2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடமாகாணமும் கல்வி நெருக்கடியும்

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத்  தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது.  

இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாகாணமாக உள்ளது. க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, கடந்த ஐந்து வருடங்களாக, ஒன்பதாவது மாகாணமாக வடமாகாணம் திகழ்கிறது. 

இது கட்டமைப்பு ரீதியான கல்வி நெருக்கடியை எடுத்துக் காட்டுகிறது. இந்நெருக்கடி வடமாகாணத்தில் நிலவி வருகின்ற சமூக முரண்பாடுகள், பொருளாதார இயலாமை, அரசியல் வங்குரோத்து நிலை ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடாகும்.   

பிரித்தானியக் கொலனி ஆட்சி, நன்மை விளைவித்த துறைகளில் முக்கியமானது கல்வி. பாடசாலைகளிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலவசக் கல்வியைச் செயற்படுத்திய ஆசிய முன்னோடிகளுள் இலங்கையும் ஒன்று.

எனினும், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. சாதி, வர்க்க, இன அடிப்படைகளில், மக்கள் பிரிவுகளுக்கு நெடுங்காலம் மறிபட்ட கல்வி வாய்ப்பு, மெல்லவே வந்தது. வலிந்து இழைத்த அநீதிகளைத் திருத்தும் பணிகளை, வெகுசன எதிர்ப்பும் அரசியல் மாற்றங்களும் இயலுமாக்கின. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் நாம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.   

ஆண்டுதோறும் வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. இலங்கையின் கல்வித்தரம் படிப்படியாகச் சீரழிந்தவண்ணமுள்ளது. இதன் பின்னணியிலேயே பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் கோரிக்கையும் அதற்கான ஆளுநரின் ஆதரவையும் நோக்கல் வேண்டும்.   

தேசியப் பாடசாலைகளாக, மாகாணப் பாடசாலைகளாக மாற்றுவது, இந்தக் கல்வி நெருக்கடிக்குத் தீர்வாக அமையாது. தேசிய பாடசாலைகள் என்ற திட்டம், 1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது, 18 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டன. இன்று 342 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக உள்ளன. 1990ஆம் திருத்தப்பட்ட தேசியப் பாடசாலைக்கான அடிப்படைகளில் பிரதானமானது பாடசாலையானது 2,000 மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், 2,000க்கு மேற்பட்ட மாணவர்களைப் பாடசாலை கொண்டிருப்பது, மாணவரின் ஆரோக்கியமான ஊடாட்டத்துக்குக் கேடானது. 35 பேரைக் கொண்டிருக்க வேண்டிய வகுப்பறைகளில் 45 முதல் 50 மாணவர்கள் வரை அமர்த்தப்படுகிறார்கள்.   

தேசியப் பாடசாலைகள் குறித்த, தேசியக் கல்வி ஆணைக்குழுவின் 2003ஆம் அறிக்கையானது, தேசியப் பாடசாலை என்பது, பயனற்ற ஒரு குழுப் பிரிவினை என்றும் அது கல்வியின் தரத்தை முன்னேற்றுவதில் காத்திரமான பங்களிப்பை வழங்கத் தவறிவிட்டது என்றும் சுட்டுகிறது. 

குறிப்பாக, க.பொ.த சாதாரண தரம் வரை கற்பிக்கப்படும் பாடசாலைகள், க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு இல்லாத பாடசாலைகள் என, அனைத்தும் தேசியப் பாடசாலைகளாத் தரமுயர்த்தப்பட்டுள்ளன. இவை, அரசியல் காரணங்களுக்காகச் செய்யபடுவன. தேசியப் பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள், தரமான கல்வியை வழங்குகின்றன என்ற மாயை வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.   

2017ஆம் ஆண்டு, தேசியக் கல்வி ஆணைக்குழுவின் ‘தேசியப் பொதுக் கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகள்’ அறிக்கையில், சுட்டப்பட்டுள்ள முக்கியமான முன்மொழிவு: ‘எங்கும் பரவியதான சமூக நீதிக் கோலத்தை நிறுவுதல்’ என்பதாகும். இதுவே, இன்றைய கல்வி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பிரதானமான முன்மொழிவாகும்.

இலவசக் கல்வி என்பது, எல்லோருக்குமானது. அதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நகர்புறம்,  கிராமப்புறம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாடசாலைகள் என்ற பிரிவினை, மிகப்பாரிய வேறுபாட்டைக் கொண்டதாக மாறிவிட்டது. எங்களது கல்வி முறை, எல்லோரையும் உள்வாங்கும் முறையாக இல்லாமல் வேறுபட்ட, நிலைப்பட்ட பாடசாலைகளின் மூலம் மாணவர்களை வேறுபடுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

தேசியப் பாடசாலைகளே சிறந்தவை; ஊரில் உள்ள பாடசாலையை விட, நகரத்தில் உள்ள பாடசாலையில் கல்வி நன்றாக இருக்கும் போன்ற எண்ணங்கள் மக்கள் மத்தியில் உண்டு. இவை, ஆரோக்கியமான சமூகத்தின் வெளிப்பாடல்ல.   

கல்வி என்பது, எல்லோருக்குமான சமூக முன்னேற்றத்துக்கானது. அதை வெறுமனே தேசியப் பாடசாலைகளின் பெயரால் சிலவற்றுக்கு மட்டும் மட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது. இன்று, வடமாகாணத்தில் உள்ளோர் கேட்க வேண்டிய கேள்விகள், கல்வியின் தரம் பற்றியதும் அதன் வளங்கள் பற்றியதுமாகும்.

ஒரு சில பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக்குவது, வடமாகாணத்தில் கல்வி நெருக்கடிக்குத் தீர்வாகாது. இது, உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்து, மீண்டும் சமூக நீதிக்கு ஊறுவிளைவிக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .