2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஜூலை 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார்.   

கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தருணங்களில் எல்லாம் அமைதி காத்த மங்கள, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த வாரமே வாய் திறந்திருக்கிறார். அதுவும், ‘சஜித் ஒரு வெற்றி வேட்பாளர்’ என்பதை, ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். இது, ஐ.தே.கவின் தொண்டர்களிடமும் சஜித் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.  

மங்கள சமரவீர, அடிப்படையில் சுதந்திரக் கட்சிக்காரராக இருந்தாலும், அவர் மஹிந்தவோடு முரண்பட்டுக் கொண்டு, ஐ.தே.கவோடு இணைந்த காலம் தொட்டு, ரணிலின் பரமவிசுவாசியாக இருந்து வருகிறார்.   

கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டபோதெல்லாம், அதனைத் தணித்து, சமநிலை பேணுவதில் அக்கறை கொண்டிருந்தவர்களில் மங்கள முக்கியமானவர். அவர், கட்சிக்குள் எந்தவொரு தரப்போடும் பெரியளவில் முரண்படுவதில்லை. அது, அவர் பதவிகளைக் குறிவைத்து, தன்னுடைய நகர்வை முன்னெடுக்காததன் விளைவாக வந்திருக்கலாம்.   

‘கிங்மேக்கராக’ இருப்பது பற்றியே, மங்கள அதிகம் ஆர்வம் கொண்டிருக்கிறார். அதுதரும் போதை, அலாதியானது என்கிற தோரணையை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். அவரிடம் எப்போதும், அதிகாரத்திலுள்ள யாரையும் தன்னால் வீழ்த்த முடியும் என்கிற எண்ணம் உண்டு. அதனை அவர் நிரூபித்தும் இருக்கிறார்.   

அப்படிப்பட்ட ஒருவரிடத்தில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு, அரசியல் அரங்கில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில்தான், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக, மங்கள முன்மொழிந்திருக்கிறார் என்கிற விடயம் கவனம் பெறுகின்றது.  

இலங்கையின் இறுதி இரண்டு ஜனாதிபதிகளையும் அரங்குக்குக் கொண்டு வந்ததில் மங்களவின் பங்கு கணிசமானது. சந்திரிகா குமாரதுங்க காலத்துச் சுதந்திரக் கட்சிக்குள், இரண்டாம் நிலை அமைச்சராக இருந்த மஹிந்தவை, முதன்நிலைக்குக் கொண்டு வந்தவர்களில் மங்கள முக்கியமானவர்.  சந்திரிகாவின் அழுத்தங்களை மீறி, மஹிந்தவைப் பிரதமராகக் கொண்டு வந்தது, ஜனாதிபதி வேட்பாளராக்கியது வரை மங்கள ஒரு ‘கிங்மேக்கராக’ வெற்றிகரமாகச் செயற்பட்டார்.   

பின்னரான காலத்தில், ராஜபக்‌ஷக்களோடு முரண்பட்டுக் கொண்டு ஐ.தே.க வந்த மங்கள, ராஜபக்‌ஷக்களைத் தோற்கடிப்பதற்காக அவர்களின் பக்கத்திலிருந்தே ஒருவரைத் தேடியெடுக்கும் செயற்றிட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாகச் செயற்பட்டார்.   

குறிப்பாக, மஹிந்தவுக்கு எதிராக, மைத்திரியைக் களமிறக்குவது என்பது தொடர்பில், வெளிநாடுகளில் நடத்தப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும், ரணில் சார்பில் கலந்து கொண்டது மங்களவே. அவர், வெளிநாடுகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் கணிசமானவை.   

மங்களவின் முயற்சிகளை இறுதி நேரத்தில் மோப்பம் பிடித்துக் கொண்டு, எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று, ராஜபக்‌ஷக்கள் முயன்ற போதெல்லாம், அதை வெற்றிகரமாகக் கடந்தார். குறிப்பாக, ராஜபக்‌ஷக்களால் பிரதமர் பதவி வரையில் பேரம்பேசப்பட்ட நிலையில், அதைத் தவிர்த்துவிட்டு, ரணிலின் விசுவாசியாக நின்று, அவர் ராஜபக்‌ஷக்களைத் தோற்கடித்தார். அதுதான், மைத்திரி ‘ஒக்டோபர் 26 சதிப்புரட்சி’யை மேற்கொண்ட போது, அவரை, மோசமான வார்த்தைகளால், மங்கள ஏசுவதற்குக் காரணமானது.  கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும், ஐ.தே.க தன்னுடைய கட்சிக்காரர்கள் யாரையும் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. அதற்கான தயார்படுத்தல்களை அந்தக் கட்சி செய்திருக்கவும் இல்லை.   

2009 போரில், மஹிந்த வெற்றிபெற்றதும், அந்த அலைக்கு எதிராக, ஐ.தே.கவில் யாருமே வேட்பாளராக முன்னிற்பதற்குத் தயாராக இருக்கவில்லை. அதுதான், சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டார். ஆனால், கடந்த தேர்தலுக்காகத் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரை, வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில், ரணில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது இரண்டு காரணங்களுக்கானது. ஒன்று தன்னால், ராஜபக்‌ஷக்களை எதிர்த்து வெற்றிபெற முடியாது. இரண்டாவது, அப்படியான நிலையில், தன்னுடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்தி, குறிப்பாக சஜித் போன்ற ஒருவரை முன்னிறுத்தி, அவர் வெற்றிபெற்றால், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக சஜித் பெரும் ஆட்டத்தை ஆடுவார் என்பதாகும். கட்சியும் தன்னிடமிருந்து பறித்துவிடும் என்பதே அதுவாகும்.   அந்தச் சூழலில்தான், வெளியில் இருந்து வெற்றி வேட்பாளரைத் தனக்குப் பாதிப்பில்லாத வகையில் தேட, ரணில் துணிந்தார். அதுதான், மைத்திரி வரை வந்து நின்றது.  

மைத்திரியை முன்னிறுத்தித் தேர்தலில் வென்றதோடு மாத்திரமல்லாமல், நிறைவேற்று அதிகாரத்தின் கொடும் சிறகுகளைக் குறிப்பிட்டளவில் வெட்டியும் விட்டார். இன்றைக்கு ஜனாதிபதியாக வருகிற ஒருவருக்கு, 19வது திருத்தத்தின் ஊடாகக் குறிப்பிட்டளவு வரையறைகள் உண்டு. அது, ஆட்சியமைக்கும் கட்சிக்கும், பிரதமருக்கும் அதிகாரங்களைப் பகிரவும் செய்கின்றது. அப்படியான நிலையில், தன்னுடைய நிலை கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தாழிறங்குவதற்குரிய வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைத்துவிட்டதாக, ரணில் நினைக்கிறார். அதில் குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கின்றது.  

ரணிலால், நாடாளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தாலும், ஜனாதிபதித் தேர்தலைத் தனி ஆளுமையாக எதிர்கொள்ள முடியாது. குறிப்பாக, ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, அதுவும் கோட்டாபய ராஜபக்‌ஷ போன்ற ஒருவருக்கு எதிராக, கடும்போக்கு பௌத்த சிங்கள வாக்குகளைப் பெறுவது என்பது, அவ்வளவு இயலாத காரியம்.   

அப்படியான நிலையில்தான், தன்னுடைய கட்சிக்குள் இருந்து, தனக்குப் பிரச்சினைகளை அதிகம் வழங்காத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் கட்டாயம், ரணிலுக்கு ஏற்பட்டது. ஒரு கட்டம் வரையில், கரு ஜயசூரியவை முன்னிறுத்திக் கொண்டு, ரணில் காய்களை நகர்த்தினாலும், ஒக்டோபர் சதிப்புரட்சிக் காலத்தில், சஜித்துக்குப் பின்னால் திரண்ட கூட்டம், அனைவரையும் சிந்திக்க வைத்தது.  

கடந்த பத்து ஆண்டுகளில், ஐ.தே.கவின் தலைமைப் பதவிக்கு, சஜித்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் போராடிய பலர், ரணிலால் அரசியலில் இருந்தே அகற்றப்பட்டிருக்கிறார்கள்; பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்; தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் கட்சி மாறிச் சென்றிருக்கிறார்கள்.   

அப்படிப்பட்ட நிலையிலும், சஜித் காட்டிய பொறுமை பெரியது. குறிப்பாக, சதிப்புரட்சிக் காலத்தில் மைத்திரி, ரணிலுக்கு எதிராக, சஜித்தை ஒரு பெரும் கருவியாக முன்னிறுத்த முயன்ற போதெல்லாம், அவர் அமைதி காத்தது; ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு மத்தியில் இன்னும் இன்னும் அபிமானத்தையே ஏற்படுத்தியது. என்றைக்குமே தனக்குரிய இடம் யாராலும் மறுக்கப்பட முடியாத நிலையில், கட்சிக்குள் இருப்பதாக சஜித் நம்பினார். குறிப்பாக, ஐ.தே.கவின் கொழும்பு அதிகார பீடத்தைத் தாண்டி, தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்றும் நினைத்தார்.   

இன்றைக்கும், கொழும்பு லிபரல்வாதிகளுக்கு ரணிலே செல்லப்பிள்ளை. சஜித் ஒரு முட்டாள் என்கிற எண்ணப்பாடே அவர்களிடத்தில் இருக்கின்றது. ஆனால், வெற்றி தோல்விகளை எல்லா நேரங்களிலும் அதிகார பீடங்களால் தீர்மானிக்க முடிவதில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளும், அதனைக் கையாளும் ஆளுமைகளும் கூடத் தீர்மானிக்கின்றன. அப்படியான ஓர் இடத்தில் தான், சஜித் தவிர்க்க முடியாதவராக மாறி நிற்கிறார்.  

கிட்டத்தட்ட கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயமே ஐ.தே.கவுக்கு ஏற்பட்டிருக்கின்றது. கோட்டாவுக்கு எதிராக ரணிலோ, கருவோ சரியான தெரிவு இல்லை என்கிற போது, சஜித்தைத் தாண்டி யோசிப்பதற்குக் கட்சிக்குள் யாருமில்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.   

சஜித்தை மங்கள முன்னிறுத்தியிருப்பது, ஒருவகையில் ரணிலின் அனுமதியோடுதான் என்கிற எண்ணமும் ஏற்படுகின்றது. ஏனெனில், “டி.எஸ்.சேனநாயக்க, ரணில் விக்கிரமசிங்க பாதையில் சஜித்தை முன்னிறுத்துகின்றோம்” என்று, மங்கள கூறுகிறார். அது, ரணிலின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தும் இடமாகக் கொள்ள முடியும்.   

அத்தோடு, சஜித்துக்கு எதிராக, கட்சிக்குள் தான் வளர்த்த குரல்களை, மங்கள போன்ற ஒருவரைக் கொண்டுதான் கட்டுப்படுத்த முடியும் என்று ரணில் நினைத்திருக்கலாம். சஜித் அதிகாரத்துக்கு வந்தாலும், அவரோடு இணக்கமான உறவைப் பேணும் நோக்கில், மங்களவை ஒரு செயற்பாட்டு முகவராக, ரணில் முன்னிறுத்தியிருக்கலாம். ஏனெனில், மங்கள மீதான மதிப்பு அல்லது அவரின் இராஜதந்திர நகர்வுகள் குறித்து, தென் இலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் அச்சம் கலந்த மதிப்பு உண்டு.  

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி, ஒரு சில நாள்களுக்குள்ளேயே, ரணிலின் இன்னொரு விசுவாசியான தயா கமகேயும் “சஜித்தே வெற்றி வேட்பாளர்” என்கிறார். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உத்தியோகப்பற்றற்ற அறிவிப்பாக மங்களவின் வார்த்தைகளைக் கொள்ள முடியும்.   

இதிலிருந்து, தென் இலங்கையைத் தயார்படுத்திக் கொண்டு, பிரசார நடவடிக்கைகளை ஐ.தே.க ஆரம்பித்திருக்கின்றது. நல்லதொரு நாளில், ரணிலின் வாயால், சஜித்தை உத்தியோகபூர்வமாக, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார்கள். அப்போது, எஞ்சியுள்ள சிறு குழுப்பங்களும் கலைந்து போகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X