2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணிலா சஜித்தா?

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே.அஷோக்பரன் 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி விடையில்லாது தொக்கி நின்று கொண்டிருக்கும் பொழுது, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய முக்கியஸ்தர்களுள் ஒருவரான அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஜூலை 2ஆம் திகதி வௌியிட்டிருந்த அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார்.  

மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியானது தன்னுடைய கட்சி சார்ந்தவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவில்லை என்பதை அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்த மங்கள சமரவீர கடந்த ஐந்தாண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றிக் கருத்துரைக்கும் போது, அடுத்த முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுபவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால், அது மட்டும் போதாது, மாறாக அவர் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன், அத்தகைய வெற்றிபெறக்கூடிய சகல தகுதிகளும் கொண்டவர் சஜித் பிரேமதாஸ என்று குறிப்பிட்டதுடன், சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தனது ஆதரவையும் வௌிப்படுத்தியிருந்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவரான மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது வௌ்ளிடைமலை. சந்திரிக்காவின் பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் அவர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது மங்களவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.  

மஹிந்தவின் வெற்றியைத் தொடர்ந்து 2007 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஆயினும் 2007இல் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான உறவில் கசப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மங்கள சமரவீர, அநுர பண்டாரநாயக்க, மற்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் பின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த மங்கள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (மஹஜன) பிரிவை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரசியலில் அஸ்தமனமாகிக் கொண்டிருந்த மங்களவை அரவணைத்து அவருக்கு அரசியல் மறுவாழ்வளித்தவர் ரணில் விக்கிரமசிங்க. அதில் ரணிலின் சுயநலம் இல்லாமல் இல்லை. ரணிலின் ஆதரவுக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்ட மங்கள 2010இல் தன்னுடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (மஹஜன) பிரிவை கலைத்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.  

அன்றிலிருந்து ரணிலின் ஆதரவாளராகவே மங்கள கட்சிக்குள் அடையாளங்காணப்பட்டார். கட்சிக்குள் ரணிலின் தலைமைக்கு எதிரான எதிர்ப்பு வலுத்த போதெல்லாம், ரணிலுக்கு பக்கபலமாக  மங்கள நின்றார். 2013இல் ரணிலுக்கு எதிராக மங்களவின் கோட்டையான மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதில் நேரடியாக தடையீடு செய்தவர் மங்கள. ஆகவே இன்று மங்கள தானாக முன்வந்து சஜித் பிரேமதாஸதான் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அறிக்கை வௌியிட்டிருப்பதானது பல கேள்விகளை எழுப்புகிறது.  

சந்திரிக்காவோடும், பின்னர் மஹிந்தவோடுமான உறவு கசந்ததைப் போல, ரணிலுடனான உறவும் மங்களவுக்கு கசந்துவிட்டதா, அல்லது ரணிலின் சம்மதத்தோடுதான் மங்கள குறித்த அறிக்கையை வௌியிட்டாரா என்ற கேள்வி முக்கியமானது. மேலும் தன்னுடைய அறிக்கையில் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், கட்சித் தலைமை ரணிலிடம் தொடரவேண்டும் என்ற தொனியிலும் ஒரு சிறு கருத்தை மங்கள பதிவு செய்திருந்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் போட்டியிட வேண்டுமானால், கட்சிக்குள் அதற்கான ஆதரவை ரணில் திரட்ட வேண்டும். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் தனக்குரியவர்களை ரணில் வைத்திருப்பது அவருக்குச் சாதகமானதாக இருந்தாலும், ஒரு வேளை இன்று மங்கள மாறியதைப் போல அவர்களும் மாறலாம். அரசியலில் ஆதரவு என்பது பெரும்பாலும் காற்றுவீசும் பக்கத்துக்கு சாயக்கூடியதொன்றாகவே இருந்துவருகிறது.  

சந்திரிக்காவின் மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த பலர், மஹிந்த ஜனாதிபதி வேட்பாளரானதும் அவர் பக்கம் சாயத் தொடங்கினார்கள். மேலும் பண்டாரநாயக்க குடும்பத்தின் விசுவாசிகளாக பரம்பரை பரம்பரையாக இருந்த பலர் மஹிந்த ஜனாதிபதியானதும் ஒட்டுமொத்தமாக பண்டாரநாயக்க குடும்பத்தை மறந்துவிட்டு, ராஜபக்‌ஷ குடும்ப ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள். இது அரசியல் யதார்த்தம். ஆகவே ஜனாதிபதியாக சஜித், கட்சித்தலைவராக ரணில் என்பதெல்லாம் இலங்கை அரசியலில் நடப்புச்சாத்தியம் குறைந்த விடயங்கள்.  

இது ரணில், சஜித் என்ற இரண்டு ஆளுமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, அவர்கள் பின்னாலுள்ள ஆட்டுவிக்கும் சக்திகள், ஆதரவுப்புலம், நிகழ்ச்சிநிரல்கள் ஆகியவற்றையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே சஜித் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், ரணிலின் அரசியல் வாழ்க்கை அத்தோடு நிறைவடைந்துவிடும். ஏனெனில்
சஜித் பிரேமதாஸவே விரும்பினால் கூட, அதன் பின்னர் கட்சித் தலைவராகவோ, பிரதமராகவோ ரணில் தொடர்வதை சஜித்தின் ஆதரவுப்புலம் விரும்பாது, அந்த ஆதரவுப்புலத்தை மீறி எவ்வளவுதூரம் சஜித்தால் செயற்படமுடியும் என்பதும் யதார்த்த அரசியலைக் கருத்திற்கொண்டால் ஐயத்துக்குரியது.  

இதற்கு முன்னர் மங்கள ஒருபோதும் சஜித் ஆதரவாளராக இருந்தவரல்ல. மாறாக சஜித்-ரணில் தலைமை முறுகல் நிலைமைகளின் போது, மங்கள ரணிலோடு நின்றவர். இன்று அவர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக வேண்டும் என்று கருத்துரைத்திருக்கிறார் என்றால், அதற்குள் வேறு நிகழ்ச்சிநிரல் இருக்கலாமா என்ற ஐயம் இயல்பானதே. ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள்வரை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் பெரும் கேள்விகள் இருக்கவில்லை.  

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ரணிலே போட்டியிடுவார் என்பது ஐக்கிய தேசியக் கட்சி மட்டத்திலேனும் வௌிப்படையாகச் சொல்லப்படா விட்டாலும் அனைவரும் உணர்ந்திருந்ததொன்றாகவே இருந்தது. ஆனால் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதான மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வலுவைச் சிதைத்ததுடன், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கான பெரும் ஆதரவு எழுச்சி அலையை உருவாக்கியிருந்தது. இந்தத் திருப்புமுனைகூட ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யத் தூண்டியிருக்கலாம். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலோ, அல்லது சஜித் பிரேமதாஸ போட்டியிட்டு வெற்றி பெற்றாலோ ரணிலின் அரசியல் வாழ்க்கை என்பது அத்தோடு அஸ்தமனமாகிவிடும். ரணிலின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால், ரணிலின் ஆதரவாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் அரசியலையும் அது பெருமளவு பாதிக்கும். ஆகவே தற்போதுள்ள சூழலில் அடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உசிதமானதா என்று ரணில் சிந்தித்திருக்கலாம்.  

வாக்குவங்கி யதார்த்த நிலையைப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படை ஆதரவு வாக்குவங்கி மட்டும்தான் ரணிலுக்கு உறுதியாகக் கிடைக்கும். ராஜபக்‌ஷ எதிர்ப்பு என்ற ரீதியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி ரணிலை ஆதரிக்கலாம். ஆனால், தமிழர்களின் வாக்குவங்கி என்றுமில்லாதது போல பிரிந்து நிற்கும் யதார்த்தத்தையும் நாம் மறுக்கமுடியாது. வடக்கு-கிழக்கு என்று ஒன்றாக நின்ற தமிழர் வாக்குவங்கி, இன்று வடக்காகவும், கிழக்காகவும் பிரிந்து நிற்கிறது. வடக்கின் தமிழர்களுக்கு, கிழக்கின் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் புரியவில்லை என்பது கிழக்கு தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.  

ஆகவே, பிரிந்துநிற்கும் தமிழர் வாக்குவங்கி ரணிலை முழுமையாக ஆதரிக்கும் என்று சொல்லவும் முடியாது. மறுபுறத்தில் “சிங்கள-பௌத்த” வாக்குவங்கியின் எழுச்சி அலை மஹிந்த தரப்புக்கு ஆதரவாக இருக்கிறது. குறிப்பாக அரசியலில் நேரடியாக கருத்துரைத்துக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகள் மஹிந்த தரப்பை நேரடியாக ஆதரிப்பார்கள் என்றே தோன்றுகிறது. இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் ரணிலின் தந்திரோபாய நகர்வாகக் கூட மங்களவின் அறிக்கையை நாம் கருத இடமில்லாமல் இல்லை.  

மஹிந்த தரப்புக்கு ஆதரவு அலை பெருமளவு உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள சூழலில், சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கும் போது, அவர் தோல்விகண்டால் ரணிலினால் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்க முடியும். மேலும், அரசியலமைப்புக்கான 19ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிப் பதவியில் அதிகாரங்கள் முன்னர் இருந்ததைவிட பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதிலும் குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்ததாக வரும் ஜனாதிபதிக்கு மைத்திரிபாலவுக்கு உள்ள அதிகாரங்கள் கூட இருக்காது.  

ஆகவே, எவர் ஜனாதிபதியானாலும், நாடாளுமன்றப் பலத்தை தான் தக்கவைத்துக் கொண்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கத்தக்க, அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் மட்டுப்படுத்தும் இன்னோர் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தால், பலமுள்ள பிரதமராக தொடரமுடியும் என்பது ரணிலின் எண்ணமாக இருக்கலாம். ஏனென்றால், வாக்குவங்கியின் ஆதரவு குறைவாகவுள்ள காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அத்தோடு, ரணிலின் அரசியல்வாழ்வு முடிந்துவிடும்.  

அதுபோலவே சஜித் வென்றாலும், அதற்குப் பின்னர் கட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம். ஆகவே மிகச் சுயநலமான மக்கியாவலிய தந்திரோபாயப் பார்வையில் பார்த்தால், வாக்குவங்கியின் ஆதரவை மீட்டெடுக்க முடியாத சூழலில், ரணில் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது தவிர்ப்பார் என்பதோடு, தன்தரப்பைச் சார்ந்த வேறொரு வேட்பாளரை நிறுத்துவார் என்பதும், அதேவேளை, மறுதரப்பு வெல்வதையே விரும்புவார் என்பது தந்திரோபாயரீதியாக தௌிவாக விளங்குகிறது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சஜித் தோல்வியடைந்தால், அத்தோடு கட்சித் தலைமைக்கான சஜித்தின் போட்டியும் அடங்கும் என்ற கணக்கையும் நாம் இங்கு கருத்திற் கொள்ளலாம்.  

எது எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது பேரினவாதத்தின் மறுமலர்ச்சிக்கான தேர்தலாகவே அமையப்போகிறது. இதனை இலங்கை மக்கள் அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். மக்களின் அதிருப்தியை, அச்சத்தை, பாதுகாப்பின்மை தொடர்பிலான உணர்வை பேரினவாதிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முனைகிறார்கள். இது பெரும் அவலத்துக்குத்தான் வழிவகுக்கும். இந்த விஷச்சுழலிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளாவிட்டால், இந்த நாட்டையும், இந்த மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டியதாக உள்ளது. 

(முற்றும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .