2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும்

கே. சஞ்சயன்   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம்.  

பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  

வாள்வெட்டுகள் போன்ற வன்முறைகள், திடீரென மெலெழும்பும் போது, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவதும், அது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் போது, அரசாங்கம் அதை அடக்க பொலிஸாரைக் களமிறக்குவதும், கொஞ்ச நாளில், அந்த இறுக்கம் தானாகவே தளர்ந்து போக, மீண்டும் அத்தகைய குழுக்கள் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்குவதும் வழக்கமாகி விட்டன.  

அதாவது, பாதுகாப்பு நிலை எப்போது தளர்கிறதோ, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் வன்முறைகள் தலையெடுகின்றன.  

இதைத் தடுப்பதற்கு, நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டியது முக்கியமானது. மக்களைப் பாதுகாக்கின்றதாக அந்தக் கட்டமைப்பு இருக்க வேண்டும்.  

அது நிச்சயமாக, ஆயுதமேந்திய ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாரணத்துக்கு, விழிப்புக் குழுக்கள் இதில் முக்கியமானவை.  

குடாநாட்டில், சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகள் தலையெடுத்த போது, போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு மற்றும் அவற்றால் குற்றச்செயல்கள் அதிகரித்த போது, கிராம மட்டத்திலான விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற யோசனையை, முன்வைத்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.  

இரண்டொரு கூட்டங்களிலும், சில செய்தியாளர் சந்திப்புகளிலும் அவர் அதைக் கூறி விட்டுப் போய் விட்டார்.  

பொலிஸாரின் உதவியுடன், கிராம மட்டத்தில் விழிப்புக் குழுக்களை அமைத்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று அவர் கூறிய யோசனை, முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், கணிசமான வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்திருக்கும்.  

ஆனால், விழிப்புக் குழுக்களைச் சும்மா யாராலும் அமைத்துவிட முடியாது. அதற்குக் கிராம மட்டத்தில் ஒழுங்கமைப்புகள் இருக்க வேண்டும். அதைச் செயற்படுத்துவதற்குப் பொலிஸ் தரப்பின் அனுமதியையும் பெறவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் விழிப்புக் குழுக்களை, பொதுமக்களும் அங்கிகரிக்க வேண்டும்.  

இவை எல்லாவற்றையும் செய்து, ஒழுங்கமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது, ஓர் அரசியல் தலைமையின் கடமை. அந்தக் கடமையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ நிறைவேற்றவில்லை.  

யாழ்ப்பாணக் குடாநாட்டில், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்குத்தான் அதிகளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.எனவே, இந்த விழிப்புக் குழு கட்டமைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால், அதைச் அவர்கள் செய்ய முயலவில்லை.  

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், விழிப்புக் குழுக்கள் ஒன்றும் புதிய விடயமன்று. குடாநாட்டில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விழிப்புக் குழுக்கள் இயங்கியிருக்கின்றன.  

1980களின் நடுப்பகுதியில், அரசாங்கத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு முற்றாகவே சீர்குலைந்த போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.   

அவற்றின் செயற்றிறன் முழு அளவில் இருக்கவில்லை. எனினும், கிராம மட்டப் பாதுகாப்பில் அவை காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தன.  

விடுதலைப் புலிகள் 1985-86 காலப்பகுதியில், குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், விழிப்புக் குழுக்களை உருவாக்கியிருந்தனர்.  

அந்த விழிப்புக் குழுக்களின் இலக்கு, குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்களைச் சுற்றி, புலிகள் அமைத்திருந்த காப்பரண்களுக்குப் பின்னால், இரண்டாவது கட்டப் பாதுகாப்பு அரணில், இரவுக் காவலில் ஈடுபடுவதாகும்.  

ஆங்காங்கே விழிப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், இரவு நேரத்தில் சுழற்சி அடிப்படையில், புலிகளுடன் போய்க் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஏதாவது, அசைவுகள் தெரிந்தால், அவர்கள் புலிகளை உசார்படுத்துவார்கள்.  

1987 ஒக்டோபர் மாதம், இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வெடிக்கும் வரை, இந்த விழிப்புக் குழுக்கள் இயங்கின.  

அதன் பின்னர், 1990 தொடக்கத்தில் இருந்து, விடுதலைப் புலிகளின் காவற்றுறைக் கட்டமைப்பு செயற்படத் தொடங்கும் வரை, விழிப்புக் குழுக்கள் செயற்பட்டன. அவை, கிராம மட்டப் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, கசிப்பு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகச் செயற்பட்டன.  

எனினும், புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின்னர்,விழிப்புக் குழுக்களின் வகிபாகம் குறைந்த போதிலும், தேவைக்கேற்ப அவை புலிகளின் வழிப்படுத்தலில் செயற்பட்டன.  

அதைவிட, பல்வேறு சந்தர்ப்பங்களில் கிராம மட்டத்தில் திருட்டுகள், குற்றங்கள் அதிகரித்தபோது, சுயமாக உருவாக்கிக் கொண்ட விழிப்புக் குழுக்களும் இருந்தன.  

1996இல் யாழ். குடாநாடு படையினர் வசம் வந்த பின்னர், இரவில் மாடுகள் திருடப்படுவது வழக்கமானது. அதைப் படையினரும் கண்டு கொள்ளவில்லை. இரவு நேர ஊரடங்கு வேளையிலும் தாராளமாகவே இத்தகைய திருட்டுகள் நடந்து கொண்டிருந்த போது, கிராம மட்டத்தில் விழிப்புக் குழுக்கள் உருவாகின.   

சுயமாக உருவாக்கப்பட்ட அந்த விழிப்புக் குழுக்கள், படையினரின் ஊரடங்குச் சட்டத்தையும் கூட, பொருட்படுத்தாமல் வீதியில் இறங்கிச் செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே, யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில், விழிப்புக் குழுக்கள் என்பது புதியதொரு சொல்லோ, கோட்பாடோ கிடையாது. எனவே, குடாநாட்டில் விழிப்புப் குழுக்களை உருவாக்குவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. ஆனால், பூனைக்கு மணி கட்டுவதற்குத்தான், யாரும் இல்லை.  

அண்மையில், வாள்வெட்டுகள் மீண்டும் அதிகரித்தபோது, “பொலிஸ் அதிகாரத்தைத் தந்தால், இரண்டு மாதங்களில் இத்தகைய குழுக்களைக் கட்டுப்படுத்திக் காட்டுவேன்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.  

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, “கூரை ஏறி, கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறாராம்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  

இவர்கள் இருவரும் இப்போது, கேள்வி - பதில் அறிக்கைகளைக் கொடுத்து, நாளிதழ்களின் பக்கங்களை நிரப்பும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.   

ஆளை ஆள் விமர்ச்சித்து, வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் வரப் போகிறது என்பதை, நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்த விவகாரம் ஒருபுறத்தில் இருக்க, மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் தரும் வரை, வன்முறைக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது யார் என்பது, முக்கியமான வினாவாக இருக்கிறது.  

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியை, அரசாங்கம் சரியாக நிறைவேற்றாத நிலையில், மாற்று வழிகளை நாடுவதை விட வேறு வழியில்லை.   

பொலிஸ் அதிகாரத்துக்காக காத்திருப்பதை விட, வடக்கு மாகாண சபை, கிராமிய மட்டத்தில் விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கு, முயற்சிகளை எடுத்திருக்கலாம்.   

ஒருவேளை, இந்த யோசனையை முதலில் சுமந்திரன் கூறிவிட்டார் என்பதற்காக, முதலமைச்சர் அதைக் கருத்தில் எடுக்காமல் இருக்கிறாரோ தெரியவில்லை.  

ஆனால், இன்றைய அவசியத் தேவை என்பது, கிராம மட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டமைப்பை ஏற்படுத்துவதுதான். அந்த விழிப்புக் குழுக் கட்டமைப்பை, பொலிஸாரின் ஆலோசனை மற்றும் உதவியுடனேயே அமைப்பது முக்கியம்.  

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக, தலைமை தாங்குவதாகவோ, தலைமை தாங்கப் போவதாகவோ சொல்லிக் கொள்பவர்கள், எல்லோருக்குமே இந்த விடயத்தில் ஒரு கடப்பாடு இருக்கிறது.  அந்தக் கடப்பாட்டை நிறைவேற்றும் உறுதி தான், யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.  

எல்லோரும் அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அறிவுரை கூறி விட்டு, நழுவிக் கொள்பவர்களாகவோ, வீர வசனம் பேசுபவர்களாகவோ இருக்கிறார்களே தவிர, செயல் வீரர்களாக யாருமில்லை. இந்தக் குறைபாடு விழிப்புக்குழுக்களை அமைப்பதில் மாத்திரமன்றி, தமிழ் மக்களின் உரிமைகளை அடைவதற்கான செயற்பாட்டு அரசியலுக்கும் பொருத்தமாகவே தெரிகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X