2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ராஜபக்ஷக்களை நெருங்கும் சர்வதேசம்

கே. சஞ்சயன்   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது.  

கொழும்பு வந்திருந்த, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை அவரது இல்லத்தில், கடந்த எட்டாம் திகதி சந்தித்த பின்னர்தான், பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை கூறியிருந்தார்.மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை வீடு தேடிச்சென்று சந்தித்தமை, முக்கியமானதொரு விடயமே.  

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவைக் கூடச் சந்திக்காத ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள், பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க விடயம்.  

மீண்டும் ராஜபக்ஷக்களின் பக்கம் காற்று வீசத் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம், அவர்களை நோக்கித் திரும்புகிறதா என்பது, முக்கியமான கேள்வியாக மாறியிருக்கிறது.  

சர்வதேச சமூகத்துடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதில், ராஜபக்ஷக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

கண்டியில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்த போது, அதில் மஹிந்த தரப்பினரின் தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது உடனடியாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.  

அதுபோலவே, சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட செங் ஷுயுவான், அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.  

மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களை, சர்வதேச சமூகம் ஏதோ ஒரு வகையில் அணுக முற்படுகிறது என்பதை, இத்தகைய சந்திப்புகள் உணர்த்தியிருக்கின்றன.  

எனினும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை முற்றுமுழுதாக, சர்வதேச சமூகம் ஓரம்கட்டி வைத்திருந்தது என்று எவராலும் கூற முடியாது.  

ஏனென்றால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு தடவைகள், இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போதும், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.   

அதுபோலவே, சீனாவும் கூட, மஹிந்த ராஜபக்ஷவைத் தனது நண்பனாகத் தொடர்ந்து வைத்திருக்கவே விரும்பியது. சீனாவுக்கு வருமாறு, அதிகாரபூர்வ அழைப்பு விடுத்து, மஹிந்த ராஜபக்ஷவை கௌரவித்திருந்தது.  

மேற்குலக நாடுகளால் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர்களும் ஓரம்கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகள் அவரை முழுமையாக ஒதுக்கி வைத்திருக்கவில்லை. ஏதோ ஒருவகையில், மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த நாடுகள் தொடர்புகளைப் பேணி வந்தன.  

மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கு, அவர் மீண்டும் அதிகாரத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் என்பனவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தியா, சீனா போன்ற நாடுகள், அவரைப் புறக்கணிக்காமல் இருந்திருக்கக் கூடும்.  

இப்போது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவு வாக்குகளைப் பெற்று, தனது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபித்திருக்கிறது. இந்தநிலையில்தான், பசில் ராஜபக்ஷவை ஐ.நாவின் உயர் அதிகாரி சந்தித்திருக்கிறார்.  

தமது பலம் உள்ளூராட்சித் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்தான், சர்வதேச கவனம் தம்மீது திரும்புகிறது என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.   

அவ்வாறாயின், ஐ.நா அதிகாரி ஏன் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்காமல், பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தார் என்ற கேள்வி உள்ளது.  

மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரபூர்வ தலைவராக இல்லை. எனவேதான், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கிறார்.  

ஐ.நாவின் உயர் அதிகாரி என்ற வகையில் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவைச் சந்தித்திருப்பது முக்கியமான விடயமாகவே இருந்தாலும், அந்தத் தருணத்தில் அவரைவிட மூத்த ஐ.நா அதிகாரியும் கொழும்பில் தங்கியிருந்தார். அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட் மன் தலைமையிலான குழுவில் தான், மேரி யமாசிட்டாவும் இடம்பெற்றிருந்தார்.  

கொழும்பில் தங்கியிருந்த போதும், ஐ.நா உதவிச்செயலாளர் ஜெப்ரி பென்ட்மன், பசில் ராஜபக்ஷவையோ, ராஜபக்ஷ சகோதரர்களையோ சந்திக்கவில்லை. எனவே, ராஜபக்ஷக்களுடன் ஒரு தொடர்பை வைத்திருக்க, ஐ.நா அதிகாரிகள் விரும்பினராயினும், அதற்கு உயர் பெறுமானம் கொடுப்பதற்கு, அவர்கள் தயாராக இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவில் இருக்கும் ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில், இதுபோன்ற வெளியுலக நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் முக்கியமானவை.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சியைக் கண்டமைக்கு, சர்வதேச சமூகத்துடன் கடைப்பிடித்த முரண்போக்கு முக்கியமான காரணம். அவரது அரசாங்கம், மேற்குலகத்தையும் இந்தியாவையும் புறக்கணித்துக் கொண்டு, சீனாவின் பக்கம் சாய்ந்திருந்தது. அது மேற்குலகத்தையும் இந்தியாவையும் வெகுவாக அதிருப்தி கொள்ள வைத்தது.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை, அப்போது சீன சார்பு நிலையில், மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அந்த ஒருவழிப்பாதை, பரந்துபட்ட சர்வதேச இராஜதந்திரத்தை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்குத் தடையாக அமைந்தது.  

இப்போது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் ராஜபக்ஷக்களுக்கு, சர்வதேச சமூகத்தின் மதிப்பு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதை அனுசரித்துப் போக வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது.  

இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் ராஜபக்ஷக்கள் இன்னமும் இராஜதந்திரத் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள உயரதிகாரி மேரி யமாசிட்டா, போன்றவர்கள் அவர்களைச் சந்தித்தாலும், மேற்குலகத்தின் கவனத்தை இன்னமும் அவர்களால் ஈர்க்க முடியவில்லை.   

ராஜபக்ஷக்களுடன் உறவுகளைத் பேண, சில சர்வதேச நாடுகள் எடுத்துள்ள முயற்சியை, அந்த நாடுகள் அவர்களை ஆதரிக்க முற்படுவதாக மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள முற்படுகின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  

பொதுவாகவே, இலங்கை போன்ற பூகோள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில், செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைமைகளையும், கட்சிகளையும் தமது பக்கம் அரவணைப்பது சக்திவாய்ந்த நாடுகள் தரப்புகளின் வழக்கமாகும்.  

குறித்த நபரோ, கட்சியோ அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழல் ஒன்று ஏற்படலாம் என்பதால், அவர்களுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்படுவது இயல்பு. மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன், சர்வதேச சமூகம் தொடர்புகளை உருவாக்குவதற்கு இப்போது முற்படுவதன் அடிப்படைக் காரணம் இதுதான்.  

சர்வதேச சமூகத்தின் தொடர்புகளை ராஜபக்ஷக்கள் மீண்டும் பெறத் தொடங்கியிருப்பது, அவர்களுக்குச் சாதகமான சூழல் ஒன்று, வெளியுலகில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்ற கருத்தையே, பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.  

பலம்வாய்ந்த நபராக மஹிந்த ராஜபக்ஷ கருதப்படும் நிலையிலும், அந்தப் பலத்தை தேர்தலில் நிரூபித்துள்ள நிலையிலும், இனிமேலாவது அவருக்கு வேறுவடிவிலான கடிவாளத்தைப் போடுவதற்கு மேற்குலகம் முற்படலாம்.  

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரால் கைகாட்டப்படக் கூடிய அவரது சகோதரர்களோ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்து கொண்டது போன்று, சர்வதேச சமூகத்துடன் முரண்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  

மீண்டும் ஒரு தவறை அவர்கள் செய்ய முனைய மாட்டார்கள். முடிந்தளவுக்குத் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். குறைந்தபட்ச விட்டுக்கொடுப்பு அடிப்படையிலேனும் மேற்குலகத்துடன் உறவுகளைப் பேணிக் கொள்ளலாம். இதை மேற்குலகம் புரிந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  
இந்தநிலையில் இருந்து பார்க்கும்போது, சர்வதேச சமூகத்தின் பார்வைக்குள் மீண்டும் ராஜபக்ஷக்கள் வருவதை, அவர்கள் தமக்குச் சாதகமான விடயமாகக் கருதினாலும், அது இரு முனைகளைக் கொண்ட வாளுக்கு ஒப்பானது.  

ஏனென்றால், சர்வதேச சமூகத்தின் தொடர்புகளின் மூலம், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் பக்கம் திருப்பப்படுவார்கள். அந்தவகையில், இப்போது, ராஜபக்ஷக்களை சர்வதேச சமூகம் தனது பக்கம் திருப்ப முற்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.  

இந்தநிலையில், ராஜபக்ஷக்கள் சர்வதேசத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வார்களா அல்லது ராஜபக்ஷக்களை சர்வதேசம் தனது கைக்குள் போட்டுக்கொள்ளப் போகிறதா? என்ற கேள்வி எழுகிறது.  
இதில் எது நடந்தாலும், அது தமிழ் மக்களுக்குச் சாதகமானதாக இருக்காது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .