாக அதிகரித்துவரும் கடன்நிலைமைக்கு மத்தியில், நிதியியல் நிறுவனங்களின் பெருவளர்ச்சியூடாக, சொத்துகளைத் திரட்டுதல் என்பது, அரிதாகவே கருத்திற்கொள்ளப்படுகிறது. கடந்தகால கொள்கைத் தெரிவுகள் காரணமாக ஏற்பட்ட சமூக எதிர்வினைகளின் விளைவுகள் பற்றி, சிறிய அளவிலேயே பிரதிபலிப்புக் காணப்படுகிறது.

உதாரணமாக, நாட்கூலித் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது, கிராமிய இளைஞர்களின் சோம்பேறித்தனத்தில் வெளிப்படுகிறது என, யாழ்ப்பாண மத்தியதர வர்க்கங்கள் திட்டுவது வழக்கமானது. இளைஞன் அல்லது யுவதிக்கு, எப்போதிருந்துவிட்டு வழங்கப்படும் வேலைகளுக்கு, அவர்கள் வருவதில்லை என்ற நிலை காணப்படுகிறது.

இந்நிலை, இளைஞர்களைக் குற்றங்காணுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறான குற்றங்காணுதல், தங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றியிருந்தே ஆரம்பிக்கும்.

நாட்கூலித் தொழிலின் நிலையற்ற தன்மையை, அவர்கள் கருத்திற்கொள்வதில்லை. மழை பெய்தால், அத்தொழில் இருக்காது; இத்தொழில், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர், கூலித் தொழிலுக்கு ஆட்களைத் தேடுவதில் தான் தங்கியுள்ளது.

ஆகவே, வீடுகளில் காணப்படும் நெருக்கடிகளுக்கான பதிலாக, யாழ்ப்பாண இளைஞர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வேலைகளை, அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

புலம்பெயர்தலும் பணம் அனுப்புதலும்

யாழ்ப்பாணத்தின் கிராமியப் பகுதிகளில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியான பணம் கிடைத்தல் என்ற அடிப்படையில், மிகக்குறைவான அளவே காணப்படுகிறது. பணம் கிடைக்கும் வீடுகள் உண்மையில், திருமணங்கள், சமூக நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளுக்காகவே, ஒருதொகைப் பணத்தைப் பெறுகின்றன.

வெளிநாடுகளில் காணப்படும் கிராமியச் சமூகங்கள், சாதியோடு தொடர்புடைய நிறுவனங்களிலும்  குறிப்பாக கோவில்களில் பணத்தை இட்டுள்ளன. இந்த நிலையிலும், இவ்வாறான பணம் அனுப்புதல், வீழ்ச்சியிலேயே காணப்படுகிறது.

மறுபக்கமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களால் பணம் அனுப்பப்படுதல், கணிசமானளவு அதிகரித்திருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, முக்கியமான இளைஞர்களே, மத்திய கிழக்குக்கும் மலேஷியா போன்ற இடங்களுக்கும் கடினமான பயணத்தை மேற்கொண்டு, கஷ்டமான சூழ்நிலைகளின் கீழ், மாதாந்தம் 20,000 ரூபாய் என்ற அளவில், மாதாந்தம் தொடர்ச்சியாகப் பணம் அனுப்புகின்றனர்.

ஆக, யாழ்ப்பாணத்திலுள்ள சோம்பேறிகள் எனச் சொல்லப்படும் இந்த இளைஞர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு செயற்படுகின்றனர்? 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் தகவல்களின்படி, 2016ஆம் ஆண்டின் தேசிய ஆண் சனத்தொகையில் 2.8 சதவீதமாக, யாழ்ப்பாணத்தின் ஆண் சனத்தொகை காணப்படுகிறது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள், வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காகச் செல்பவர்களை மாத்திரமே பதிவு செய்கிறது; வெளிநாட்டில் வேலை செய்பவர்களை அல்ல. நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் யாழ்ப்பாண ஆண்களின் சதவீதம், 2.7 சதவீதமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார நெருக்கடி ஆழமடைய, 2012ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுக்குள், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் யாழ்ப்பாண ஆண்களின் சதவீதம், இரண்டு மடங்காகியது. இந்த எண்ணிக்கை, 3,621 ஆண்களிலிருந்து 7,817 ஆண்களாக அதிகரித்தது.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஆண்களின் சதவீதம் என்று வரும்போது, இலங்கையிலிருந்து சென்ற ஆண்களில் 4.1 சதவீதம், 3.3 சதவீதம், 3.7 சதவீதம் என, 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் காணப்பட்டது. இது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண்களில் அதிக சதவீதமாளேனார், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த ஆண்களோடு ஒப்பிடும் போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண்கள், விடாமுயற்சி கொண்டவர்கள் என்று கூறுவதற்காக, இத்தரவை நான் தரவில்லை.

மாறாக, “சோம்பேறித்தனம்”, “கடின உழைப்பு” ஆகியன தொடர்பான வாதங்கள், கலாசார பக்கச்சார்பால் உருவாக்கப்படுவன என்பதே, எனது கருத்து. பொருளாதாரம், தொழிலாளர்படை ஆகியன தொடர்பான உண்மையான நிலைவரம், சமூக, பொருளாதார இயங்கியல்களின் கட்டமைப்புரீதியான விளக்கங்களில் பெறப்படுவது தான் சிறந்தது.

கடினமான வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு ஆண்கள் தயாராக இருக்கின்றனர் என்றால், அந்த ஆண்கள், தங்களுடைய சொந்தப் பகுதிகளில் ஏன் பணியாற்ற முடியவில்லை என்பது தொடர்பாக, உள்ளூர்ப் பொருளாதாரம் தொடர்பான, கவனமான ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமானது.

இதைப் போன்ற, யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மேற்கொண்ட கள ஆய்வின்போது, அதிகரித்துவரும் அளவில் இளம் பெண்கள், சுரண்டல்மிகுந்த ஆடைத் தொழிற்றுறையில் பணியாற்றத் தயாராக இருக்கின்றனர் என்பதை நான் கண்டுகொண்டேன். உள்ளூர் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், தெற்கிலுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் அவர்கள் செல்கின்றனர்.

இந்த யதார்த்தத்திலிருந்து பெறப்படக்கூடிய முக்கியமான பாடம் என்னவெனில், கிராமிய சமூக வாழ்வு பற்றிய புரிதலுக்கு, பழைமைவாத சமூகக் கலந்துரையாடல்களை விடுத்து, கரிசனையான ஆரம்பப் புள்ளியுடன் கூடிய அரசியல், பொருளாதார ஆய்வு என்பது, அதிக பலன்களைத் தரும் என்பதாகும்.

வேலைவாய்ப்பும் ஒருமைப்பாடும்

யாழ்ப்பாணத்திலுள்ள அநேக கிராமங்களில், ஸ்திரமான குடும்பமொன்றைக் கொண்டுசெல்வதற்கான, ஒழுங்கான மாதாந்த வருமானத்தையே, மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுரண்டலும் வெளியேற்றமும்  கொண்ட, கடினமான சூழ்நிலைகளைக் கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும் ஆடைத் தொழிற்றுறையிலும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதைக் காட்டுகிறது.

சுயதொழில் வாய்ப்பிலும் சுயமாக உருவாக்கப்படக்கூடிய வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களிலும் கவனஞ்செலுத்திய, அரசின் மீள்கட்டுமானக் கொள்கைகளும் கொடையாளர்களினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் முன்னெடுப்புகளும், போருக்குப் பின்னரான யாழ்ப்பாணத்தில், அவலமான வகையில் தோல்வியடைந்துள்ளன.

போரின் பேரழிவுக்குப் பின்னர், வருமானத்தை உருவாக்க வேண்டிய சுமையை, தனிநபர்களிடம் விடுவதென்பது, ஒழுங்கற்ற வருமானம் வருவதை ஏற்படுத்தியது. இறுதியில் அது, சொத்து இழப்புக்கு வழிவகுத்தது. அவ்வாறான சிந்தனையின் தோல்வியை ஏற்றுக் கொள்வதை விடுத்து, இளைஞர்கள் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இளைஞர்களின் எண்ணங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய வகையில், பயன்தரக்கூடிய செயற்பாடாக, தொடர்ச்சியான வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய உள்ளூர்ப் பணிகளை உருவாக்குதலே காணப்படுகிறது. உள்ளூர் வளங்களையும் சிறிய தொழிற்றுறைகளையும் விருத்தி செய்வதற்காக, முதலீடாக இது அமையும்.

கிராமிய சமூகங்களின் சமூக, பொருளாதார அமைப்புகளை அரிதாகவே கருத்திற்கொள்ளும் பொருளாதார நிபுணர்களக், கொள்கை வகுப்பாளர்கள், ஏனைய அறிஞர்கள் ஆகியோரின் தரப்பின், விமர்சனரீதியான பிரதிபலிப்பும் இதற்குத் தேவைப்படும்.

இளைஞர்களின் கலாசார வாழ்க்கையைப் பொறுத்தவரை, மேல்தட்டு வர்க்கங்களும் கோபமான வயதான ஆண்களும், சமூகத்தில் ஏற்கெனவே காணப்படும் விடயங்களைத் தொடரவே விரும்புவார்களே தவிர, சமூக மாற்றத்தை விரும்பமாட்டார்கள்.

அந்த வகையில், சமூகத்தில் அவர்களது ஆதிக்கமான நிலை, தொடர்ந்தும் பேணப்படும். போரின் பேரழிவுக்குப் பின்னர், அவர்கள், ஒடுக்குமுறைக் கலந்துரையாடல்களுக்கோ அல்லது கடந்த காலங்களில் மூழ்குவதற்கோ சென்றுவிடுகின்றனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்தில் ஏற்படக்கூடிய பாரியளவு மாற்றங்கள் இளைஞர்களிடமிருந்து வருவதற்கே வாய்ப்புகளுள்ளன. ஆகவே, அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க முன்னர், அவர்களைச் செவிமடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு உண்டு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .