2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வழக்கு ஒன்று - தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்

எம். காசிநாதன்   / 2018 ஜூன் 18 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கு ஒன்று; தீர்ப்பு இரண்டு என்ற நிலை, தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களைப் பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்தது சரி என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  

 அதே அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி சுந்தர், “பதவி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பளித்துள்ளார்.  

 சட்டமன்ற உறுப்பினர்களின் 18 பேரின் பதவி, அவர்களைத் தேர்ந்தெடுத்த சட்டமன்றத்தின் 18 தொகுதி மக்கள் மற்றும் தற்போது ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க அரசாங்கம் ஆகியவற்றின் தலைவிதி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.  

டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், 22.8.2017 அன்று ஆளுநரைச் சந்தித்து ‘முதலமைச்சரை மாற்றுங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார்கள்.  

முதலமைச்சரை மாற்றும் இடம், ஆளுநர் மாளிகை ‘ராஜ்பவன்’ அல்ல என்றாலும், அப்படியொரு கடிதத்தைக் கொடுப்பதன் மூலம், சபையின் நம்பிக்கையை முதலமைச்சர் இழந்து விட்டார் என்பதை, வெளிப்படுத்துவதற்காகவே இந்த யுக்தியைக் கடைப்பிடித்தார்கள்.  

இதில், ஜக்கையன் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்து விட்டார்.  

இந்நிலையில் தி.மு.க சார்பில் ஆளுநரைச் சந்தித்து, “எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் நம்பிக்கையிழந்து விட்டது. ஆகவே, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்” என்று ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தது. ஆனால், அது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், அப்போதிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பைக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருந்தார்.  

ஆகவே, தி.மு.கவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வழக்குப் போடப்பட்டது. இதே காலகட்டத்தில், தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர், அவசர அவசரமாகக் கட்சித் தாவல் சட்டப்படி, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை 18.9.2017 அன்று பதவி நீக்கம் செய்தார்.  

 இப்போது வழங்கியுள்ள தீர்ப்பில், தலைமை நீதிபதியே சுட்டிக்காட்டியிருப்பது போல், ‘இந்த 18 எம்.எல்.ஏக்களும் தி.மு.க ஆட்சி அமைக்க உதவவில்லை; தி.மு.கவுடன் கூட்டுச் சேர்ந்து, அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராகச் செயற்படவில்லை; வேறு கட்சிகளின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடவில்லை’ தலைமை நீதிபதியின் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவவில்லை என்பது தெளிவாகிறது.  

பிறகு ஏன் பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்தார்? ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது மட்டுமே காரணம். இதே போன்றதொரு வழக்கு, கர்நாடக சட்டமன்றத்தில் நிகழ்ந்த பதவி நீக்க விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வரை போனது. 

அந்த வழக்கில், “ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் முதலமைச்சரை மாற்றக் கோரி, ஆளுநரிடம் கடிதம் கொடுப்பது தவறல்ல. அது கட்சித் தாவலும் அல்ல” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

 ஆனால், இதைப் பேரவைத் தலைவர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரையும் பதவி நீக்கம் செய்தார். திருந்திய மைந்தனாக வந்த, ஜக்கையன் என்ற சட்டமன்ற உறுப்பினருக்கு, எவ்வித தண்டனையும் அளிக்காமல், அவர், ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்கு மன்னிப்பு வழங்கினார்.  

ஆகவே, “அவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்” என்ற தி.மு.கவின் வழக்கையும் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் பதவி நீக்கத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற வழக்கையும் சேர்த்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. 

அனைத்து விசாரணைகளும் முடிந்து, கடந்த 23.1.2018 அன்று தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புதான் 14.6.2018 அன்று வெளிவந்திருக்கிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஒரு முதலமைச்சர், நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நீதிமன்றத்தில் ஆறு மாத காலம் தீர்ப்புக்காக காத்திருந்தது. 

இப்போது, வழக்கு ஒன்று; தீர்ப்பு இரண்டு என்று, மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால், இனியும் சில மாதங்கள் தாமதம் ஆகும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  

தகுதி நீக்குதல் வழக்குத் தீர்ப்பைப் பொறுத்தவரை, கட்சித் தாவல் சட்டப்படி எடுக்கப்படும் பேரவைத் தலைவரின் நடவடிக்கை, நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது என்பதை வலியுறுத்தி, உச்சநீதிமன்றம் எண்ணற்ற தீர்ப்புகளை வழங்கி விட்டது.   

பேரவைத் தலைவர் பாரபட்சமற்றவராகப் பணியாற்ற வேண்டும் என்று சமீபத்தில் அருணாசலப் பிரதேச சட்டமன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இந்த இரண்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  

இந்த எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கம் செல்லுபடியாகும் என்று கூறிய, பேரவைத் தலைவரின் உத்தரவில் தலையிட மறுத்த தலைமை நீதிபதி, “ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்ததால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அது, கட்சியிலிருந்து தானாக விலகுவது போல் ஆகிறது. ஆகவே, இது கட்சித் தாவல்தான். பேரவைத் தலைவர், இயற்கை நீதியைக் கடைப்பிடித்தே உத்தரவு வழங்கி இருக்கிறார்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். 

ஆனால், மாற்றுத் தீர்ப்பு வழங்கி, பேரவைத் தலைவர் 18 பேரைப் பதவி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர், “இயற்கை நீதி, அரசியல் சட்ட நடைமுறைகள், கட்சித் தாவல் சட்ட விதிகள் அனைத்தையும் பேரவைத் தலைவர் மீறியிருக்கிறார். 19 பேர் ஆளுநருக்குக் கடிதம் கொடுத்திருக்கும் போது, ஜக்கையன் என்ற எம்.எல்.ஏ மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மீதியுள்ள 18 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.  அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்த தினத்தில் இல்லை. தேர்தல் ஆணைக்குழு, அ.தி.மு.கவை அந்தத் திகதியில் இரு பிரிவுகளாக இயங்க மட்டுமே அனுமதித்தது” என்றெல்லாம் எடுத்துக் கூறி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர், 18 எம்.எல்.ஏக்களைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது” என்று தீர்ப்பளித்தார்.   

மாறுபட்ட தீர்ப்பால், இனி இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்குச் செல்லும். அவர் எப்போது விசாரித்து, எந்த நீதிபதியின் தீர்ப்பு சரி என்று கூறுகிறாரோ, அதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் பதவி பற்றி நிச்சயமில்லை.   

தலைமை நீதிபதியோ, தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது போல், “பெரும்பான்மையை நிரூபிப்பதில் நூலிழையில்” இருக்கும் அ.தி.மு.க ஆட்சி, அடுத்த தீர்ப்பு வரும் வரை, தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.  

கட்சித் தாவல் சட்டத்தில், சபாநாயகர்கள் நடத்தும் கூத்துகளும் அதை முடிவு செய்ய நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிடராக இருக்கிறது.  

தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திராவில், தெலுங்கானாவில் கூட இதே நிலைதான். அங்கும், கட்சித் தாவல் சட்டப்படி, உடனடி நடவடிக்கை எடுக்காததால், அந்த அரசாங்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

 பொதுவாக, கட்சித் தாவல் சட்டப்படி, ஒரு கோரிக்கை சபாநாயகரிடம் வரும் போது, அவசரஅவசரமாக அவர் முடிவு எடுக்கிறார். அப்படியே அந்தக் கோரிக்கையை கிடப்பிலும் போடுகிறார். ஆனால், அந்தக் கோரிக்கை மனு மீது, நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம், நீதிமன்றத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   

ஆகவே, 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க அரசாங்கத்துக்கு, கட்சித் தாவல் சட்டத்துக்குள் சிக்கியுள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை, முடிவு செய்யப்படாமலேயே ஆட்சி தொடருகிறது.  

 கட்சித் தாவல் சட்டம் 1985இல் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி, சபாநாயகர்கள் தங்கள் இஷ்டப்படி நடவடிக்கை எடுத்தார்கள். அதனால், சபாநாயகர் முடிவில் தலையிடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.   

ஒரு கட்சியிலிருந்து, மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களோ அல்லது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களோ வெளியேறினால் அது கட்சித் தாவல் அல்ல என்ற பாதுகாப்பு இருந்தது. அதில், ‘மூன்றில் ஒரு பகுதி’ என பிரதமராக இருந்த வாஜ்பாய், திருத்தம் செய்தார். கட்சித் தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாகக் கூடாது என்றும் திருத்தம் கொண்டு வந்தார்.   

ஆனால், சபாநாயகர் எத்தனை நாளைக்குள் கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது தெளிவில்லை என்பதால், அந்தச் சட்டத்தின் நோக்கம், சிதறடிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடனடித் தேவை, கட்சித் தாவல் சட்டத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் என்பதுதான் இன்றைய நிலை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .