2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரஜினியின் ‘புதிய தர்பார்’

எம். காசிநாதன்   / 2020 ஜனவரி 27 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசியல் களத்தில் ‘கையைச் சுட்டுக் கொண்டு விட்டார்’ சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.   ‘ஆன்மீக அரசியல்’ என்றால், தமிழக மக்களின் மனதில் நிறைந்து வாழும் பெரியாரை விமர்சிக்க வேண்டும் என்ற நினைப்பில், சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ பொன் விழாக் கூட்டத்தில், வார்த்தையைத் தவற விட்டுவிட்டார் ரஜினி.   

‘துக்ளக்’ ஆசிரியர் சோவுக்குச் செல்வாக்கை ஏற்படுத்திய இரு நிகழ்வுகள் என்று கூறி, “‘துக்ளக்’ பத்திரிக்கை 1971ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதுதான், கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசாங்கம் கொடுத்த ‘பப்ளிசிட்டி’” என்றார்.   

இறந்தவர்கள் பற்றிக் குறை கூறிப் பேசுவது, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் கலாசாரம் அல்ல! 

அந்தக் கலாசாரத்தை மீறிய ரஜினி, 1971இல் சேலத்தில் நடைபெற்ற ‘மூடநம்பிக்கை ஒழிப்பு’ பேரணி விவகாரத்தில், அதைத் தலைமையேற்று நடத்திய பெரியார், பறிமுதலுக்கு உள்ளான ‘துக்ளக்’ பத்திரிக்கை ஆசிரியர் சோ, பறிமுதல் செய்ய உத்தரவிட்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகிய மூவருமே, தற்போது உயிருடன் இல்லை.  

 அப்படியொரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ரஜினி பேசியதால், திராவிடக் கழகத்தினரும் ஏன் அனைத்து அரசியல் கட்சி (பா.ஜ.க தவிர) தலைவர்களும் ரஜினியை விமர்சித்து வருகிறார்கள்.  
“ரஜினி அரசியல்வாதி அல்ல; நடிகர். தந்தை பெரியார் பற்றிப் பேசும் போது, யோசித்துப் பேச வேண்டும்” என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் செய்தார்.  

 “நான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறேன் என்றால், அதற்குத் தந்தை பெரியார்தான் காரணம். ஆகவே அவரைப் பற்றி, ரஜினி நன்கு அறிந்தும், சிந்தித்தும் பேச வேண்டும்” என்று அ.தி.மு.க சார்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.   

ரஜினி வீட்டைத் திராவிக்ட கழகத்தினர் எதிர்ப்பு காட்டி, ரஜினியின் ‘போயஸ் கார்டன்’ வீட்டை முற்றுகையிட்டனர். “ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளன.  

1991இல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, ‘பாஷா’ படத்தில் அ.தி.மு.கவை விமர்சித்து, வம்பில் சிக்கினார் ரஜினி. ஆனால், அப்போது அவருக்கு ஆதரவளிக்க, மற்ற அரசியல் கட்சிகள், குறிப்பாகத் தி.மு.க முன் நின்றது.   

பிறகு, ‘பாபா’ பட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதி, படப் பெட்டியைப் பாதுகாக்கவே படாத பாடு பட்டார் ரஜினி. அப்போதும், தி.மு.க போன்ற கட்சிகளும் ஏன் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க கூட, ரஜினிக்கு உதவி செய்தது.   

ஆனால், இப்போது ரஜினியை அ.தி.மு.கவும் எதிர்க்கிறது; தி.மு. கழகமும் எதிர்க்கிறது. ஏனென்றால், இதுவரை அவர், ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நிறை குறைகளைப் பற்றி பேசினார். ஆனால் இப்போது, இந்த இயக்கங்கள் கடவுளாகப் போற்றும் பெரியார் பற்றிப் பேசியிருக்கிறார்.  

“பெரியார் பற்றிப் பேசியதற்கு, மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பினாலும் பா.ஜ.க மட்டும், ரஜினிக்கு ஆதரவளித்து வருகிறது.  

 தற்போதைக்கு போயஸ் கார்டனில், பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு, ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் ‘துக்ளக்’ பொன்விழா ஆண்டுப் பேச்சால், ரஜினிக்கு இலாபமா நட்டமா?   

இந்தப் புதிய ‘தர்பார்’, அரசியலில் வாக்கு வங்கி வசூலுக்கு உதவுமா? இதுதான் இன்றைக்கு அனைவர் முன்பும் இருக்கிறது.   

ரஜினியை பொறுத்தமட்டில், ‘அரசியல்’ என்பதைத் தாண்டி, தனது பிரவேசத்தை ‘ஆன்மீக அரசியல்’ என்கிறார். அது, கடவுள் ஆதரவு அரசியல் என்று எடுத்துக் கொண்டால், இன்றைக்குத் தமிழகத்தில், கடவுள் எதிர்ப்பாளர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.  

தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் ஏன் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்கள், தினமும் கோவிலுக்குப் போவோரும்,கடவுள் நம்பிக்கை உள்ளோரும்தான் என்ற உண்மை, ரஜினிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.   

அந்தக் கடவுள் பக்தி உள்ள தமிழக வாக்கு வங்கியை, இதுவரை பா.ஜ.க தன் பக்கம் திருப்ப எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில், ‘கடவுள்’ பா.ஜ.கவுக்கக்  கை கொடுத்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை, “தினமும் கோவிலுக்குப் போவோம்; ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிப்போம்”  என்ற மக்களின் மனநிலையை மாற்ற முடியவில்லை.   

‘கடவுள் எதிர்ப்பு’ பெரியாரின் திராவிட கழகத்தின் கொள்கை. அதிலிருந்து 1949ஆம் ஆண்டில் பிரிந்த தி.மு.க தேர்தல் அரசியலை மனதில் வைத்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தது.   

ஆனால், தி.மு.கவிலிருந்து 1972இல் பிரிந்து, அ.தி.மு.கவை வழி நடத்திய எம்.ஜி.ஆர், கடவுள் ஆதரவை வெளிப்படையாக்கினார். ஆகவே, ‘கடவுள் எதிர்ப்பு’,‘ஒரே கடவுள்’, ‘தீவிர கடவுள் ஆதரவு’ ஆகிய மூன்று வாக்காளர்களுமே, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ,திராவிடக் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.கவுடன் ஒன்றிணைந்துள்ளார்கள்.  திராவிடர் கழகம் தேர்தலில் நிற்பதில்லை.  

இந்தத் தி.மு.க, அ.தி.மு.க வாக்காளர்களை, கருணாநிதியும் ஜெயலலிதாவும்’இல்லாத நேரத்தில், வெளியில் எடுக்க வேண்டும் என்று, பா.ஜ.க எடுத்த முயற்சி, இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்நிலையில்தான், தமிழக மக்களிடம் சினிமாவில் கிடைத்த விளம்பரத்தை மூலதனமாக வைத்து, ரஜினி ‘ஆன்மீக அரசியலில்’ வெற்றி பெற்று விட முடியுமா என்று கருதுகிறார். 

அப்படியொரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால், பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள எத்தனையோ மடாதிபதிகள், வெற்றிகளைக் குவிக்கும் அரசியல் தலைவர்களாகியிருக்க முடியும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடவுள் நம்பிக்கை வேறு, தேர்தலில் வாக்களிப்பது வேறு என்பதில், வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்தத் தெளிவு, தேர்தல்களில் பிரதிபலித்திருக்கிறது.  

1971 தேர்தலில், இராமர் படத்தைச் செருப்பால் அடித்த விவகாரத்தில், மூன்று இலட்சம் போஸ்டர்களுக்கு மேல், தமிழகம் முழுவதும் ஒட்டி, அதன் மூலம் கடவுள் ஆதரவாளர்களை தி.மு.கவுக்கு எதிராக வாக்களிக்க முயற்சி நடைபெற்றது. 

ஆனால், அதற்கு முந்தைய 1967 சட்டமன்றத் தேர்தலில், 138 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த தி.மு.க 1971 பொதுத் தேர்தலில், 185 தொகுதிகளில் ‘இராமர் பிரசாரத்தையும்’ மீறி, வெற்றி பெற்றது. இதுதான் எந்த ஒரு கட்சியும் இன்றுவரை தமிழகத்தில் பெற்ற ‘இமாலய’ வெற்றி! 

கடவுள் ஆதரவுக் கொள்கையில், அ.தி.மு.கவை விடத் தீவிரமாக இருக்கும் பா.ஜ.கவுடன் அ.தி.மு.கவும் தி.மு.கவும் மாறிமாறி 1998, 1999 நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி வைத்தது. அதில் அவர்கள், கூட்டணிப் பலத்தில் வெற்றி பெற முடிந்தாலும், அதே கூட்டணிப் பலம், சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.கவுடன் சந்தித்த தி.மு.கவுக்கு வெற்றி தரவில்லை. 

அ.தி.மு.கவுக்கு 2004, 2019 ஆகிய இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்குக் கை கொடுக்கவில்லை. குறிப்பாக, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த போது, ‘தி.மு.க, இந்துக்களுக்கு எதிரான கட்சி’, ‘கடவுளுக்கு எதிரான கட்சி’ என்று கடுமையான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

“நாங்கள், எந்த மதத்தினருக்கும் எதிர்ப்பாளர்கள் அல்ல” என்று விளக்கம் அளிக்க வேண்டிய நிர்பந்தம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. 

ஆனாலும், அதையும் மீறித்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்றது. இப்படி பிரசாரம் செய்த பா.ஜ.கவுடன் அ.தி.மு.க வைத்த கூட்டணி, அக்கட்சிக்கு ஒரேயோர் எம்.பி பதவியை மட்டுமே கொடுத்தது.  

ஆகவே, ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு நிச்சயம், பெரியாரைத் தாக்கிப் பேசுவது உதவாது. ‘கடவுள் ஆதரவு’ ஆயுதத்தை வைத்து, திராவிடக் கொள்கையை நீர்த்துப் போக வைக்க இயலாது. 

பெரியார் விடயத்தில், ரஜினி மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், “தந்தை பெரியார் போன்ற தலைவரை, நான் மதிக்கிறேன்” என்று கூறியிருந்தாலே தப்பித்திருப்பார். 

ஆனால், பெரியாரைத் தொட்டு,  வம்பில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரஜினி, எந்த வழியாகத் தப்பிப்பது என்பது தெரியாமல் சிக்கியுள்ளார். 

இதன் மூலம், பா.ஜ.கவுக்காகவே, ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற ஆழமான எண்ணத்தை, தமிழக வாக்காளர்களிடம் விதைத்து விட்டது. ரஜினியின் இந்தப் ‘புதிய தர்பார்’ நிச்சயம், வாக்கு வங்கி வசூலுக்கு வழி விடாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X