2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடகொரிய - ஐ.அமெரிக்கப் பேச்சுவார்த்தை: நிழல் யுத்தமொன்று

Editorial   / 2018 மே 21 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறக்கூடும் என வடகொரியா அச்சுறுத்தும் போதிலும், ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார்த்தை, வரலாறு காணாத முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

ஜனாதிபதி ட்ரம்பின் ‘கடுமையான கொள்கைக்கு’ கிடைத்த வெற்றி என தென்கொரியா இதைக் கருதும் போதிலும், இந்நிலையானது பலமட்ட சர்வதேச அரசியல் நிலைகளினாலேயே சாத்தியமானது எனலாம். ஐ.அமெரிக்க - வடகொரியா மோதலானது, 25 வருட வரலாற்றைக் கொண்டிருந்ததுடன், இது ஐ.அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதிகளான ஜிம்மி காட்டர், பில் கிளின்டன் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஈடுபட ஐ.அமெரிக்க ஜனாதிபதிகளால் முயலப்பட்டிருந்த போதிலும், அக்காலகட்டத்தில் இவ்வாறான சமாதானத்துக்கான நிலைமையொன்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அமைந்திருக்கவில்லை.  ஆயினும், இவ்வாறான சமாதானப் பேச்சுக்குக் காரணிகளாக, தென்கொரியா மீதான யுத்தப்போக்கை வடகொரியா கைவிட்டமை, வடகொரியா - தென்கொரியா இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றமை, வடகொரியா அணுவாயுதப் பரிசோதனைகளைக் கைவிடச் சம்மதித்தமை, வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை சமாதான உறவுகளை வலுப்படுத்த ஐ.அமெரிக்கா பயன்படுத்தியிருந்தமை என, பல விடயங்கள் கூறப்பட்டாலும், முதன்மையான காரணமாக இருப்பது, ஈரான் தான்.

வட கொரியாவுடன் ஈரான், நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. ஈரானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்புப்படி, ஈரானின் மக்கள், ஐ.அமெரிக்காவை பொருளாதார, இராணுவ, அரசியல் என பல மட்டங்களில் வெளிப்படையாக  ஓர் எதிரியாகவே  பார்க்கிறார்கள். குறித்த கருத்துக்கணிப்பின் பிரகாரம், ஈரானியர்கள், குறிப்பாக இராணுவ வல்லுருவாக்கம், சர்வதேச அரசியல், அணு  சார்ந்த பரிசோதனைகளும் அது தொடர்பான நிலைப்பாடுகள், மத சம்பந்தமான உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கொள்கை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், தங்கள் சொந்த அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளை ஆதரிக்கின்றனர். அவர்கள், ஒரு சராசரி ஈரானிய குடிமகனாக வாழ்வதற்கு, பொருளாதார ரீதியாக சிறந்த வாழ்க்கைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர் என, கருத்துக்கணிப்பு விளக்குகின்றது. இதன் ஓர் எதிர்பார்ப்பாகவே ஈரானியர்கள், கடந்த 25 வருட கால அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் மக்களின் தேர்தல் புள்ளடிகளும் பயன்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஈரானியர்கள், மேலும் மக்கள் அரசாங்கத்தில் அதிக சீர்திருத்தங்களையும் மக்கள் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

ஐ.அமெரிக்க - ஈரான் உறவைப் பொறுத்தவரை, ஈரானியர்கள் ஜூலை 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே விரும்புகின்றனர். அவர்கள் இது தொடர்பில் ஐரோப்பாவை நம்பும் அளவுக்கு, ஐ.அமெரிக்காவை நம்பவில்லை. ஐ.அமெரிக்கா (அண்மையில் ஐ.அமெரிக்க ஜனாதிபதி ஒப்பந்தத்திலிருந்து விலகியது போலவே) குறித்த ஒப்பந்தத்தைப் பின்பற்றாது என்றே ஈரானியர்கள் நம்புகின்றனர். ஈரானியர்கள், சீனா மீதும் ரஷ்யா மீதும் நம்பிக்கையான கருத்துகளைக் கொண்டுள்ளதுடன், இஸ்லாமிய உலகில் - குறிப்பாக மத்திய கிழக்கில், தமது செல்வாக்குச் சரிவதை விரும்பவில்லை.

இவ்விம்பத்தின் அடிப்படையிலேயே ஐ.அமெரிக்கா, ஈரானுடன் போர் அல்லாத பகை நிலையைப் பேண எத்தனிக்கிறது. அதற்கு வடகொரிய சமாதான ஒப்பந்தம் மற்றும் வடகொரிய - ஐ.அமெரிக்க அதிபர்கள் இடையிலான சந்திப்பை பயன்படுத்தவே ஐ.அமெரிக்கா விரும்புகின்றது. எது எவ்வாறிருந்தபோதிலும், ஐ.அமெரிக்க ஈரான் உறவில் விரிசல் நிலையை ஏற்படுத்திய அண்மைக்கால நிலைமைகளில் ஐ.அமெரிக்கா குறித்த அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியமை மற்றும் ஈரானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவந்தமை பார்க்கப்பட வேண்டியதாயினும், போரல்லாத பகை நிலைமையைப் பேணுதல், ஐ.அமெரிக்காவுக்கு இஸ்‌ரேல் மற்றும் சவூதியின் நீண்டகால உறவை பலப்படுத்த, மற்றும் தனது செல்வாக்கை குறித்த பிராந்தியத்தில் கொண்டிருக்க அவசியமானது.

மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கானது அதிகமானதாகும். சிரியாவில் அசாட் அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக உதவும் நாடுகள் பட்டியலில் ஈரான் உள்ளத்துடன், சிரியாவில் நேரடியாகவே தனது துருப்புகளை நிறுத்தியுள்ள நாடுகள், ஈரானும் ரஷ்யாவும் ஆகும். இது இஸ்‌ரேலின் நீண்ட கால பாதுகாப்புக்குக் குந்தகமான நிலையே ஆகும். மேலும், குறித்த பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் இயக்கங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈரான் வழங்கிவரும் ஆதரவானது, காஸா பகுதியில் இஸ்‌ரேலிய இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவும் லெபனானை ஆதாரமாகக் கொண்டு, வடக்கு இஸ்‌ரேலின் எல்லைகளைக் குறிவைக்கவும் ஹிஸ்புல்லா ஊடாக ஈரான் எத்தனிக்கிறது என்பது, இஸ்‌ரேலின் கருதுகோளாகும். இக்கருதுகோள், உண்மைக்குப் புறம்பானதும் அல்ல. ஐ.அமெரிக்க - ரஷ்ய வல்லரசு மோதலில், ஈரான் தொடர்ச்சியாகவே இஸ்‌ரேலுக்கு ஆபத்தான நாடாக இருப்பதும், சிரியாவில் ஐ.அமெரிக்காவின் வெற்றியை தடுப்பதும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் இராஜதந்திர, இராணுவ உறவைப் வலுப்படுத்துகிறது. இது ஐ.அமெரிக்கா, இஸ்‌ரேல் ஆகியன ஒருபோதும் எதிர்பார்த்திராத நகர்வாகும். இதனைச் சமன்செய்யவே ஐ.அமெரிக்கா, சவூதியையும் இஸ்‌ரேலையும், அவற்றின் அடிப்படை வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும், நட்பு நாடுகளாக்க முனைந்திருந்தது.

துருக்கி, யேமன் ஆகிய நாடுகள், சீனாவினதும் ரஷ்யாவினதும் உதவிகளைப் பெறமுனையும் இவ்வேளையில், ஐ.அமெரிக்காவுக்கு, தனது செல்வாக்கை போரியல் மூலமாக வலுப்பெற வைப்பது என்பது, குறுகிய காலத்துக்கான ஒரு வெற்றியல்ல. அதனை அடையும் முகமாகவே, வடகொரியா மீதான நட்பு நகர்வை ஐ.அமெரிக்கா அண்மையில் மேற்கொண்டிருந்தது. எது எவ்வாறிருப்பினும், வடகொரியாவின் ஐ.அமெரிக்காவின் செல்வாக்கு, ஒருபோதும் முதன்மை பெறப்போவதில்லை. மாறாக, தொடர்ச்சியாகவே சீனாவின் ஆதிக்கமே தொடரப்போவதும் ஐ.அமெரிக்காவுக்கு தெரியாத விடயம் அல்ல. இந்நிலையிலேயே ஈரானின் அணுவாயுத வல்லமையைத் தனிமைப்படுத்தி, தீவிரவாத போக்கொன்றுடன் சித்தரிப்பதன் மூலமாக மலிவானதொரு வெற்றியை (cheap victory) தனதாக்கவே, ஐ.அமெரிக்கா முனைகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .