2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.   

இந்தச் சண்டைத் தொடரின் புதிய கட்டமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபையின் போக்குவரத்து அமைச்சராக இருந்து, ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட ப. டெனீஸ்வரன், தமது பதவி நீக்கத்தை எதிர்த்து, முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகச் செய்தி வௌியாகியிருந்தது.  

ஓகஸ்ட் மாதம் நடுப் பகுதி முழுவதிலும், டெனீஸ்வரனுக்கும் அவரது கட்சியான ‘டெலோ’ என்றழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சண்டை, தமிழ் ஊடகங்களின் பிரதான செய்திகளில் ஒன்றாகக் காணப்பட்டது.   

அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது, ‘புளோட்’ என்றழைக்கப்படும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில், 
கு. சிவநேசன் நியமிக்கப்படும் போது, அதுவும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  

அத்தோடு, ‘தராக்கி’ என்ற புனைபெயரில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பத்திகளை எழுதி வந்த, மூத்த ஊடகவியலாளரும் புலிகளின் ‘தமிழ்நெற்’ இணையத்தளத்தின் ஆசிரியராகவும் இருந்த டி.சிவராமின் படுகொலை தொடர்பாக மற்றொரு சர்ச்சை எழுந்தது.   

இவ்வாறு, மாகாண சபையின் நிர்வாகம், புதுப் புது சர்ச்சைகளைத் தேடிச் சென்று, அவற்றிலேயே காலத்தை கழிப்பதாகவே தெரிகிறது.  

மாகாண சபையில், அண்மைக் காலமாக ஏற்பட்ட அனைத்து சர்ச்சைகளும் பதவிச் சண்டைகளாகவே வகைப்படுத்தலாம். முதலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாக அச்சண்டைகள் ஆரம்பமாகின.   

கடந்த, ஓரிரு மாதங்களாக ஏற்பட்டு வரும் சண்டைகள், அந்த அதிகாரப் போட்டியோடு, முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைகளும் கலந்து எழும் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.   

மாகாண சபையின் அமைச்சர்களுக்கு, எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, கடந்த வருடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவொன்றை நியமித்ததை அடுத்தே, அண்மைக் கால சண்டைகளில், ஏறத்தாழ அனைத்தும் உருவாகின.  

அந்தக் குழுவின் நியமனமும் சர்ச்சைக்குரியதாக அமையவிருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அதை ஆரம்பித்து வைக்காததால் அந்தச் சர்ச்சை, ஆரம்பத்திலேயே தலையைக் காட்டவிலலை.   

அதாவது, ஆரம்பத்தில் முதலமைச்சருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவருக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவரைப் பாதுகாப்பதற்காக, முதலமைச்சர் தாம் தவிர்ந்த மாகாண சபையின் ஏனைய நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவை நியமித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.   

இந்த விடயம், இக் குழு நியமிக்கப்பட்ட கடந்த வருடமே, அக்கட்சி முன்வைத்திருந்தால் கடந்த வருடமே வட மாகாண ஊழல் ஒழிப்பு, பெரும் பிரச்சினையாகியிருக்கும்.   

தமது அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, எந்தவோர் அரசாங்கத் தலைவரும் எந்தவொரு முதலமைச்சரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அவ்வாறான நிலையிலேயே விக்னேஸ்வரன் இந்தக் குழுவை நியமித்தார்.   

அதை, தென் பகுதியில் சில சிங்கள ஊடகங்களும் பாராட்டின. அதில் உள்நோக்கம் ஏதும் இல்லாவிட்டால், உண்மையிலேயே அதை மிக உயரிய பண்பாகவே கருத வேண்டும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது, அதன் நோக்கத்தைப் பற்றியும் சில சந்தேகங்கள் உருவாகின்றன.  

விசாரணைக் குழுவின் உறுப்பினர்களின் தகைமைகளைப் பற்றி எவருமே கேள்வி எழுப்பவில்லை. அதன் நடவடிக்கைகளைப் பற்றியும் எவ்வித முறைப்பாடும் இல்லை. அதன் அறிக்கையைப் பற்றி, அவ்வறிக்கையின் மூலம் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரு அமைச்சர்களாவது குறை கூறவில்லை.   

ஆனால், அக்குழு, தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததை அடுத்து, முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளே தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.  

மாகாண சபைச் சட்டத்தின் படி, மாகாண சபையொன்றில் முதலமைச்சர் உட்பட, ஐந்து அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும். தம்மைத் தவிர்ந்த ஏனைய நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை செய்வதற்காகவே முதலமைச்சரினால் கடந்த வருடம் இக்குழு நியமிக்கப்பட்டது.   

கடந்த வருடம், சபையின் 16 உறுப்பினர்கள் செய்த முறைப்பாடுகளை அடுத்தே, தாம் இந்த விசாரணைக் குழுவை நியமித்ததாக முதலமைச்சர், கடந்ந ஜூலை மாதம் தெரிவித்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ். தியாகேந்திரன் மற்றும் எஸ். பரமராஜா மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் எஸ். பத்மநாதன் ஆகியோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைந்தது.  

இந்த விசாரணையின் அறிக்கை, கடந்த ஜூன் மாதம், முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் அதைச் சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னரே, மாகாண சபையில் சமர்ப்பித்தார். அந்த விசாரணையின் போது, இரண்டு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இதனால் விசாரணைக் குழு நியமித்ததன் நோக்கத்தைப் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சந்தேகம் கொண்ட போதிலும், அக்குழு சுயாதீனமாகச் செயற்பட்டுள்ளது என்றே தெரிகிறது.  

கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரி. குருகுலராஜா மற்றும் விவசாய, கமநலச் சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் வழங்கல், உணவு வழங்கல் மற்றும் உணவு விநியோக அமைச்சராக இருந்த பி. ஐங்கரநேசன் ஆகியோரே குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள். அவர்கள் முதலமைச்சரின் ஆலோசனைப்படி, தமது பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.  
ஆனால், குற்றவாளிகளாகக் காணப்படாத மாகாணப் போக்குவரத்து அமைச்சர் 
பி. டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் பி. சத்தியலிங்கம் ஆகிய இருவரும் மற்ற இருவரோடு பதவி விலக வேண்டும் என, முதலமைச்சர் கூறினார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களும் எதிர்க்கவே குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்கள் மீது, மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் அதற்கு இடமளிக்கும் வகையில் அவ்விருவரும் ஒரு மாத காலம், விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

இது மற்றொரு சர்ச்சையை உருவாக்கியது. இந்த விடயத்தில் மாகாண சபையின் ஆளும் கட்சியான கூட்டமைப்பு, இரண்டாகப் பிரிந்துவிட்டது. அக்கூட்டணியில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், எதிர்க் கட்சியினருடன் சேர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளித்தனர். அத்தோடு குற்றம் நிரூபிக்கப்பட்டாத உறுப்பினர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற தமது கருத்தை, முதலமைச்சர் கைவிட்டார்.  

ஆயினும் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள் மீது மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அது தொடர்ச்சியாகச் சர்ச்சையாகவே இருந்தது.   

இதற்கிடையே குற்றவாளிகளாகக் காணப்பட்டு பதவி விலகிய இரு அமைச்சர்களுக்குப் பதிலாக, புதிய அமைச்சர்கள் நியமிக்க வேண்டியேற்பட்டது. அதிலும் சர்ச்சைகள் இல்லாமல் எதையும் செய்ய முதலமைச்சர் தயாராக இருக்கவில்லை. ஓர் அமைச்சர் பதவிக்கு, முதலமைச்சர், புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரனை நியமிக்கப் போவதாகச் செய்தியில் அடிபடவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அனந்தியின் கட்சியான தமிழரசுக் கட்சியினரும் அதனை எதிர்த்தனர்.   

அனந்தி, கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பதே அதற்குக் காரணமாக கூறப்பட்டது. ஆனால், அந்த விடயத்திலும் கூட்டமைப்பின் தலைமையை சீண்டவே முதலமைச்சர் விரும்பினார். அவர் அனந்தியை அமைச்சராக நியமித்தார்.  

பதவி விலகிய மற்றைய அமைச்சருக்குப் பதிலாக முதலமைச்சர், கந்தையா சர்வேஸ்வரனை நியமித்தார். அது சர்ச்சையாக மாறவில்லை. கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமிப்பது பிரச்சினையாகும் என்று நினைத்தாரோ என்னவோ பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தப் புதிய இரண்டு நியமனங்களும் தற்காலிகமானவை எனஅறிவித்தார். ஆனால், ஏன் தற்காலிகமாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதை அவர் கூறவில்லை.  

அமைச்சுப் பதவி வெற்றிடங்களை நிரப்ப முன், அமைச்சர் பதவிகளைப் பெற விரும்புவோரிடம் முதலமைச்சர் சுயமதிப்பீடுகளைக் கோரியிருந்தார். அதன் படி புளோட் அமைப்பின் க. சிவநேசனும் சுயமதிப்பீடோன்றை அனுப்பியிருந்தார். ஆனால், சிவராம் கொலையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறி, முதலமைச்சர் அதனை நிராகரித்தார். தாம் ஒருபோதும் சிவராம் படுகொலை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்படவில்லை எனக்கூறிய சிவநேசன், முதலமைச்சருக்கு நீண்டதொரு பதிலை அனுப்பியிருந்தார். முதலமைச்சரின் இந்தக் கடிதம், மற்றொரு சர்ச்சைக்கு வழி வகுத்தது.   

முதலமைச்சருடனான மோதலின் காரணமாக கூட்டமைப்பில் எவரும் இனி மாகாண சபையில் அமைச்சு பதவி வகிப்பதில்லை என கூட்டமைப்பு அறிவித்தது. அதனை அடுத்து டொக்டர் சத்தியலிங்கம் தமது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அவரும் விசாரணைக் குழுவினால் குற்றவாளியல்ல என்று நிரூபிக்கப்பட்டவர்.   

இதற்கிடையே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் டெலோவின்  அனுமதியின்றி கையெழுத்திட்டமைக்காக அக்கட்சி தமது பிரதிநிதியாக மாகாண சபையின் அமைச்சராக இருக்கும் டெனீஸ்வரனிடம் விளக்கம் கோரியது. அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எனவே ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி, வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் உயர் மட்டக் கூட்டமொன்றின் போது, டெனீஸ்வரனை ஆறு மாதங்களுக்கு அக்கட்சியிலிருந்து இடை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் டெனீஸ்வரனுக்கும் அறிவிக்கப்பட்டது.  

அவர் அந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை. தாம் ஒருபோதும் டெலோவின் அங்கத்தவராக இருக்காதபோது, அக்கட்சி எவ்வாறு தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் 20 கூட்டங்களுக்கு தாம் சமுகமளிக்கவில்லை என்றும் ஒருவர் ஒரு சபையின் மூன்று கூட்டங்களுக்கு சமுகமளிக்காவிட்டாலேயே அவரை நீக்குவது வழமையாக இருந்தும் தம்மை ஏன் அவ்வாறு நீக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  

ஆனால், அவரது வாதங்கள் எடுபடவில்லை. டெலோ தமது முடிவை முதலமைச்சருக்கு அறிவித்தது. ஏற்கெனவே டெனீஸ்வரன் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்த முதலமைச்சர் அவரைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.   

அதன்படி விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் விலக்கப்பட்ட பின், மாகாண அமைச்சரவையில் அனந்தியும் சர்வேஸ்வரனும் மட்டுமே எஞ்சியிருந்தனர். டெனீஸ்வரனுக்குப் பதிலாக கே. விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு டெலோ, முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டது. ஆனால், அவர் அந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, அக்கட்சியைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனை சுகாதார அமைச்சராக நியமித்தார்.   

ஆனால் பின்னர், மன்னாரைச் சேர்ந்த குணசீலனை அமைச்சராக நியமித்ததை, டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வரவேற்று இருந்தார். இல்லாவிட்டால் விக்னேஸ்வரன் அதிலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியிருப்பார்.   

மேலும், ஓர் அமைச்சர் பதவி வெற்றிடமாக இருந்தது. அதற்கு விக்னேஸ்வரன், சிவராம் கொலையோடு தொடர்புடையவர் எனக் கூறித் தாமே முன்னர் நிராகரித்த, புளொட் அமைப்பின் சிவநேசனை நியமித்தார். முன்னர் நிராகரித்தவரை பின்னர் அமைச்சராக நியமித்தமைக்கு முதலமைச்சர் காரணங்களைக் கூறினார்.  

சிவநேசனுக்கு ‘தூள் பவன்’ என மற்றொரு பெயர் இருக்கிறது. அவரது கட்சியான புளொட் அமைப்பில் மற்றொரு பவனும் இருந்தார். அவரது இயற்பெயர் செல்வராசா. அவரை ‘ஊத்தை பவன்’ என்பார்கள். அவர் 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கொல்லப்பட்டார். எனவே, சிவராம் படுகொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் ‘தூள் பவன்’ அல்ல, ஊத்தைப் பவனே என்றும் அதனாலேயேதாம் ‘தூள் பவன்’ என்னும் சிவநேசனை அமைச்சராக நியமித்ததாகவும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான முதலமைச்சர் கூறினார்.   

முன்னர் சிவநேசனைச் சந்தேகிக்கத் தமக்கு என்ன ஆதாரம் இருந்தது என்று அவர் அப்போது கூறவில்லை. இப்போது செல்வராசாவை சந்தேகிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என செல்வராசாவின் மனைவி எஸ். யோகராணி முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அதற்கு பதிலளிக்கவில்லை.மாறாக இருவரும் ‘பவன்’ என்பதால் குழப்பம் ஏற்பட்டதாகவே அவர் காட்டிக் கொள்கிறார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இவ்வாறு வாதிடலாமா என்ற கேள்வி இங்கே எழுகிறது.  

மாகாண அமைச்சரவையை நியமிப்பதில் விக்னேஸ்வரன் ஆரம்பத்திலிருந்தே ஆளும் கட்சியில் ஒவ்வொரு கட்சியாகச் சீண்டிக் கொண்டே வந்துள்ளார். ஆரம்பத்தில் 
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி ஒருவரைப் பிரேரிக்க, அவர் பி. ஐங்கரநேசனை அமைச்சராக நியமித்தார். அடுத்த அமைச்சரவை மாற்றம் கடந்த ஜூலை மாதத்தில் இடம்பெற்ற போது, தமிழரசுக் கட்சியின் விருப்பததுக்கு மாறாக அனந்தியை நியமித்தார். பின்னர், கடந்த மாதம் டெலோ கட்சி, விந்தனைப் பிரேரிக்க, அவர் குணசீலனை நியமித்தார். புளொட்டின் சிவநேசனை நியமிப்பதில்லை எனக் கூறி, பின்னர் அவரை நியமித்தார்.  

அவருடைய சில முடிவுகளும் வித்தியாசமானவையாகவே உள்ளன. இரண்டு அமைச்சர்கள் விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டபோது, அவர் மற்ற இருவரையும் இராஜினாமா செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

அதற்குத் தமிழரசுக் கட்சி, எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர் குற்றவாளிகளாக காணப்படாத அவ்விருவருக்கு விடுமுறையில் செல்லுமாறு கூறினார். அவர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடத்தவும் முற்பட்டார். அதனை அடுத்து தமிழரசுக் கட்சியின் ஆலோசனையைப் புறக்கணித்து, அக்கட்சியினால் இடைநிறுத்தப்பட்டு இருக்கும் அனந்தியை அமைச்சராக நிமித்தார். 

 

அவரை தற்காலிகமாகவே நியமித்துள்ளதாக கூறிய முதலமைச்சர், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது, அவருக்கு மேலதிக பொறுப்புகளையும் வழங்கினார். ஆதாரங்களைக் காட்டாது சிவநேசனை, சிவராம் படுகொலையுடன் சம்பந்தப்படுத்திக் கடிதம் எழுதினார். பின்னர் அதேபோல் ஆதாரம் காட்டாது, அதே கொலைக்கு, செல்வராசா  தான் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனக் கூறினார்.   

இருந்த போதிலும் அவரைப் போன்ற ஆளுமையுள்ள, வெளிநாட்டுத் தலைவர்களுடனும் தெற்கில் தலைவர்களுடனும் சம நிலையில் கலந்துரையாடக் கூடிய அறிவும் மொழி ஆற்றலும் உள்ள முதலமைச்சர் ஒருவரை வடக்கிலிருந்து கண்டுபிடிப்பது கடினம். 

அதேபோல், வடக்கில் ஏனைய பல தலைவர்களும் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர்கள். போர்க் கால அரசியல் நெருக்கடிகளுக்கும் தாக்குப் பிடித்து தொடர்ந்தும் அரசியலில் நிலைத்து நின்றவர்கள். அவ்வாறிருந்தும் மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கிலும் அதிகாரப் போட்டி முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X