2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களின் மரண ஓலம்

மொஹமட் பாதுஷா   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.   

இனரீதியான ஒடுக்குமுறைகளும் இனச்சுத்திகரிப்பும் ‘ரோஹிஞ்சா’க்களைத் தினமும் பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன.   

கட்டமைக்கப்பட்ட இந்த வன்முறைகளால் அவர்கள் படும்பாட்டைக் கண்டு, உலகெங்கிலுமுள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபற்றிய புகைப்படங்கள், பத்திரிகைகளில் பிரசுரிக்கக் முடியாத விதத்தில், இதயம் பலவீனமானவர்களை, மோசமாகப் பாதிக்கக் கூடிய அளவுக்கு, மிகவும் கவலை தருவதாக இருக்கின்றன.   

ஆனால், மியன்மார் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பாங்கும், உலகின் அதிகார மையங்கள் கண்டுகொள்ளாதிருப்பதும், மனிதாபிமானத்தின் மனச்சாட்சியைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்றன.   

அமைதிக்கான நோபல் பரிசு, மனித உரிமைகளுக்கான விருது, ஜவகர்லால்நேரு அமைதி விருது எனப் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற ஆங்சான் சூசியின் தேசத்தில்தான், இஸ்லாத்தைப் பின்பற்றும் ‘ரோஹிஞ்சா’ இனக்குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

அதுவும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக, அந்நாட்டின் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய ஆங்சான் சூகி, அந்நாட்டின் பிரதமருக்குச் சமமான பதவியான ‘ஸ்டேட் கவுன்சிலராக’, ஆட்சியதிகாரத்தோடு இருக்கின்ற நிலையிலேயே, வடமேல் பிராந்தியமான ரெக்கைனில், இந்தக் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.   

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐந்தாவது கட்டமாக இடம்பெறுகின்ற வன்முறைகளால், ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்கள் பெருமளவுக்கு கொல்லப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கம், நூறு பேர் அளவிலேயே உயிரிழந்திருப்பதாக, உத்தியோகபூர்வமாகச் சொன்னாலும், உண்மையில் கடந்த ஐந்து தினங்களில் மாத்திரம், மூவாயிரத்துக்கும் அதிகமானோர், கொடூரமான முறையில் பலியெடுக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமை அமைப்புகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.   

அந்நாட்டின் அரசாங்க படையினால், ரெக்கையின் வாழும் ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்கள் மீது, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால், உயிர்ப்பலிகள் எடுக்கப்பட்டதற்கு மேலதிகமாக, கூட்டு வன்புணர்வு, சிசுக்கொலை, எரியூட்டுதல், சித்திரவதை போன்ற மனிதாபிமானத்துக்கும் மனிதகுல நாகரிகத்துக்கும் எதிரான சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சொல்கின்றனர். அதை நிரூபிக்கும் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமிருக்கின்றன.   

இதனால், சுமார் இரண்டாயிரம் கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு இலட்சம் பேர், சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். 

பல்லாயிரக்கணக்கானோர் அயல் நாடுகளுக்குக் கடல்மார்க்கமாகத் தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரகாலத்துக்குள் மாத்திரம் இவ்வளவும் நடந்தேறியிருக்கின்றது.   

‘உலகின் இரும்புத் திரை’ என வர்ணிக்கப்பட்ட மியன்மாரில் ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை நோக்கி, நன்றாகக் கட்டமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வகையிலான வன்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றமையையும் அதற்கு அரசாங்கப் படைகள் துணை நிற்கின்றமையும் ஆங்சான் சூகியும் அரசாங்கமும் எல்லாவற்றையும் மூடிமறைக்க முனைகின்றமையும் உலகெங்கும் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கின்றது.   

சர்வதேச விதிமுறைகளுக்குப் புறம்பாக, வன்முறைகள் இடம்பெறும் ரெக்கையின் பிராந்தியத்துக்கு மனிதாபிமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுப்பதும், அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கிடைப்பதற்கு தடைவிதித்திருப்பதும் அரசாங்கத்தின் மிகவும் மோசமான அணுகுமுறை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.  

இதை, ‘மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம்’ என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டிருக்கின்றது.  

“பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்று ஐ.நா. செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். மலேஷியா, பங்களாதேஷ், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.   

மியன்மார், தனது கட்டுங்கடங்காத போக்கை, முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள துருக்கிய ஜனாதிபதி, இதைத் தடுத்துநிறுத்த, சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் ஒரு மனிதாபிமானக் குரல் ஒலித்திருக்கின்றது. இருப்பினும், மியன்மார் போலவே பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையும் அரபுநாடுகளும் அயல்நாடுகள் சிலவும் இந்த விடயத்தை இன்னும் உத்தியோகபூர்மவாகக் கண்டிக்கவில்லை.   

மிகக் குறிப்பாக, உலகின் அதிகாரத்தைத் தனது கைகளில் வைத்திருக்கின்ற மேற்குலகம், இன்னும் மியன்மாருக்குக் காட்டமான அறிவித்தல் ஒன்றை வழங்கவில்லை. ஐ.நாவோ, சர்வதேச மனித உரிமை ஆணையகமோ இதற்கெதிராக நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு இன்னும் வரவில்லை.   

ஆனால், மியன்மார் அரசாங்கப் படைகளின் அராஜகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் தாமதித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நொடியும், அங்கு ஒரு வயோதிபரோ, கர்ப்பிணித்தாயோ, சிசுவோ உயிரிழந்து கொண்டே இருக்கின்றது என்பதுதான், நெஞ்சை வருத்தும் செய்தியாகும்.   

முன்னர், பர்மா என்றறியப்பட்ட மியன்மாரில், தேரவாதக் கொள்கையுடைய பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்வதுடன், முதலாவது சிறுபான்மை இனமான கிறிஸ்தவர்களும் இரண்டாவது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.   

முஸ்லிம்களின் விகிதாசாரம் அங்கு குறைவடைந்து வருவதுடன், ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களை அந்நாட்டு அரசாங்கம் கணக்கெடுப்பில் உள்ளடக்கவுமில்லை. அதன்படி, சுமார் 12 இலட்சம் முஸ்லிம்களையே அரசாங்கம் அங்கிகரித்துள்ளது. எது எவ்வாறிருப்பினும், மியன்மாரின் மொத்த சனத்தொகையில், சுமார் நான்கு சதவீதமானோர் முஸ்லிம்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.   

மியன்மாரின் வடமேல் பிராந்தியமான (முன்னர் அராகன் என்று அழைக்கப்பட்ட) ரெக்கையின் பகுதியில், வாழும் ‘ரோஹிஞ்சா’ இனக்குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை இலக்காக வைத்தே, இப்போது இனவழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.   

மற்றைய பிராந்தியங்களில் வாழும் முஸ்லிம்கள், இனவாத நெருக்குவாரங்களை ஓரளவுக்கு எதிர்கொண்டிருந் 

மியன்மாரின் ரங்கூன் உட்பட, பல பகுதிகளில் சீன, இந்திய, மலே மற்றும் கலப்புஇன முஸ்லிம்கள் பல இலட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட முஸ்லிம்களான ‘ரோஹிஞ்சா’க்கள் செறிவாக வாழும் ரெக்கையின் பிராந்தியத்திலேயே, இவ்வாறான படுகொலைகளும் வன்புணர்வுகளும் எரியூட்டல்களும் கழுத்தறுப்புகளும் சிசுக்கொலைகளும் சித்திரவதைகளும் கட்டமைக்கப்பட்ட விதத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.   

வரலாற்றாசிரியர்களின் கருத்தின் பிரகாரம், ரெக்கைன் பிராந்தியத்தில் ‘ரோஹிஞ்சா’ இனக் குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், 15ஆம் நூற்றாண்டிலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.   

மியன்மார் மன்னன் ஒருவர் ரெக்கைன் பிராந்தியத்துக்குப் படையெடுத்து, அதனது கட்டுப்பாட்டை முழுமையாகத் தன்வசம் கொண்டு வந்ததையடுத்து, அங்கிருந்த கணிசமானோர், பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகளுக்கு 10 - 20 வருடங்களாக இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.   

மியன்மார் பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் வந்தபிறகு, 1824ஆம் ஆண்டு, மீண்டும் தமது பூர்வீகத்துக்குத் திரும்பிய ‘ரோஹிஞ்சா’ க்கள், ரெக்கைனில் குடியேறியுள்ளனர்.   

இந்தநிலையில், மியன்மார் அரசாங்கத்துக்கும் ரெக்கைன் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் இருந்துவந்தன. மியன்மார் மத்திய அரசாங்கம், அம்மக்களைத் தாழ்த்தப்பட்ட சாதியாகப் பார்த்தது மட்டுமன்றி, அவர்களை ஒதுக்கியும் வைத்திருந்தது என்பது உலகம் அறியாத விடயமல்ல.   

இந்த நிலையில்தான், ரெக்கைனில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் பிரஜாவுரிமையை மறுதலிக்கும் ஒரு சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் கொண்டுவந்தது.   

1982ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாட்டுரிமைச் சட்டத்தில், ‘ரோஹிஞ்சா’ இனக்குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை, அந்நாட்டுப் பிரஜைகளாக அரசாங்கம் அங்கிகரிக்கவில்லை என்பதுடன், அவர்களைச் ‘சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்து குடியேறியவர்கள்’ என்றும் வரையறை செய்திருந்தது.  

 அதாவது, அவர்கள் பிரஜாவுரிமையை பெறுவது என்றால், அவர்கள், எப்போது கொலனித்துவ காலத்தில் மீள வந்து குடியேறினார்களோ (1824) அதற்கு முன்னைய வருடமான 1823இற்கு முன்னர், அவர்கள் மியன்மாரில் வாழ்ந்ததாக உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.   

இன்னும் சொல்லப்போனால், 1800 வரை சுமார் 300 வருடங்களும் 1824 தொடக்கம் 1982 வரை 158 வருடங்களும் வாழ்ந்த ‘ரோஹிஞ்சா’ இனக்குழுமத்தைச் சேர்ந்த 15 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை, மனிதாபிமானமற்ற முறையில் நாடற்றவர்களாக ஆக்கியிருந்தது மியன்மார் அரசாங்கம். இதுதான் பின்வந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.   

ஒருவேளை, இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததே, ‘ரோஹிஞ்சா’ க்களை அடக்கியாளும் அல்லது அங்கிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்யும் திட்டத்தின் ஒரு கட்டம் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.  

அன்றிலிருந்து, சிறியதும் பெரியதுமாகப் பல கலவரங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அங்கிருக்கின்ற மக்களுக்கு இடையில் சண்டையை மூட்டிவிடுதல், இனவாதிகளை ஏவி விடுதல், அரசாங்கப் படைகளை மக்களுக்கு எதிராக களமிறக்குதல் எனப் பல்வேறு கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.   

குறிப்பாக, அசின் விராது பௌத்த துறவியின் ‘969 அமைப்பு’ போன்ற கடும்போக்கு இயக்கங்கள், முஸ்லிம்கள் என்பதற்காக ‘ரோஹிஞ்சா’ க்களை இலக்குவைத்து செயற்படுவது, அண்மைய வருடங்களாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.  

அந்த வகையிலே, 2012, 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் கலவரங்களும் உள்ளூர் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 2016இல் தொடக்கிவைக்கப்பட்ட இனவழிப்பின் உச்சக்கட்டமாகவே, கடந்த ஒரு வாரமாக ரெக்கைனில் முஸ்லிம்கள் மீது ஈவிரக்கமற்ற படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

எல்லா உயிரினங்கள் மீதும் அன்பையும் பரிவையும் காட்டச் சொன்ன மிகவுன்னத வழிகாட்டியான, புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், மிருகங்களைப் போல மக்கள் அழித்தொழிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.   

மியன்மாரில், கடந்த ஒரு வாரகாலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் மட்டும், இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். உலக நாகரிகத்தையும் அனைத்து மதங்களும் அடிப்படையாகப் போதிக்கும் ஜீவகாருண்யம் மற்றும் மனிதாபிமானத்தையும் கேலிக்குள்ளாக்கும் விதத்தில், கழுத்தறுக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும், கூட்டாக வன்புணரப்பட்டும் ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. காயங்கள், சொத்து இழப்புகள், வீடிழப்புகள், மனநிலை பாதிப்புகள் சொல்லி மாளாதவை.   

‘ரோஹிஞ்சா’ இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்குத் தொடர்ச்சியாகக் கல்வி, திருமணம், மகப்பேறு, தொழில்வாய்ப்பு தொடக்கம் பல்வேறு அடிப்படை உரிமைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மியன்மார் அரசாங்கம் அமுல்படுத்தியது.   

இதனால், ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர், மியன்மாரில் இருந்து அகதிகளாகவும் நாடற்றவர்களாகவும் வெளியேறியுள்ளனர். இவர்களுள் சிலர் அண்டைய நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானோர் கடல்வழிப் பயணத்தில் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஒரு தொகுதியினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.  

‘மெல்ல எரியும் இனவழிப்பு’ எனச் சொல்லப்படுகின்ற இந்த அடக்குமுறையின் காரணமாக, இதுவரை பங்களாதேஷுக்கு ஐந்து இலட்சம், ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களும், பாகிஸ்தானுக்கு மூன்றரை இலட்சம் பேரும், சவூதி அரேபியாவுக்கு இரண்டு இலட்சம் பேரும், இந்தியாவுக்கு 14ஆயிரம் பேரும், ஐ.அ.இராச்சியத்துக்கு 10ஆயிரம் பேரும், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுமார் 6ஆயிரம் பேருமாக பெருமளவானோர் அகதிகளாக, நாடற்றவர்களாக புலம்பெயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகின்றது.   

ஆனால், மியன்மார் அரசாங்கமோ, “அவ்வாறு எதுவும் நடக்கவில்லை” என்றும் “இதுவெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள்” ன்றும் கூறிவருகின்றது. சர்வதேச ஊடகங்கள், மனிதாபிமான பணியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ரெக்கையினுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் புகைப்பட, ஒளிப்படக் காட்சிகள் யாவும், அரசசார்புப் புகைப்படக் காரர்களாலும் களத்தில் உள்ள பொது மக்களாலும் எடுக்கப்பட்டவையன்றி வேறில்லை.  

 எனவே, இந்த ஆதாரங்களையே மிகைப்படுத்தப்பட்டவை என்று அரசாங்கம் கூறுவது, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சி என்பதுடன், இதற்குப் பின்னால் இருக்கின்ற உள்நோக்கமும் புரிகின்றது.   

‘ரோஹிஞ்சா’ இன அடையாளத்தைக் கொண்ட முஸ்லிம்களின் பூர்வீக நிலமான ரெக்கையின் பிராந்தியத்தில், மேற்கொள்ளப்படும் இனத்துவ அடக்குமுறைகள், உலகின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளன.   

இதற்குப் பின்னால், பௌத்த இனவாத சக்திகளும் ஆங்சான் சூகியை உள்ளடக்கிய அரசாங்கமும் பக்கபலமாக செயற்படுவது உலகறிந்த இரகசியமே. எனவே, இதை இப்படியே விட்டுவிட முடியாது.   

மியன்மாரை, இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கும் அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் இராணுவ அணுகுமுறையை கையாள்வது குறித்தும் ஒருசில நாடுகள் மந்திராலோசனைகளை நடாத்தி வருகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், சவூதி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இலட்சக்கணக்கான ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள போதும், மேலும் இலட்சக்கணக்கானோரை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், இன்னும் எந்த நாடும் ‘ரோஹிஞ்சா’ மக்களுக்கு கதவடைப்பு செய்யவில்லை.   

இருப்பினும், மிருகங்களின் உரிமைகள், உயிர்கள் மீதான அன்பு என்றும், ஜனநாயகம், மனித உரிமை என்றும் சொல்லி, மூன்றாம் உலக நாடுகளுக்கு பாடம்நடாத்தும் மேற்குலகின் காதுகளுக்கு மியன்மார் முஸ்லிம்களின் மரண ஓலம் இன்னும் கேட்கவில்லை.   

ஈரான், ஈராக், லிபியா, சிரியா, பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் பலியெடுக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத மேற்குலகின் மனங்களில், மியன்மார் இனவழிப்பாவது ஈரத்தை கசியச் செய்யவில்லை.   

மிக முக்கியமாக, பெரிய ஜாம்பவான்கள் போலவும், முஸ்லிம்களின் காவலர்கள் போலவும் காட்டிக் கொள்ளும் அரபுநாடுகள் இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை மிக மோசமான நிலைமையாகும்.   

சர்வதேச மனித உரிமைசார் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி, உலகளாவிய ரீதியில் பிராஜாவுரிமை மறுக்கப்பட்ட அதிக மக்கள் தொகையைக் கொண்ட இனக் குழுமமாகவும், உலகிலேயே மிகவும் அதிகமாக துன்பப்படும் அப்பாவி மக்களாகவும் ‘‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களே இருக்கின்றனர்.   

எனவே, அவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது, கடவுளை நம்புகின்ற, மனிதாபிமானமுள்ள, ஆறறிவு உள்ள ஒவ்வொரு தனிமனிதனதும் தார்மீக பொறுப்பாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X