2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விவசாயத்தை மீளக்கட்டமைத்தல்

Ahilan Kadirgamar   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியின் பொருளாதாரம், பிரதானமாக விவசாயம் சார்ந்ததாகும். மேலும் யுத்தம் முடிவடைந்தபின்னர், இந்தப் பொருளாதாரத்தின் மீட்சி, எதிர்கொள்ளும் சவால்களும், விவசாயம் சார்ந்ததாகவே உள்ளன.

வடக்கில், போரானது, தசாப்தங்களாக விவசாய உற்பத்தியை பாதித்த வேளையில், யுத்தத்துக்குப் பின்னரான காலம் கூட, ஆறுதலளிப்பதாக இல்லை. இரண்டு வருடங்களாகக் காணப்படும் வரட்சி, வடபகுதி விவசாயிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. 

முன்னைய ஆண்டுகளிலும், காலம் தவறிய மழை, வௌ்ளம், பயிர்நோய்கள் ஆகியவையும், வடமாகாண விவசாயிகளை முடங்கச் செய்தன. கருத்திலெடுக்கவேண்டிய அளவுக்கு, இந்த இயற்கை அ​னர்த்தங்கள், தவறான கொள்கைகளுடன் தொடர்பானதாகவும் உள்ளன.

குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட விவசாய பொருளாத​ரத்தை, மீளக் கட்டியெழுப்புதலில், தவறான கொள்கைகள் கடைப் பிடிக்கப்பட்டன. கிராமிய வாழ்வாதாரத்தின் சிதைவும் உணவு கட்டுப்படியாகாமல் போன படுமோசமான வறுமையும், இதன் விளைவுகளாயின.   

விவசாயிகளின் இந்த நிலைமைக்கு, காலநிலை மாற்றத்தை காரணமாகக் காட்டுவது, மிகவும் பலவீனமான வாதமாகும். காலநிலை மாற்றம் காரணமாக, சீரற்று வானிலை காணப்படுதல், ஏற்கெனவே தெரிந்த விடயம். அடிக்கடி வரும் வரட்சியும் காலம் தவறி வரும் பெரு மழையும், விவசாயத்துக்கு பெரும் அழிவை கொண்டு வருவன.

ஆயினும், விவசாயம், மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உண்டான தேசிய பிரச்சினைகள் மற்றும் விவசாய உற்பத்தி வீழ்ச்சி போன்றவற்றுக்கான தீர்வுகளை, அரசாங்கமே காணவேண்டும்.

சில சுதந்திர வர்த்தக நவதாரளவாத கடுங்கோட்பாளர்கள், விவசாய பொருட்களை இறக்குமதி செய்தல் போன்ற இலகுவான தீர்வுகளை முன்மொழியக்கூடும். ஆனால், அது விவசாயத்தில் தங்கியுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதார பிரச்சினையையோ அல்லது விலை, உலக சந்தையில் தளம்பும் பிரச்சினையையோ, தீர்க்கப்போவதில்லை.

உணவின் பற்றாக்குறைக்கும் உணவு விலைகளில் உண்டான பாரிய ஏற்றத்துக்கும் இட்டுச் சென்ற 2007-2008 கால உலக உணவு நெருக்கடி, தேசிய உணவுத் தேவையில், குறித்த ஒரு மட்டத்திலான சுய தேவைப் பூர்த்தியின் முக்கியத்துவத்தை நிராகரித்தவர்களுக்கு, ஓர் அதிர்ச்சித் தகவலை வழங்கியது.   

எனது கருத்து யாதெனில், விவசாய அபிவிருத்திக்கான தொலைநோக்கு இல்லாதிருந்தமையும் விவசாயத்தில் அரசாங்கத்தின் முதலீடு சொற்பமானதாக இருந்தமையுமே, விவசாய பிரச்சினையின் மூலக்காரணம் ஆகும். முதலீடு இல்லாதவிடத்து, விவசாயத்துறை வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும்.

அத்துடன், உற்பத்தித் திறனும் அதிகரிக்காது. வரட்சியானது, உணவு இறக்குமதிக்கான செலவை 800 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரிக்கும் எனவும் இதனால் சென்மதி நிலுவைப் பிரச்சினை மோசமடையும் எனவும் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.

வேறு பல பொருட்கள் போலன்றி, உணவின்றி பட்டினியாக இருக்கும்படி யாரும் மக்களைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாடும், அராஜகத்திலிருந்து, “மூன்று வேளை உணவு” தூரத்திலேயே, உள்ளது என்ற பொன்​மொழி இங்கு கவனிக்கப்படவேண்டியது.   

யாழ்ப்பாணத்தில் காசுப்பணியர்கள்

1960கள், 1970களில், யாழ்ப்பாணம், மிளகாய் மற்றும் வெங்காயம் உட்பட காசுப்பயிர்கள் செழிப்பை அனுபவித்தது. இன்றும் கூட, யாழ்ப்பாண விவசாயிகள், அந்த நாட்களை நினைவில் வைத்திருப்பதுடன், தாம் அப்போதுதான் முதல் தடவையாக, சீமெந்து வீடுகளை கட்டியதெனவும் கூறுகின்றனர். நவதாராளவாத பொருளியலாளர்கள், அந்தக் கால விவசாய செழிப்பை, 1970களின் பாதுகாப்பு கொள்கைகளின் விளைவு என நிராகரித்து விடுகின்றனர்.   

உண்மை என்னவெனில், யாழ்ப்பாணத்தின் அந்த விவசாய செழிப்பு, ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ​தோற்றத்துக்கு, முன்னர் காணப்பட்ட ஒன்று. மேலும், 1970களில், ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை.

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களுக்கான மெய் விலைகளின் வீழ்ச்சியும் இடது அரசியல் பக்கம் சாய்ந்தமைக்காக இலங்கையை தண்டிக்க, மேற்கு வல்லரசுகள் முழுமையாக அபிவிருத்தி உதவியை தடை செய்தமையும், விவசாய இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமைகளை தோற்றுவித்தன.

இறக்குமதி மீதான கட்டுப்பாடு மாத்திரம், யாழ்ப்பாணத்தின் காசுப்பயிர் செழிப்பை விளக்கமாட்டாது. நாட்டின் வேறுபகுதி விவசாயிகள், இவ்வளவு தூரம் நன்மை அடையாதவிடத்து, யாழ்ப்பாண விவசாயிகள் நன்மையடைந்தது ஏன்? அவை போன்ற கேள்விகள், நியூட்டன் கணசிங்க உட்பட இலங்கையின் முன்னணி சமூக விஞ்ஞானிகளால், 1980 - 1982 இல் ஆராயப்பட்டுள்ளன.

இவர்களுடைய ஆய்வுகள், சாள்ஸ் அபேசேகரவால் செம்மைப்படுத்தப்பட்டு, மூலதனமும் விவசாய உற்பத்தியும்: இலங்கையில் கம கட்டமைப்புகளின் தொடர்ச்சியும் தொடர்ச்சியின்மையும் என, தலைப்பிட்டு, 1985இல், வெளியிடப்பட்டது.

குணசிங்க, யாழ்ப்பாண விவசாயிகள் பற்றி தனது ஆய்வில், பின்வரும் விடயங்களை பகுப்பாய்வு செய்தார். விவசாய உபகரணங்களில், முதலீட்டு மட்டங்கள், ஊழிய நடைமுறைகளின் செறிவாக்கம், குறிப்பான நிலம்சார்ந்த சமூக உறவுகள் என்பவற்றை, யாழ்ப்பாண விவசாய செழிப்புக்கு, பங்களித்த காரணிகள் என, குணசிங்க கூறியுள்ளார். இலங்கையில் காணப்படும், வித்தியாசமான கம முறைகளை ஒப்பிட்ட குணசிங்க, தான் யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்த ஒரு கி​ரா​மத்தை- “ வளர்ச்சிக்கான பலமான இயலுமையை கொண்ட கம முறைமை” என கூறியுள்ளார்.   

நன்கொடையாளர்களின் அழுத்தம்

இன்றைய பொருளியலாளர்கள் பற்றியது போன்றே, எமது விவசாய கொள்கையிலும் உள்ள பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்திய கமத் தொழில் பற்றிய உண்மையான ஆழமான ஆய்வுகள், மிக மிகக் குறைவாகவே உள்ளன. இதனால், விவாசாய அபிவிருத்திக்கான மாற்று தொலை நோக்குகளும் மிக மிக குறைவாகவே உள்ளன.

இலங்கையின் விவசாயம் தொடர்பான கருத்து, உலக வங்கியின் கோட்பாடு ரீதியான பரிந்துரைகளுக்கும் விவசாயத்தில் வர்த்தக தராளமயமாக்கல் எனும் அதன் பரிந்துரைகளுக்கும் இலகுவாக சரணடைவதாகவே உள்ளது. உண்மை ​என்னெவெனில், பேரண்ட பொருளாதார கரிசனங்களிலிருந்தோ அல்லது எமது பிரஜைகளின் தேவைப்பாடுகளிலிருந்தோ, விவசாய உற்பத்தியை கைவிடமுடியாது.   

இலங்கையின் பொருளாதார கொள்கைகள், நன்கொடையாளர்களின் விருப்ப தெரிவுகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் ஒத்துப் போவதாகவே உள்ளன. அரச செலவினம் கூட, நன்​கொடையாளர்களாலேயே, வழிப்படுத்தப்படுகின்றது.

நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கை 2016இன் படி, ஐக்கிய அமெரிக்காவினால் மொத்த, உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்ட 1640 மில்லியன் அமெரிக்க டொலரில், 15 மில்லியன் மட்டுமே, விவசாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது, 1 சதவீதத்திலும் குறைவானது. விவசாயம் மீதான அரசாங்கத்தின் செலவினத்தைப் பார்த்தாலும் நி​ைலமை அதிகம் வித்தியாசப்படவில்லை. 2017க்கான வரவு-செலவுத் திட்டத்தில், மொத்த ​அரச மூலதன செலவில் 5 சதவீதம் மட்டுமே விவசாயம், மீன்பிடி, பெருந்தோட்டத்துறை, மந்தை வளர்ப்பு என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் பற்றிய தேசிய கருத்தே, யுத்தத்தால் அழிந்த வடக்கில், விவசாயத்தை மீள்கட்டமைப்பு செய்யும் முறையைத் தீர்மானிக்கின்றது. நிதியமைச்சரின் தரவுகளின்படி, 2009-2013 இடையில், அரசாங்க மற்றும் நன்கொடையாளர் மூலதனம் வடமாகாணத்தில் 221 பில்லியன் ரூபாயாக இருந்தது.

இதில் 8 சதவீதம் மட்டுமே, இப்பகுதியின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளான விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.   

மாற்று வழிகளை நோக்கி

இலங்கையில், குறிப்பாக வட மாகாணத்தில், நிலையான அபிவிருத்தி என்ற கண்ணோட்டத்தில், விவசாயம் மீதான முதலீட்டும் மற்றும் விவசாயக் கொள்கை தொலைநோக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

ஆயினும், முற்போக்கான எண்ணக்கருக்கள் சம்பந்தமானவைப் போலவே, நிலையான அபிவிருத்தியும் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலினால் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், நிலையான அபிவிருத்தி என்பதுவும், வர்த்தக மயமாக்கப்பட்டு, ஏற்றுமதிப் பெறுமதிச் சங்கிலிகளுடன் தொடுக்கப்படுகின்றது.

விவசாயத்தில், ஏற்றுமதிகளின் அதிகரிப்புடன் இணைக்கப்பட்ட பெறுமதி கூட்டல், நாட்டின் வெளிநாட்டு நிதிகையிருப்புக்குச் சாதகமானது எனினும், கிராமிய, பிராந்திய, தேசிய மட்டங்களில், சுய தேவைப்பூர்த்தி அடையப் படாதபோது, விவசாயமானது இலாபமீட்டும் பெருங்கம்பனிகளினது விருப்புக்கும், உலகச் சந்தையின் பாரிய தளம்பல்களுக்கும் பலியாகும்.   

விவசாய உற்பத்தியினதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் அதிகரிப்புக்கும் முதலீடு அத்தியாவசியமானதாகும். உதாரணமாக, வடக்கிலும் தெற்கிலும் அரசாங்க ஆதரவுடன் நடைபெறும் பரீட்சார்த்தமான துல்லிய விவசாயம் (Precision) குறிப்பாக தூவல் நீர்ப்பாசனம், நீரைமீதப்படுத்தவும் உரப்பாவனையை குறைக்கவும், உற்பத்தியைக் கூட்டவும் பயன்படுகின்றது.

களஞ்சியம், குளிரூட்டல், பதப்படுத்தல் வசதிகள் உள்ளூர் மட்டத்தில் பெறுமதி கூட்டலை உறுதிப்படுத்த அவசியமாகவுள்ளன. இது, விவசாயிகள் தோட்ட வாசலில் பெறும் அற்ப விலையுடன் ஒப்பிடுமிடத்து, ஒரு நியாயமான விலையைப் பெற வழிவகுக்கும். அரசாங்கமும் விவசாயத்தில் காணப்படும் பாரிய தளம்பல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதற்காக, இறக்குமதிக்கட்டுப்பாடுகள், சிறந்தத் திட்டமிடல் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்துக்கான விரிவாக்கல் சேவைகளையும் அரசாங்க செயற்படுத்த வேண்டும். சுருங்கக் கூறின், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே, வடக்கிலும் விவசாயத்தின் புத்துருவாக்கம் தேவையாகின்றது.

இது, நம்பகரமான தேசியத் தொலைநோக்கு மற்றும் கொள்கை என்பவற்றோடு இணைந்து வரும் உள்நாட்டு முதலீட்டின் பெரும் அதிகரிப்பினாலேயே, சாத்தியமாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .