2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும்

Ahilan Kadirgamar   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகப்பு குறிப்புகள்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்‌ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கமாக, வட மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல்கள், எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் காட்டி நிற்கிறது. தமிழ்த் தேசியவாதத்தின் கவலை தரக்கூடிய புதிய முகம் பற்றியும் வடக்கு தமிழ் அரசியலில் காணப்படும் சில முன்னேற்றகரமான சமிக்ஞைகள் பற்றியும், இக்கட்டுரை கவனஞ்செலுத்துகிறது.

பிரசாரங்கள்

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களோடும் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய ரீதியான இரண்டு தேர்தல்களோடும் ஒப்பிடும் போது, வடக்கில் இம்முறை தேர்தல்களுக்கான பிரசாரங்கள், ஒப்பீட்டளவில் குறைவானதாகவே காணப்பட்டன. வட்டார முறையிலான தேர்தலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடும், அதிகமானோரைப் போட்டியிடத் தூண்டியது. ஆனால், பல வேட்பாளர்கள், குறித்ததொரு கட்சியில் போட்டியிட்டால் தமது வெற்றிவாய்ப்புகள் எவ்வாறு எனக் கணித்தனரே தவிர, கட்சியின் கொள்கைகள் தொடர்பாகவோ நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவோ ஆராயவில்லை.

ஆனால், அரசியல் இயக்கமின்றி குறிப்பாக, பெண்களுக்கான அரசியல் கட்சிகளில் இல்லாமை பல்வேறான பிரச்சினைகளும் வேட்பாளர்களும், முன்னிலைக்கு வரவில்லை. ஒருசில கட்சிகள் மாத்திரம், சாதியத்துக்கு எதிரான அரசியலை மேற்கொண்டன.

போருக்குப் பின்னரான ஏனைய தேர்தல்களைப் போலன்றி, வீட்டுக்கு வீடு சென்று மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் கணிசமானளவு இருந்த போதிலும், ஒட்டுமொத்தமான தேர்தல் பிரசாரம், எதிர்பார்க்கப்பட்டளவு உற்சாகத்தையோ அல்லது சனத்திரளையோ ஈர்த்திருக்கவில்லை. போட்டியிடும் கட்சிகளின் ஊடகப் பிரசாரங்கள், சேறு பூசுவதிலும் தனது பிரதான எதிரி அல்லது போட்டியாளர் என்று கருதப்பட்ட கட்சியைத் தரமிறக்குவதிலுமே அதிக கவனத்தைச் செலுத்தியிருந்தன.

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, அரசியல் தீர்வின் அம்சங்கள், ஊழல் ஆகியன, தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான தலைப்புகளாக இருந்தன. உள்ளூர்ப் பொருளாதாரம், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற  நிர்வாகப் பிரச்சினைகள் ஆகியன பற்றிக் கவனஞ்செலுத்தப்  -பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சூடுபிடித்த அரசியல் பிரசாரங்கள், முன்னைய சமஷ்டிக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்க் காங்கிரஸின் சின்னமான சைக்கிளில் போட்டியிட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில், தமிழ்த் தேசியவாதத்தின் உரித்தைக் கோருவதற்கான போட்டியாக மாறின. இப்பிரசாரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அவர்களது அரசியலினதும் வாரிசுகள் யார் என்ற போட்டியைக் கொண்டனவாக மாறியிருந்தன.

பெற்ற வாக்குகள்

இந்தச் சூழலில், யாழ்ப்பாணத்திலும், பொதுவாக வட மாகாணத்திலும், தமிழ் வாக்குகள் எவ்வாறு அமைந்தன? 

வட மாகாணத்தில் பெரும்பான்மையானோர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் சரிவடைந்து, 35 சதவீதமான வாக்குகளை மாத்திரமே, அக்கூட்டமைப்புப் பெற்றது. மறுபக்கமாக, கணிசமானளவு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 21 சதவீதமான வாக்குகளைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்களின் வாக்குகளைக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்தி, 19 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

தமிழ் மாவட்டங்களாகக் கருதப்படும் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முறையே 47 சதவீத, 42 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவ்விரு மாவட்டங்களிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.டி.பியும், 5 சதவீதமான வாக்குகளையே பெற்றன. ஆனால், ஈ.பி.டி.பியிலிருந்து ஓராண்டுக்கு முன்னர் பிரிவடைந்த சந்திரகுமார், சுயேட்சைக் குழுக்களில் முன்னிலை வகித்து, கிளிநொச்சியில் 30 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.


கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என, பல் மத அடையாளங்களைக் கொண்ட மன்னாரிலும், சிங்கள மக்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழும் வவுனியாவிலும், முடிவுகள் சிறிது வேறுபாடானவையாக அமைந்தன. அவ்விரு மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முறையே 28 சதவீத, 26 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன உள்ளடங்கிய தேசியக் கட்சிகள், இம்மாவட்டங்களில் கணிசமானளவு முன்னேற்றத்தையடைந்து, கிட்டத்தட்ட 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டன. இத்தேசியக் கட்சிகள், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் முறையே 10, 15, 30 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டன.

அரசியல் விளைவுகள்

தேர்தல் முடிவுகள், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில், இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. 
வடக்கின் தேர்தல் முடிவுகளிலிருந்து, பின்வரும் விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வீழ்ச்சிப் பாதையில் காணப்படுகிறது. இவ்வீழ்ச்சி, வாக்குகள் அடிப்படையிலும் தேர்தல் பிரசாரங்களுக்கான உற்சாகத்தின் அடிப்படையிலும் காணப்படுகிறது. சமஷ்டிக் கட்சியின் விசுவாசிகளான மூத்த தலைமுறையினரால், அது தொடர்ந்தும் வழிநடத்தப்பட்டு வருகிறது.

அவர்களிடத்தில், சுறுசுறுப்புக் காணப்படவில்லை. வடக்கிலுள்ள தமிழ் மக்கள், தங்களுக்கே எப்போதும் வாக்களிப்பர் என்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கை, அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, துடிப்பான, இளைய அங்கத்தவர்களைச் சேர்த்துள்ளது. அவர்கள், நச்சான தமிழ்த் தேசியவாத அரசியலுடன், இயங்கவிடப்பட்டிருக்கின்றனர். நகரமயமாக்கப்பட்ட தொழில்வாண்மை மிக்க தமது தளத்திலும், புலம்பெயர் தமிழ் மக்களில் கடும்போக்குவாதிகளின் ஆதரவிலும், அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றனர். பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய நகர சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகொண்டுள்ளது. இனவழிப்பு உள்ளிட்ட கலந்துரையாடல்கள் மூலமாக, கடும்போக்குத் தேசியவாத அரசியலுக்கான நிகழ்ச்சிநிரலை அவர்கள் உருவாக்குகின்றனர். 

ஆனால், போரின் இறுதிக் காலத்தில், துயரந்தரும் முடிவைச் சந்தித்த வன்னி மக்களிடத்தில், அவர்களுக்கான வாக்கு வங்கி காணப்படவில்லை. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்துள்ள கிராமப்புற மக்களை, அம்முன்னணி சென்றடையுமாயின், தமிழ் அரசியலில் ஆபத்தான மாற்றமாக அது அமையும்.

தமிழ் அரசியலில், முக்கியமான ஓர் அங்கத்தவராக, ஈ.பி.டி.பி தொடர்ந்தும் நிலைத்துள்ளது. தனது தேர்தல் அரசியலுக்காக, அரச பதவிகளில் தங்கியுள்ளது என்ற மாயையை, அது உடைத்தெறிந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வாக்கு வங்கியொன்றை அது கொண்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளில் அது கணிசமானளவு வெற்றிபெற்றுள்ளது.

சாதியத்துக்கு எதிரான அரசியல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பல சுயேட்சைக் குழுக்கள், சிறப்பாகச் செயற்பட்டுள்ளன. காரைநகரில், ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்களின் சமூக அபிவிருத்திக்காகச் செயற்படும் சுயேட்சைக் குழுவொன்று, ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணையாக, 3 ஆசனங்களை அக்குழு வென்றுள்ளது. மயானங்களுக்கு எதிராக, சக்திமிகு சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்ற புத்தூரில், புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிசக் கட்சியால் ஆதரவளிக்கப்படும் இடதுசாரிகள், நான்கு ஆசனங்களை வென்றுள்ளனர். 

சாவகச்சேரியில், ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவிலிருந்து வெளியேறி புதிதாக உருவாக்கப்பட்ட, தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி, 2 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. கிளிநொச்சியில், சந்திரகுமாரால் தலைமை தாங்கப்படும் முற்போக்கான சுயேட்சைக் குழுக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதான சவாலாக அமைந்ததோடு, 19 ஆசனங்களை வென்றுள்ளன. நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வசிக்கும் தமிழ்ச் சமூகமும், சந்திரகுமாரின் ஆதரவுத் தளத்தில்  உள்ளடங்குகிறது.

உள்ளூரிலிருந்து பிராந்தியத்துக்கு

தேசிய மட்டத்தில் தமிழ் அரசியலின் எதிர்காலம் தொடர்பாக, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏதாவது சமிக்ஞையை வழங்கியுள்ளன என்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தலைமை தாங்கப்படும், துருவப்படுத்தப்படக்கூடிய தமிழ்த் தேசியவாத அரசியலின் கீழ்நோக்கிய பயணத்தின் ஆபத்தே அது. மறுபக்கமாக, குறுகிய தமிழ்த் தேசியவாதத்தைத் தவிர்க்கும் முற்போக்கான அரசியலின் துளிர்கள், தமிழ் அரசியலை மீள ஆரம்பிப்பதற்கான நம்பிக்கையைத் தருகின்றன.

வடக்கில், பொருளாதார அங்கலாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தலைமை தாங்கப்படும் தற்போதைய அரசியல் தலைமை வீழ்ச்சியடையலாம். ஆனால், அதற்கான மாற்றாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தலைமை தாங்கப்படும், வலதுசாரி மேல்தட்டுவர்க்க தேசியவாதம் உருப்பெறுதல் அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையும் அரசியலையும், சந்தர்ப்பவாதத்துக்காகப் பயன்படுத்தும் ஒன்றாக, இவர்களின் அரசியல் இருக்கிறது.

மறுபக்கமாக, போர்க்காலத்தில் மெளனிக்கப்பட வைக்கப்பட்டிருந்த, சாதியவாதத்துக்கு எதிரான அரசியல், பல்வேறான சிறிய கட்சிகளின் அரசியலாக, தற்போது உருவாகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், அரசியல் குரலொன்றைத் தேடும் நிலையிலேயே, இந்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்த் தேசியவாதத்தின் அரசியல், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆதரவுடன், தமிழ்த் தேசியவாதத்தில் இந்து அங்கத்தையும் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தேர்தல்களைத் தாண்டி, இவ்வாறான முற்போக்கு அரசியல் இயக்கங்கள், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதத்தின் தெருவரசியலுக்காக, முக்கியமான தடையாக அமையக்கூடும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறான அரசியல், 2005ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலை வடக்கில் புறக்கணிக்கச் செய்து, ராஜபக்‌ஷவைத் தெரிவுசெய்ததைப் போன்று, தற்போதைய குறுகிய தமிழ்த் தேசியவாதிகள், தெற்கில் ராஜபக்‌ஷவின் முன்னேற்றத்தைக் கண்டு திருப்தியடைகின்றனர்.

தமிழ்த் தேசியவாதத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கவலையடையாமல், சிங்கள - பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியை, தமிழ்த் தேசியவாதத்துக்கான சர்வதேச அங்கிகாரத்துக்கான பாதையாக அவர்கள் பார்க்கின்றனர்.

தேசியவாதத்தை நோக்கிய பயணத்தைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் நோக்கி, பரந்த இயக்கமொன்றை ஏற்படுத்துவதே, பல்வேறு இனச் சமுதாயங்களுக்கும் தற்போது தேவையான ஒன்றாகக் காணப்படுகிறது.

சிறிய அனுபவக் கதையொன்றுடன், இதை நான் நிறைவுசெய்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புறப் பெண்ணொருவரிடம், யாருக்கு வாக்களித்தார் என்று நான் கேட்டபோது, “வீடு” எனப் பதிலளித்தார். அவரது வாக்குக்கான காரணம் குறித்துக் கேட்டபோது, ஈ.பி.டி.பியின் வீணைச் சின்னத்துக்கே வாக்களித்தாரென அவர் தெரிவித்தார். “அவர்கள் (ஈ.பி.டி.பி), மின்சாரம் பெற உதவினார்கள், எங்கள் வீதியை நிர்மாணித்தார்கள், எங்களுக்கு வீடு கிடைப்பதற்கு அவர்கள் தான் காரணம். தமிழ் மக்கள், வீட்டுக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதால், வீட்டுக்கு வாக்களித்தோம் என்றே நாங்கள் சொல்கிறோம். ஆனால், எங்களுக்கு உதவுபவர்களுக்குத் தான் நாம் வாக்களிக்கிறோம்” என, அவர் தொடர்ந்து விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .