2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வன்னி வாக்குகளை பிரிக்கும் பலகட்சி அரசியல்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

‘அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது.  

தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி உள்ளன. தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டிய, அவர்களது பிரச்சினைகள், நிறைந்ததே உள்ளன.   

இந்தச் சூழலில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் உள்ளதா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.  

பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள், கைகூடாத நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பில், கட்சிகள் முனைப்புக் காட்டிவருகின்றன.  

இவ்வாறான சூழ்நிலையில், ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடுகளும் அதனூடாக ஆட்சியாளர்களுக்குப் பலமான அழுத்தத்தை வழங்கலாம் என்ற நடைமுறைச் சாத்தியமான திட்டமும் தமிழ் அரசியல் தலைமைகளின் சிரசுக்கு ஏறாமை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் துர்ப்பாக்கியமே.  

இந்தவகையில், வடக்கில் இரண்டு தேர்தல் மாவட்டங்களில், (வன்னி, யாழ்ப்பாணம்) அனைத்து இன மக்களும் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகளை, அதிகமாகக் கொண்ட தேர்தல் மாவட்டமாக, வன்னித் தேர்தல் மாவட்டம் காணப்படுகின்றது.  

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய, வன்னித் தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 287,013 பேர் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். 

ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வாய்ப்புள்ள நிலையில், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், தமக்கான பிரதிநிதிகளைப் பெறுவதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற சூழலில், பல முனைப் போட்டியும் வன்னித் தேர்தல் தொகுதியில் காணப்படுகின்றது.  

வவுனியாவில் 119,811 வாக்காளர்களும் முல்லைத்தீவில் 78,360 வாக்காளர்களும் மன்னார் மாவட்டத்தில் 88,842 வாக்காளர்களும் 352 வாக்களிப்பு நிலையங்களில் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தமது வாக்கு எனும் ஜனநாயக ஆயுதத்தைப் பயன்படுத்த உள்ளார்கள்.    

குறிப்பாக, ஓடுகின்ற குதிரைக்கு பந்தயம் கட்டும் மனோபாவம் மக்களிடம் இருக்கின்றதா அல்லது, கடந்து வந்த அரசியல் பாதையில் ஏற்பட்ட வெறுப்புணர்வுகளும் கசப்பான அனுபவங்களும் மக்களை ஏதோ ஒன்றுக்கு பந்தயம் கட்ட வைக்கின்றதா என்பது ஏப்ரல் மாதமே தெரியவரும்.  

எனினும், வன்னித் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல், ஒருங்கிணைந்து செல்ல வேண்டிய தேவையுள்ளது.   

ஏனெனில், வன்னிப் பிரதேசங்களைப் பொறுத்தவரையில், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்பு, மகாவலி வலயங்கள் என்பன, தனிப்பட வன்னிப் பிராந்தியத்துக்கு உரிய பிரச்சினைக்குரிய விடயங்களாகக் காணப்படுகிறது. 

இந்நிலையில், இவை தொடர்பில் ஒருமித்த குரலில், ஒலிக்கச் செய்ய வேண்டிய தேவை, வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள, தமிழ் மக்களுக்கு உள்ளது. எனினும், வன்னித் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில், அது சாத்தியமா என்கின்ற கேள்வியும் நிறைந்தே உள்ளது.  

இதுவரையில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக, 10 சுயேட்சைக் குழுக்கள் வன்னித் தேர்தல் தொகுதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது, இலங்கையில் சுயேட்சைக் குழுக்கள் அதிகளவில் போட்டியிடும் தேர்தல்  மாவட்டத்தில்  இரண்டாவதாகக் காணப்படுகின்றது.  

இதற்கும் அப்பால், பல கட்சிகள் இம்முறை தேர்தல்க் களத்தில், வன்னித் தேர்தல் மாவட்டத்தை மய்யப்படுத்தி, களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாக்குகள், பிரிந்து செல்லும் நிலை அதிகளவில் காணப்படுகின்றது.   

தனித்துத் தமிழ் பிரதிநிதித்துவம் வரக்கூடிய யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடாத மூவின‍ங்களையும் சேர்ந்த பல கட்சிகளும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில், தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட முனைப்புக் காட்டுகின்றமை, பெரும் வேதனைக்குரியது.  

குறிப்பாக, வரதராஜப் பெருமாளின் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்பன, இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்துள்ள கட்சிகளாகச் சுட்டிக்காட்டத்தக்கவை.  

இவ்வாறான நிலைப்பாடுகள், ஏதேனும் பின்புலம் சார்ந்ததா என்கின்ற நிலையில் பார்க்கின்ற போது, சாதிய ரீதியாகவும் இன ரீதியாகவும் தமது கொள்கைகளை முன்னிறுத்தியவர்களை அடிப்படையாக, அவர்களை முதன்மைப்படுத்தியதாகத் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.  

தமிழ் மக்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டிய காலத்தில், இவ்வாறான அணுகுமுறைகள் தேவைதானா என்கின்ற சிந்தனை, மக்கள் மத்தியில் எழ வேண்டும் என்பதே, ஏனைய கட்சிகளின் பிரசாரமாகத் தற்போது காணப்படுகிறது.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள விசனம், தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையிலேயே, வன்னித் தேர்தல் மாவட்டத்தில், இவ்வாறான ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. கூட்டமைப்பு மீது, விமர்சனங்களை முன்வைப்பதும் சேற்றைவாரி வீசுவதும் இதர கட்சிகளின் அரசியலாகக் காணப்படும் நிலையில், ஒரு விடயம் இங்கு, யதார்த்தமாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.   

அதாவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வாலோ,  வேறு இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மக்கள் பிரதிநிதிகளை ஓரங்கட்டுவதற்காகவோ களம் இறங்குவதாகத் தெரிவிப்பது, மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, யார் மக்கள் பிரதிநிதிகளாக வரக்கூடாது என, நினைத்தார்களோ அவர்களை இலகுவாக அரியாசனத்தில் ஏற்றிப்பார்ப்பதாக அமையும் என்பதே உண்மை.  

இதற்குமப்பால், வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் இம்முறை, வாக்களிப்பில் சற்றுக் குழப்பமான நிலையில் காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.   

இதுவரை காலமும், ஓரணியில் நின்றவர்கள், இம்முறை பல்வேறு கட்சிகளில் வேட்பாளர்களாகி உள்ளமை, அவ்வாறு கட்சிகளுக்கு போன நபர்களை, ஆதரிக்க வேண்டிய சூழல் காணப்பட்டாலும் அவர்கள் போட்டியிடும் கட்சி, அதற்கு ஏதுவானதா என்கின்ற பின்வாங்கல்கள் அதிகமாகவே உள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தல் என்ற களத்தில், தனிநபர் மீதான பார்வையைச் செலுத்துவதா, கட்சியைப் பார்ப்பதா என்ற குழப்பம் காணப்படுகின்ற நிலையிலேயே, தமிழ் வாக்காளர்களின் இன்றைய காலச்சூழல் அமைந்துள்ளது. 

இவ்வாறு குழம்பிய குட்டையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பலரும் களம் காண நினைத்துள்ளனர் என்பதை மக்கள் விளங்கிக்கொள்வது கடினமாக இருந்தாலும் கூட, தேர்தல் நெருங்கும் காலத்தில், மக்களிடம் ஒரு தெளிவு பிறக்கும்; அதுவே, இறுதித் தீர்மானமாகவும் இருக்கப்போகின்றது.  

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் வவுனியாவில் கருத்துத் தெரிவிக்கையில், “தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் ஐக்கியத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, பல வருடங்களாக ஐக்கியத்தைப் பற்றிக் கதைத்திருக்கிறார்கள். இது எல்லாம், தேர்தலில் வாக்குகளை அபகரிக்கும் சுய இலாப நோக்கத்தோடுதான் அரங்கேறுகின்றன. கடந்த காலத்தில் இருந்து, தற்போது வரை, ஐக்கியத்தைப் பற்றிப் பேசப்பட்டு வருகிறது. அதனால், எமக்குக் கிடைத்தது ‘பூச்சியம்’ மட்டுமே. அது பின்னடைவுக்கே கொண்டு சென்றிருக்கிறது.  ஆகவே, ஐக்கியம் என்பதை விட, ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய கொள்கைகளை மக்களிடையே வைத்து, மக்களுடைய ஆணையைப் பெற்று, அதன் பின்னர் ஐக்கியப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

இவ்வாறான எண்ணப்பாடு, தனித்து ஓரினம் வாழும் பிரதேசத்தில் சாத்தியமான ஒன்றாகக் காணப்படும். குறிப்பாக, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் இவ்வாறான கருத்தியல்கள் சாத்தியப்பட்டாலும், பல்வேறு தேவைகளையுடைய மூவின மக்கள் வாழும் பிரதேசத்தில் இக்கருத்து, தமிழ் மக்கள் பிரதிநிதித்துவத்தில் பிறழ்வை ஏற்படுத்தும்.  

எனவே, வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், ஆறு பிரதிநிதித்துவத்தில் தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வழிவகையாக ஒற்றுமையைக் கைக்கொள்ள வேண்டியிருந்த போதிலும், அது இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கைகூடாமல் போயுள்ளது.  

இதற்கு, விட்டுக்கொடுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் என, வெளிப்படையாகக் கூற முடியும். இருந்த போதிலும், விட்டுக்கொடுப்பற்ற  அந்தத் தலைமை யார் என்ற கேள்வியும் நிறைந்துள்ளது.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புக்குத் தயாரில்லை என்கின்ற நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான அணியும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளது. 

வன்னித் தேர்தல் மாவட்டத்தில், வன்னியுடன் தொடர்பற்ற ஒருவரை, அக்கூட்டணி களமிறக்கப் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளதுடன், வன்னியைத் தளமாகக் கொண்ட சிலரைத் தேர்தல் ஆசை காட்டி ஒதுக்கிவைத்துள்ளது.   

இவற்றுக்கு மத்தியில், கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும், “எங்கள் கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது; யாரேனும் வரலாம்” என்கின்றன. ஆனால்,  வருபவர்களுக்கு, அங்கு எந்தளவு முக்கியத்துவமும் அவர்களது அபிலாசைகளை நிவர்த்திக்கக் கூடிய வழிவகைகளும் உள்ளன என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.  

இந்தச் சூழலில், “வன்னி மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற, தைரியமாகச் செயற்படக்கூடிய ஓர் அரசியல்வாதி தேவைப்படுகிறார். ஏற்கெனவே, இங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தை, தங்களது வாக்குக்காக உபயோகித்தார்களே தவிர, எம் மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்திகளையோ,  உரிமைகளையோ பெற்றுக் கொடுக்கவில்லை” எனப் பிரபா கணேசன் தனது பிரசாரத்தை முன்வைத்து வருகின்றார். 

இவ்வாறான நிலையில், அவரது அடிப்படை கோட்பாடாக, வன்னியில் இருக்கும் மலையகத் தமிழர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் என்ற வாதமேயாகும்.   

வன்னித் தேர்தல் தொகுதியில், தமிழ் மக்கள் மத்தியில் கடந்த 2010 ஆம் ஆண்டு, தேர்தல் வரையிலும் பிரதேச ரீதியான, இனத்துவம் சார்ந்த சாதியத்துடன் கூடிய பிரசார செயற்பாடுகள் இருந்ததில்லை. அதற்கு விடுதலைப் புலிகளின் உயிரோட்டம் காணப்பட்டமையும் காரணமாக இருந்தபோதிலும் 2010ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், ஒவ்வொரு தேர்தலிலும் மேற்சொன்ன விடயங்கள் அரசியலவாதிகளால் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டு, இன்று வளர்த்து விடப்பட்டுள்ளது.  

இந்த வளர்ச்சி, இன்று தமிழ் மக்கள் மத்தியில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தவல்ல செயற்பாடாக மாறிவரும் நிலையில், இதனை மேலும் மேலும் தூபமிடும் செயற்பாட்டையே அரசியல்வாதிகள்  தங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வது துரதிர்ஷ்டமாகும்.   

வன்னியில் கட்சிகளும் சுயேட்சைகளும் குவிந்து நின்று போட்டியிடும் நிலையில், தமிழ் மக்கள் இதுவரை ஆதரித்து வந்த கட்சிகள், தமது கட்சிகளூடாகப் புதிய முகங்களையோ இளைஞர்களையோ கணிசமாகக் களம் இறக்காமையும் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்காமையும் அதிருப்தி வாக்குகள் இவ்வாறான கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.  

எனவே, இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் தமக்குச் சார்பான பிரதிநிதிகளை எந்த அளவுக்கு அதிகமாகத் தெரிவு செய்கின்றனரோ, அந்த அளவுக்கு ஆட்சியாளர்களுக்குச் சிம்மசொப்பனமாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.  

தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்?

 “ஜனாதிபதித் தேர்தலிலே, ஒற்றுமையைக் காட்டிய தமிழ்ச் சமூகம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒற்றுமையாக இருந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  

“ஓரிருவருடைய கருத்துகள் எம்மைப் பலவீனப்படுத்தினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனது இறையாண்மையை விட்டுக்கொடுத்து, ஒருபோதும் செயற்படவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.  

“நாங்கள் இதுவரை எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள்; கடந்த அரசாங்கத்துடன் சர்வதேசத்தின் வேண்டுகோள்களுக்கு இணங்க, எமது அரசியல் தீர்வு விடயத்துக்காக வெளியில் இருந்து ஆதரவை வழங்கியிருந்தோம். அதன் காரணமாக, அரசமைப்பு விடயம், நிபுணர் ஆலோசனை வரை வந்திருந்தது. அந்த நேரத்தில், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அபிவிருத்தி என்ற ரீதியில் மக்களுக்குச் சென்றடையக்கூடிய செயற்பாடுகளை நாம் செய்து தந்திருந்தோம். அதுமாத்திரமின்றி, அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால், மக்களுக்கு தீர்க்கக்கூடிய பல விடயங்களைத் தீர்க்கும் செயற்பாடுகளை மேற்கொண்டோம்.  

“இன்று சந்தி சந்தியாக இராணுவத்தினரின் பிரசன்னம் காணப்படுகின்றது. நேர்முகத் தேர்வுக்கு கூட, இராணுவத்தினரின் பிரசன்னம் உள்ளது. ஆனால், கடந்த அரசாங்கத்தில் வெள்ளை வான் கடத்தல் இருக்கவில்லை. எமது மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உட்படப் பல போராட்டங்களை எழுச்சியாக மேற்கொள்ள முடிந்திருந்தது. இதற்குக் காரணம், நாம் கடந்த அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வழங்கிய ஆதரவேயாகும்.  

“ஆகவே, இன்று சிங்கள மேலதிக்கத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்றும், நீங்கள் சிங்களவர்களுக்கே தலைவர்கள் என்பதை மக்கள் கூறுவது மாத்திரமின்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரங்கத்தில் வைத்திருக்கின்ற நாம், ஒற்றுமையாகவே பயணிக்கின்றோம் என்ற செய்தியை அவர்களுக்கு, வழங்கும் முகமாகச் செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.  

“இதேவேளை, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் நிலைப்பாடானது, தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலம் காலமாகச் சிங்களத் தலைமைகள், தமிழ் மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும், பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே. 

சிங்களத் தலைமைகள், சிங்களப் பெரும்பான்மை மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டு, அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள், சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது.  ஜனாதிபதி கோட்டாபயவும் சிங்கள மக்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

“வெவ்வேறான பார்வைகளினூடாகவும் அணுகுமுறைகளினூடாகவுமே தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும்.  ஜனாதிபதி, தனது ஐந்து வருட பதவிக்காலத்தில் இயலுமானவரை, கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளைப் பாடமாக்கிக் கொண்டு, திருத்தங்களுடன் பயணித்தால், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வுண்டு எனக் கருதுகின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பான்மைத் தமிழ்மக்களால் கோட்டாபய நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர, இன ரீதியானதல்ல என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .