2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாஸவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.   

சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் காட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கொள்ள முடியும்.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவையும் தாண்டி, அதிகரிக்க வைத்தது.   

மைத்திரி- ரணில் இணைவும், தேசிய அரசாங்கத்தின் உருவாக்கமும் நாட்டின் முன்னேற்றம் சார்ந்தது என்று சொல்லப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கான சாட்சிகளாக எதுவும் பெரிதாகப் பதிவாகியிருக்கவில்லை.  

 மாறாக, தங்களது அதிகார வரம்புகள் சார்ந்த இரகசிய இழுபறியும் குழிபறிப்புகளுமே அரங்கேறி வந்தன. தேசிய அரசாங்கத்தின் தேன்நிலவு காலமென்பது, எந்தவொரு புதிய அரசாங்கமும் பதவியேற்றதும் நிகழ்த்தும் காட்சி மாற்றங்களை ஒத்ததாகவே இருந்தது.   

ஆனாலும், புதிய அரசமைப்பு பற்றிய உரையாடலும், தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைதல் எனும் விடயமும் பெரிய கவர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. குறிப்பாக, கொழும்பு லிபரல்கள் மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில், அது நம்பிக்கையான மாற்றம் என்று சொல்லப்பட்டது.   

ஆனால், தீர்மானங்களை எடுப்பதற்கான திராணியின்மை மற்றும் காலந்தாழ்த்துதல் எனும் நிலைப்பாடுகள் தேசிய அரசாங்கத்தை மக்கள் மத்தியில் நம்பிக்கையிழக்கச் செய்திருக்கின்றது. மஹிந்த தரப்பின் மீதான தென்னிலங்கையின் நம்பிக்கை என்பது, தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் உருவான ஒன்றுதான்.   

தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி தொடர்பில், மைத்திரி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒதுங்கிக் கொள்ள, ரணில் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கின்றது. அதுதான், பிரதமருக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரும் நிலையை உருவாக்கியது. அதுதான், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணிலை அகற்றுவதற்கான பெரும் அழுத்தத்தையும் கொடுக்க வைத்திருக்கின்றது.   

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், ரணிலுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி+ பங்காளிக் கட்சிகள்) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகின்றது.  

 இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் வாய்ப்புகளே அதிகமுண்டு. ஏதாவது, மாயங்கள் நிகழ்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதியினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விட்டாலோ, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தாலோ நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறலாம்.  

 நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து, ஐக்கிய தேசியக் கட்சி, தலைமைத்துவ மாற்றத்தைச் செய்ய எத்தனிக்கின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, புதிய அரசாங்கத்தை அமைத்தல் அல்லது, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக அமருதல் எனும் நிலையை எடுக்க எத்தனிக்கின்றது.  

 ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, எதிர்காலத் திட்டமிடல்கள் என்பன என்னவாக இருக்கப் போகின்றது என்பதுதான் தெளிவின்றி இருக்கின்றது.   

அடுத்த இரண்டு வருடங்களும், தேர்தல்களை முன்னிறுத்தியதாகவே இருக்கப் போகின்றது. மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் பின்னராக, பொதுத் தேர்தல் என்கிற நிகழ்ச்சி நிரலே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னாலுள்ளது.  

 புதிய அரசமைப்புக்கான எந்த வாய்ப்பும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லை. அதை, மங்கள சமரவீரவே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். அப்படியான நிலையில், தென்னிலங்கைக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கி அல்லாடாமல், புதிய பாதையொன்றை கட்டமைப்பது சார்ந்து இரா.சம்பந்தன் சிந்திக்க வேண்டும்.   

தேசிய அரசாங்கமொன்றினூடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று அதிகமாக நம்பியவர்களில் சம்பந்தன் முதன்மையானவர். அடுத்தவர் எம்.ஏ.சுமந்திரன். அதற்காக அவர்கள் காட்டிய ஈடுபாடும் அளப்பரியது.   

அதனாலேயே, அவர்கள் இருவரும் அரசியல்- ஊடக வெளியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்கள். தற்போதுள்ள நிலையில், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, வாக்களிக்கும் நிலைக்கு சம்பந்தனோ, சுமந்திரனோ கூட்டமைப்பைக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது வெளிப்படையானது.   

குறிப்பாக, மேற்கு நாடுகளின் ஆசிபெற்ற ரணிலின் பிரதமர் பதவிக்கு, சிக்கல் ஏற்படுத்தி, மஹிந்த ஆளுமை செலுத்தும் அரசாங்கமொன்று உருவாவதை அவர்கள் செய்ய மாட்டார்கள். 

 தன்னுடைய பதவியைக் காப்பாற்றுவதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்போடு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே ரணில் தயாராக இருக்கின்றார். இந்நிலையில், 15 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு, ரணிலிடம் எவ்வாறான வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளப் போகின்றது என்பதுவும், அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லப் போகின்றது என்பதும் முக்கியமானது.   
ஏனெனில், சந்தர்ப்பங்களைக் கையாள்வது சார்ந்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முதிர்ச்சியற்ற தன்மை காணப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக உண்டு. 

 ஜனாதிபதியோடும் பிரதமரோடும் சம்பிரதாயத்துக்காக பேச்சுவார்த்தையொன்றை நடத்திவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வந்தது போல, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையாள்வதைக் கூட்டமைப்புத் தவிர்க்க வேண்டும்.   

அதாவது, புதிய அரசமைப்பினூடாகத் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வை எட்ட முடியும் என்கிற ஒரே குறிக்கோளினால், தென்னிலங்கையின் அனைத்து இழுவைக்கும் இசைந்து கொடுத்த நிலை என்பது, தமிழ் மக்களைக் குறிப்பிட்டளவு எரிச்சற்படுத்தியது.   

புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை என்கிற நிலையில், சில கடிவாளங்களையாவது கூட்டமைப்புப் போட வேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தனித்து ஆட்சியிலிருந்தாலும் நன்மைகளைப் பெறக்கூடியதாக இருக்கும்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, சஜித் பிரேமதாஸவிடம் செல்லும் பட்சத்தில், ஆட்சித் தலைமைக்குள் மைத்திரியுடன் ரணில் குழப்பகரமான கட்டத்துக்குள் இன்னும் மோசமாகச் சிக்கிக்கொள்வார்.   

அவ்வாறான நிலையில், எதிர்காலத்திலும் ரணிலைக் காப்பாற்றுவதற்கான கட்டங்கள் கூட்டமைப்புக்கு ஏற்படலாம். அவ்வாறான நிலையில், இனி வரப்போகும் இரண்டு வருடங்கள் என்பது, தேர்தல் அரசியல் ரீதியில் மாத்திரமல்ல, அதிகார அரசியல் சார்ந்தும் ஓய்வெடுக்காமலும், சளைக்காமலும் ஆட வேண்டிய அரங்கொன்று கூட்டமைப்பின் முன்னால் திறக்கின்றது.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கண்ட பின்னடைவை, ஆட்சியமைக்கும் கட்டங்களில் கூட்டமைப்பு கடந்து விட்டதாகக் கொள்ள முடியும். ஆனால், சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்பன ஓரணியில் இணையும் பட்சத்தில் பெரும் குடைச்சல் காத்திருக்கின்றது.    

 நிலத்தை மீறிய பொறுமையோடு சம்பந்தனும் சுமந்திரனும் காத்திருந்த போதும் அரசியல் தீர்வுக்கான கட்டங்களை தென்னிலங்கை அனுமதிக்கவில்லை. 

அவ்வாறான நிலையில், பொறுமையைத் துறந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்து நின்று, ஆக்ரோசமான அரசியலை தென்னிலங்கையோடு ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டும். 

அதுதான், வீழ்ந்துபோன கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் வளர்க்கவும் உதவும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .