2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விற்று பிழைக்கும் அரசியல்

மொஹமட் பாதுஷா   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில நாள்களாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.   
இப்போது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆரம்பமாகும் அடுத்த இரு மாதங்களிலும் அஷ்ரப் இன்னும் அதிகமதிகம் பேசப்படுவார். சரியாகச் சொன்னால், ஒரு வர்த்தகக் குறியீடு (பிராண்ட் நேம்) போல பயன்படுத்தப்படுவார்.  

தேர்தல் வெற்றிக்காக, அவரது புகைப்படங்களும் அவர் முன்மொழிந்த கோஷங்களும் நினைவு கூரப்படுவதோடு, அவரைப் பின்பற்றும் நடவடிக்கைகள் எல்லாம், முடிவுக்கு வந்து விடுகின்றன.  
பின்னர், இன்னுமொரு நினைவு தினத்தில், தேர்தல் காலத்தில் அஷ்ரப்பின் கொள்கைகளும் கோட்பாடுகளும் நினைவுபடுத்தப்படும். இப்படித்தான், கடந்த 19 வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது.  

அந்தவகையில், முஸ்லிம் அரசியல் விடிவெள்ளியாக இருந்து, மரணித்த அஷ்ரப் பற்றி, கடந்த ஒரு வாரகாலமாக, நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூரப்படுகின்றது.  

 அவரால் உருவாக்கப்பட்டு, பின்னர் இலட்சணம் மாறிப்போன ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி, ஏனைய காங்கிரஸ்களும் ‘அஷ்ரபின் சிஷ்யர்கள்’ எனத் தம்மை அழைத்துக் கொள்கின்ற ஏனைய பல அரசியல்வாதிகளும், அவருடைய அருமை பெருமை பற்றி, மேடைபோட்டுப் பேசியுள்ளனர்.  

அஷ்ரபின் தனித்துவ அடையாள அரசியல், பேரம்பேசும் ஆற்றல், அரசியல் சாணக்கியம், முஸ்லிம் சமூகத்தின் உரிமையை வென்றெடுப்பதில் அவர் கொண்டிருந்த வேட்கை, அவரது கொள்கைகள், அணுகுமுறைகள் பற்றிச் சிலாகித்துப் பேசப்படுகின்றன.  

மக்கள் தலைவர் ஒருவருக்கான இலட்சணத்தைக் கொண்டிருந்த அவர், இன்று இல்லையே என்று, அவரது பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் கவலைப்படுகின்றனர்.அவரது இடைவெளி, இன்னும் நிரப்பப்படவில்லை என எண்ணுகின்றனர். 

அதுமட்டுமன்றி, அவருடைய கனவுகளை நனவாக்கப் பாடுபட வேண்டும் என்று, மீண்டும் ஒரு தடவை கூறுவதையும் காண முடிகின்றது.  

கடந்த இரு தசாப்தங்களாக, அஷ்ரப் இப்படிச் செய்தார்; இதனைச் சாதித்துக் காட்டினார் என்று முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் அஷ்ரபினுடைய பெருமைகளைப் பேசித் திரிகின்றார்களே தவிர, தாம் இந்தச் சமூகத்துக்காக எதைச் சாதித்திருக்கின்றோம் என்று, மக்களிடம் கூறுவதற்குச் சமூகம் சார்ந்த அடைவுகள் எதுவும் அவர்கள் கைவசம் இல்லை.  

குறைந்தபட்சம், அஷ்ரப் காட்டிய வழியில், அதே கொள்கைப் பிடிப்புடன், சற்றும் தடம் மாறாமல், இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லும் அருகதையைக் கூட, சமகால முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் கொண்டிருப்பதற்கான எந்த அடையாளங்களையும் காணக் கிடைக்கவில்லை.  

ஒவ்வொரு வருடமும் மர்ஹூம் அஷ்ரபின் நினைவு கூரல் என்ற கோதாவில், மக்களைக் கூட்டி, அஷ்ரபைப் பற்றி பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல், பெரும்பாலும் தம்முடைய வேக்காடுகளையும் கருத்துகளையும் கொட்டித் தீர்க்கப்படுகின்றது.   

இதற்கு மேலதிகமாக, தேர்தல் காலங்களில், எழுச்சிப் பாடல்களைப் பாடவும் உணர்ச்சிக் கோஷங்கள், சுவரொட்டிகள் ஊடாகவும்தான் அவர் நினைவு கூரப்படுகின்றார்.  

தவிர, அவர் விட்டுச் சென்ற அரசியலைச் சரியாக முன்னெடுத்து, நூற்றுக்கு நூறு சதவீதம், சமூக நலன்சார்ந்த சாதனைகளை நிகழ்த்துவோம் என்ற எண்ணம், 99.9 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாது என்ற முடிவுக்கே, வர வேண்டியிருக்கின்றது.  

இப்போது, இன்னுமோர் ஆட்சியும் முடிவுக்கு வரப்போகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், சில வேலைகளைச் செய்ய முடியாது. பெரும் பகட்டுகளைக் காட்டி, ஆரவாரங்களோடு இந்த ஆட்சிக்கு ஆதரவளித்த, முஸ்லிம்களின் காங்கிரஸ் கட்சிகள், ஏனைய அரசியல்வாதிகள் முன்னைய ஆட்சியாளர்களை ஆதரித்த காங்கிரஸ்களைப் போலவே, சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளையோ அபிலாசைகளையோ தீர்க்காமல், வீணே காலத்தைக் கடத்தி விட்டிருக்கின்றன.  

அஷ்ரபின் மரணத்துக்குப் பிறகான நான்காவது ஆட்சிக் காலமும் வீணே கழிந்திருக்கின்றது. ஆனால், 2000ஆம் ஆண்டில், முஸ்லிம்களுக்கு இருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பிரச்சினையை தவிர, வேறு என்ன பிரச்சினை தீர்ந்திருக்கின்றது.   

அதற்குப் பிறகு, இனவாதம் உள்ளடங்கலாக எத்தனையோ புதுப்புதுப் பிரச்சினைகள் இச்சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதில் எதை அஷ்ரபின் சிஷ்யர்கள் தீர்த்து வைத்தார்கள்?  

பல விமர்சனங்கள் இருந்தாலும், அஷ்ரப் முஸ்லிம் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதை மறுக்க முடியாது. சிங்கள, தமிழ்க் கட்சிகளை நம்பியிருந்த முஸ்லிம் சமூகத்துக்கு என, ஒரு தனியான அரசியல் வழித்தடத்தை உருவாக்கியவர் அஷ்ரப் ஆவார். அதன் வழியில், பேரம் பேசும் சக்தியை உச்சமாகப் பயன்படுத்தி, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு சென்றார்.  

அவருக்கு முன்னர், யாரும் இவ்வாறு இருவகையான அரசியலையும் சமமான வீச்சில் முன்கொண்டு செல்லவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே, பொதுவாக முஸ்லிம் அரசியல் வரலாறு, அஷ்ரபுக்கு முன் - பின் என்று நோக்கப்படுவதாகவும் சொல்ல முடியும்.  

அவர், பல்கலைக்கழகம், துறைமுகம், ஆகியவற்றில் பெருமளவிலானோருக்குத் தொழில்வாய்ப்பு, முஸ்லிம், தமிழ் பிரதேசங்களை நோக்கி, அரச அலுவலகங்களின் விஸ்தரிப்பு எனப் பல்வேறு பாரிய அபிவிருத்தி சார் முன்னெடுப்புகளைச் செய்தார்.   

அதேகாலப்பகுதியில் முஸ்லிம்களுக்குத் தனியான ஓர் அரசியல் அடையாளமும், அபிலாசையும் இருக்கின்றது என்பதை உரக்கக் கூறினார். முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் தைரியமாகக் கூறி, அவற்றுக்குத் தீர்வு தர வேண்டும் என்றார்.  

தமிழ் ஆயுதக் குழுக்கள் உள்ளடங்கலாக, முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைத்த எந்தத் தரப்புக்கும் எதிராக, நெஞ்சை நிமிர்த்தி நிற்கவும் சமூகத்துக்காகப் போராடவும் அஷ்ரப் ஒரு போதும் பின் நின்றதில்லை. அதனாலேயே, அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம், அடிமட்ட மக்களிடையே இருக்கின்றது.  

ஆனால், அவருக்குப் பின்வந்த அரசியல்வாதிகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று, அவர்களிடமே நேரிடையாக கேட்க விரும்புகின்றேன். தனித்துவ அடையாள அரசியல் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்கள் போல செயற்பட்டதையும் ஆட்சிகளுக்கு முட்டுக் கொடுத்ததையும் தவிர எதைச் செய்தார்கள்?  

நெறிகெட்ட அரசியலையே, உண்மையான போராட்ட அரசியல் என்று, இளைஞர் சமுதாயத்தை நம்பவைத்து, உரிமைகளைச் சலுகைகளைப் போல மக்களுக்குக் காட்டி, சமூகத்தை ஏமாற்றி, சுய இலாப அரசியல் செய்ததைவிட, அதிகமாக முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று, எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் மார்தட்டிக் கொள்ள முடியாத நிலையே, இன்று இருக்கின்றது; இதுதான் நிதர்சனம்.  

நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகின்றது. அதன்பின்னர், இன்னுமோர் ஆட்சி கட்டமைக்கப்படும். அந்தவகையில் நோக்கும்போது, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைத் தேர்ந்தெடுக்கவும் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கவும் முன்னின்ற முஸ்லிம்களுக்கு, இந்த ஐந்து வருடங்களிலும் கிடைத்த அளப்பெரிய அரசியல் அனுகூலம் என்ன?  

மைத்திரியும் ரணிலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று சொன்ன, நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இந்தச் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளில் எவற்றைத் தீர்த்து வைத்திருக்கின்றார்கள் என்று பட்டியலிட்டுக் கூற முடியுமா?  

முஸ்லிம்களின் இந்தஇந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று, முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் இணைந்து, கூட்டான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்ததுண்டா? அந்தந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் முஸ்லிம்களுக்கு முன்னுரிமையான விடயம்.   

அதைவிடுத்து, அமைச்சுப் பதவிகளோ, எம்.பி ஆசனங்களோ, இதர வரப்பிரசாதங்களோ தேவையில்லை என்று சொல்லி, முஸ்லிம் சமூகத்துக்காகக் கடைசி மட்டும் போராடிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் யாராவது இருக்கின்றார்களா? இல்லையே!  

முஸ்லிம்களின் முதன்மையான பிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுகின்றது. இலட்சக் கணக்கான ஏக்கர் காணிகள் வடக்கு, கிழக்கில் கபளீகரம் செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி, கிழக்கில் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகளும் முஸ்லிம்களுக்குக் கிடையாது. ஒலுவில் கடலரிப்புப் பிரச்சினை, அப்படியே கிடப்பில் கிடக்கின்றது. அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட 500 வீடுகள் இன்னும் காடாகிக் கிடக்கின்றன.  

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அறுவாக்காட்டு மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, கொழும்புக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சிலை வைப்புகளாலும், தொல்பொருள்கள் என்ற தோரணையாலும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு இன்னும் தீர்வில்லை.  

இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று முன்வைக்கப்பட்டால், அதில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று, இதுவரை எழுத்துவடிவிலான ஆவணமொன்றைப் பகிரங்கமாக முன்வைத்து, அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த இந்தத் தலைவர்கள் யாருக்கும் நேரமும் தைரியமும் அக்கறையும் இல்லை.  

அதுமட்டுமன்றி பள்ளிவாசல்கள், புனித குர்ஆன், ஹலால், ஆடைகள் உள்ளடங்கலாக முஸ்லிம்களின் இன, மத அடையாளங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதையும் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் தடுப்பதற்கான நகர்வுகளைக் கூட, காண முடியாதிருக்கின்றது. இதற்குக் காரணம், ‘முஸ்லிம் அரசியல் நக்குண்டு நாவிழந்து போனதுதான்’ என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

இப்பக்கத்தில் வெளியாகும் பத்தியில், தொடர்ச்சியாக ஒரு விடயத்தை வலியுறுத்தி வருகின்றோம். அதாவது, முஸ்லிம்களின் வாக்குப்பலத்தைப் பேரம்பேசும் சக்திக்காகப் பயன்படுத்த வேண்டும்.  

 ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்ற தேர்தல்கள் வரும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவு அவசியப்படும் இக்கட்டான தருணங்களில், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எழுத்துமூல கோரிக்கையாக முன்வைத்து, அதற்கான எழுத்துமூல உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு இணக்கம் தெரிவிக்கும் தரப்புக்கு ஆதரவளியுங்கள். பின்னர், அந்த உடன்பாடுகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுங்கள் என வலியுறுத்தி வருகின்றோம்.  

அப்படிச் செய்திருந்தால், ஒருவேளை ஓரிரு கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டிருக்கலாம். குறைந்தபட்சம், இந்தக் கட்சி, இந்த அரசாங்கம் இந்தந்த வாக்குறுதிகளை எழுத்துமூலம் தந்துவிட்டு, முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது என்று, உலகுக்குக் கூறக் கூடியதாக இருந்திருக்கும்.  

 ஒருவேளை, அப்படி முஸ்லிம் சமூகத்தின் சார்பில், யாராவது பேரம்பேசலை மேற்கொண்டிருந்தால், சமூகத்துக்காகப் போராடியிருந்தால் அவர்களுக்கே மர்ஹூம் அஷ்ரபை நினைவுகூரும் அருகதை இருக்கின்றது.  

அதைவிடுத்து, சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகப் பாடுபடாது, அஷ்ரபை விற்றுப் பிழைக்கும் வியாபாரத் தன்மையான அரசியலில் நனைந்தவர்கள், உண்மையிலேயே பெருந்தலைவரை நினைவு கூருவதற்கும், அவரது வழி நடப்பவர்கள் என்று சொல்வதற்கும் அருகதை பெற்றிருக்கின்றார்களா என்பதைச் சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.  

அதனடிப்படையில், இந்த ஆட்சிக்காலம் முடிவடைந்து, மற்றுமொரு தேர்தல் நடைபெறவிருக்கின்ற இந்தக் கட்டத்திலேனும், முஸ்லிம்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களிடமும் முன்வைத்து, அதில் ஒன்றிரண்டையாவது பெற்றுக் கொள்ள முயற்சி எடுத்தால், மகிழ்ச்சியே!  

முஸ்லிம் அரசியல்: விலை பேசப்படும் அரச தொழில்கள்

 மர்ஹூம் அஷ்ரபின் பெயரைச் சொன்னதுமே, நினைவுக்கு வருகின்ற சேவைகளுள் அவர் வழங்கிய அரச தொழில்களுக்கு முக்கிய இடமுண்டு.   

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், சந்திகளிலும் வீடுகளிலும் முடங்கிக் கிடந்த காலத்தில், அமைச்சுப் பதவியைப் பெற்ற மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப், நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்குப் பல நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். இது இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்களது குடும்பத்துக்கும் ஒளியேற்றி வைத்தது.

முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி தமிழ், சிங்கள இளைஞர்களுக்கும் கணிசமான அரச தொழில்களைக் காலடிக்கு தேடிச் சென்று பெற்றுக் கொடுத்தார். இன்றும் அவர்களும் குடும்பங்களும் நன்றி கூறிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில், அவர் இந்த இளைஞர்களுக்குத் தொழில் தருவதற்காகப் பணம் பெற்றவரல்ல; அதனால் அவர், நன்றியுடன் நோக்கப்படுகின்றார்.

இன்றைய காலத்தில், இவ்வாறு பெருமளவு தொழில்கள் வழங்கப்படுவதில்லை என்பது வேறுவிடயம். ஆனால், இவ்வாறு வழங்கப்படும் தொழில்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் வாங்கப்படுகின்றது. 

தொழில் தேவை என்பதால், பணம் கொடுப்பவர்கள் அதை, வெளியில் சொல்வதில்லை. இப்படியான பேர்வழிகள், ஏமாற்றிய பிறகுதான் இரகசிய ‘டீல்’ வெளியில் வருகின்றது.
அஷ்ரபின் பெயரைச் சொல்லி அரசியல் செய்கின்றவர்கள், அவர்களின் இணைப்பதிகாரிகள், அமைப்பாளர்கள், கட்சிக்காரர்கள், தொடர்பில் இருப்பவர்கள்,  தொழில் பெற்றுத்தரும் தரகர்கள் என்று பலர், இவ்வாறு பணம் அறவிடுவதாக, முஸ்லிம் ஊர்களில் பேசப்படுகின்றது.

குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்து சிலர் பணம் வாங்குகின்றார்கள்; சிலர், தெரியாமல் ‘டீல்’ பேசுகின்றார்கள்.

இந்தத் தொழிலுக்கு இத்தனை இலட்சம் ரூபாய் தரவேண்டும் என்று விலை நிர்ணயிக்கின்றார்கள். பிறகு, அதில் இவ்வளவு ரூபாய் முற்பணம் தரவேண்டும் என்று கூறுகின்றார்கள். எப்படியாவது தொழில் வேண்டும் என்ற, முட்டாள்தனமாக இளைஞர்களும் அப்பணத்தை கொடுத்திருக்கின்றார்கள்.

இவ்வாறு, பல இடைத்தரகர்களுக்குப் பெருமளவு பணத்தை வழங்கி, தொழிலுக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் மிக இலகுவாக ஏமாற்றப்படுகின்றனர். பலரிடம் தொழில்தருவதாகப் பணம் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் அடிவருடிகள் பலர் கம்பிநீட்டி, ஊரைவிட்டுத் தலைமறைவாகிய சம்பவங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கின்றன.

கட்சிக்காக பாடுபட்டவர்கள்,  தகுதி உள்ளவர்களுக்குத் தொழில் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்ற சமகாலத்தில், வேறு யாராவது ஒரு புதுநபருக்கு, அதிக விலைபேசி, தொழிலொன்று விற்கப்படுவதாக நிறைய கதைகள் உள்ளன.

 அதேபோன்று, தமது வெற்றிக்காகப் பங்களிப்பு வழங்கியவருக்கு, சன்மானமாக வழங்கப்படுகின்ற அரச தொழில்களும் சிலநேரம் வேறு மூன்றாம் நபர்களுக்குக் கைமாற்றப்படுவதாக அறிய முடிகின்றது.இது பாரதரமான மோசடியும் ஊழலுமாகும்.

தொழில் என்பது, இளைஞர்களுக்குக் கனவாகும். அவர்களது குடும்பத்துக்கு வாழ்வாதாரமாகும். அதற்காகப் பாடுபடுவதற்குச் செலவு ஏற்படும் என்பது உண்மைதான். அதற்காக ‘இத்தனை இலட்சம் தந்தால்த்தான் தொழில் தருவோம்’ என்று சொல்லிப் பணம் வாங்குவதும், பணம் இல்லாத ஏழைகள் புறக்கணிக்கப்படுவதும், பணம் அதிகமாகத் தருகின்ற தகுதியற்ற இளைஞர்களுக்கு, அரச துறையில் தொழில் வழங்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இதுவும் ஒரு ‘மாபியா’ போல, தொடர்ந்து முஸ்லிம் அரசியலுக்குள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

எனவே, முஸ்லிம் தலைவர்களும் அமைச்சர்களும் தமக்குள் உள்ளக விசாரணைகளை நடத்த வேண்டும். அப்போதும் திருந்தாத பட்சத்தில், இது தொடர்பாக, அரசாங்கம் கவனம் செலுத்துவது தார்மீகக் கடமையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .