2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அதிரதன்   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள்.

நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை.  இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது.  

இதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும்.

“நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத்துடன் சம்பந்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதத்தில் மாத்திரம்  நான்கு  மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  இதற்கு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வௌிநாடுதான் மூலம்.

நிதிப்பிரச்சினை என்பது எல்லோருக்கும்  பொதுவானதே. இதை நிவர்த்தி செய்து கொள்வதில், இப்போதெல்லாம் வழிகளைத் தேடிக் கொள்வதற்கு யாருமே சிந்திப்பதில்லை.  இதற்குத்தான் இப்போது வழி தேவைப்படுகிறது. பல்வேறு அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்னமும் அனைத்து மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதுடன், வழிகளைக் காட்டவும்தான் முடியவில்லை.

“இலகுவில் அல்லது விரைவாக, நானும் பணக்காரனாக வேண்டும்” என்ற மிதமிஞ்சிய ஆசை யாருக்குத்தான் இல்லை? அந்த ஆசை இல்லாதவன் உலக வாழ்க்கையைத் துறந்தவனாகத்தான் இருப்பான். அரபுக்கதைகள், சுய நம்பிக்கைக் கதைகளில், “தேவதை வந்தாள், அறிவின்மை காரணமாகப் பிழையானதைக் கேட்டு வீணாகிப் போனாள்”, “தங்க முட்டையிடும் கோழியைத் தினமும் வைத்துப் பயன்பெற முடியாத பேராசை கொண்டு அழிந்து கொண்டான்” என்றெல்லாம் படித்து இருக்கிறோம். ஆசை, அவ்வளவுக்கு அறிவை மழுங்கச் செய்துவிடுகின்றது என்ற விடயம் இதிலுண்டு.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தன் உயிரையும் குழந்தைகளையும் உறவினர்களையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்றிருந்த தமிழ் மக்கள், யுத்த நிறைவுக்கு வந்தபின்னர், மேற்கு நாடுகளைக் குறிவைத்து, உயிரைப் பணயம் வைத்துச் சட்டவிரோதமாகப் பயணங்களை மேற்கொண்டனர்; மேற்கொண்டும் வருகிறார்கள்.

 இதில் முதலிடத்தில், அவுஸ்திரேலியப் பயணங்கள் தொடர்பான கதைகளைச் சேர்க்கவேண்டும்.  அதேபோன்று நியூசிலாந்து இப்போது சேர்ந்திருக்கிறது. தற்போதும் அதிக பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களும் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் சிறைகளில் வாடுபவர்களும் பொலிஸ் நிலையங்களே வாழ்க்கையென்று விசாரணைகளுக்காக  அலைபவர்களும் இருக்கிறார்கள்.

சமூகங்கள் பல நிலைப்பட்டு இருக்கின்றன. அவற்றில் வசதி படைத்தவர்களிடம், குடும்பத்தை மிகவும் சுகபோகமாக வாழ்வதற்குப் பணமிருக்கிறது. இருந்தாலும், அடுத்த நிலையில் இருக்கின்ற நடுத்தர மக்களுக்கு, தாமும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இந்தக்கனவு, அவர்களைப் “தலையைக் கொண்டுபோகும்” பலவிதமான  முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. இதே போன்றே, மிகவும் வசதிகுறைந்த வறிய மக்கள், நடுத்தர மக்கள் போன்றாவது வாழ வேண்டும் என்றே எண்ணங் கொண்டிருக்கின்றனர்.  இதில்தான், எங்கு கடன் பட்டேனும் நாமும் வசதியாகிவிடுவோம் என்று முயல்கிறார்கள்.

இந்தநிலையை ஏற்படுத்த உதவுவதாக, அன்றாடம் உழைத்து வாழும் சமூகங்களுக்குள் செல்லும் நுண்கடன் நிறுவனங்கள், தங்களது ஆசைவார்த்தைகளால் தங்களுடைய திட்டங்களுக்குள்  அவர்களைச் சிக்கவைத்து,  அதனால் ஏற்பட்ட  மரணங்கள் பற்றிய கதைகள் நிறையவே இருக்கின்றன.  

இதேபோன்று, வங்கிகளின் கடன் வழங்கும் முறைகளும் இருக்கின்றன. நிதி நிறுவனங்கள்  கடன் வழங்கி பல்வேறு கலாசாரம் சார் பிறழ்வுகள் வருகின்றன என்ற பிரச்சினை எழுந்தமையினால், இப்பொழுது பெண்களையும் வசூலிப்பில் பயன்படுத்துதல் நடைபெறுகிறது.

இந்த இடத்தில்தான் குடும்பத்தில் பெண்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத்தலைவன் வெளிநாடு செல்லுதல் என்பவை இன்னொரு பிரச்சினையாக இருக்கிறது. 
முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லப் புறப்படும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான நெருக்குதல்கள், குடும்பப் பிரச்சினைகளுக்குள் மறைந்து போகின்றன. 

 குடும்பப்பெண்கள் மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பத்தில் குழந்தைகள், பிள்ளைகள், குடும்பத்தலைவன் போன்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உளவியல் சார் குழப்பங்கள் ஒருபக்கமிருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக, குடும்பத்தின் தலைவன் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதனால்,  பெண்களுக்கு பல்வேறு உளவியல்சார், பாதுகாப்புசார், மனோநிலைசார், உணர்ச்சிசார் தேவைகளால் உருவாகும் உறவுகள், வேறு விதமான பிரச்சினைகளைக் கொண்டு வருகின்றன.

இது போன்ற விடயங்கள்தான், கடந்த  ஒக்டோபருக்கும் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள்ளும் நான்கு உயிர்களைப் பலி எடுத்திருக்கின்றன. இரண்டு மரணங்கள், பாலியல்சார் பிரச்சினையால் ஏற்பட்டிருக்கின்றன. 

அடுத்த இரண்டு கொலைகள், கொள்ளைக் குற்றச் செயலால் ஏற்பட்டிருக்கிறது.  திருட்டுச் சம்பவங்கள் நிறையவே நடைபெற்றிருந்தாலும், இது கொலைகள் சார்ந்தும் மரணங்கள் சார்ந்தும் மாத்திரமே பார்க்கப்படுகிறது. இதில் நுண்கடன் நிறுவனங்களின் தொல்லையால் ஏற்பட்ட மரணங்களும் ஆராயப்படவில்லை.

முதலில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டக்களப்பின் மண்முனை தென்மேற்கு- கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில், கணவன், வெளிநாடு சென்றிருந்த இளம் குடும்பம் ஒன்றின் தாய், தற்கொலை செய்து கொண்டார் என்ற  சம்பவம் இடம்பெற்றிருந்தது.  இவர் ஒரு பிள்ளையின் தாய். இப்போது அந்தப்பிள்ளை, அம்மம்மாவுடன்தான் வசித்து வருகிறது. 

இந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் தங்கையின் நண்பன், அந்தப் பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிவந்த நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட சிக்கலா அல்லது அந்தப் பெண்ணின் மனோநிலைசார் பிரச்சினையா இந்த மரணத்துக்குக் காரணம் என்று, இன்னமும் தெளிவில்லை.  சம்பவம் நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்யவேண்டும்; தண்டனை வழங்கவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கொந்தளித்தனர். பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் விசாரணைகளின் பின்னர் வேறு கதையானது. இப்போது அந்த மரணம், பேச்சற்றதாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும்,  இது ஒரு பாலியல்சார் பிரச்சினையால் உருவான மரணமாகவே கொள்ள முடிகிறது. ஓர் இளம் குடும்பத்தில் கணவன் இல்லாத நிலையானது மிகவும் சிக்கலானதும், யாரையும் பிழையான அணுகலுக்கு உந்துவதாகவுமே இருக்கும். இதனையாரும் மறுக்க முடியாது. 

இந்த விதமானதொரு சிக்கலே உருவாகியிருக்கிறது. அதற்கு அண்டிய வீடுகளிலுள்ளவர்கள்  அச்சம்பவத்துக்கு முன்னர் குழம்பியிருந்த சந்தர்ப்பங்களைச் சொல்ல முடியும். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சம்பந்தப்பட்ட இளைஞன் வந்து செல்வது உறவினர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும், ஒரு கதை இருக்கிறது. எப்படியிருந்தாலும் கணவன் வெளிநாடு சென்றதனால் ஏற்பட்டதொரு மரணம் என்றே இதனைக் கொள்ள முடியும்.

இதேபோன்று பாலியல்சார் சிக்கலொன்றால், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை - நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றிருக்கிறது.

வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றே எல்லோரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைக்கு வெறும் சண்டை காரணமல்ல.

கணவன் வெளிநாடு சென்ற குடும்பத்தின் பெண் ஒருவருடன், அப்பகுதிக்கு வந்து செல்லும் தென்னங்கள் எடுக்கின்ற தொழிலில் ஈடுபடும் ஒருவர் தொடர்பிலிருந்திருக்கிறார். பல தடவைகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இது தவறு என்று கூறி வந்திருக்கின்றனர். 

ஆனால், அந்தத் தொடர்பு நிறுத்தப்பட்டபாடில்லை. சம்பவ தினமும் அவர் அங்கு வந்திருக்கிறார். பிரதேச இளைஞர்கள் ஒரு சிலர், இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருக்கின்றனர். அவ்வேளை வந்த சண்டையில் கள் இறக்குவதற்காகத் தென்னம் பாளை சீவும் கத்தியால் வெட்டப்பட்டு, 18 வயது இளைஞன் பலியானான். 

கடந்தகாலங்களில், வடக்கு, கிழக்கில் அதுவும் தமிழர்கள் விடயத்தில், எல்லாவற்றுக்கும் யுத்தத்தின் பெயரால் காரணம் காட்டுவது இல்லாமல் போயிருக்கிறது. இது போற்றத்தக்க நல்ல விடயம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 


அதேபோன்று, இளைஞர்கள் மத்தியில் சமூகம்சார் விழிப்புணர்வும் இல்லாமல் தான் போயிருந்தது. அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும், முன்வருகை அல்லது பொது விடயங்களில் ஈடுபடுதல் இல்லாமல் இருந்தது. இப்போது உருவாகியிருக்கும் சுமூகமான சூழல் இதனைச் சற்று உத்வேகமடையச் செய்திருக்கிறது. 

இளைஞர் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வு   இருந்தாலும், சமூகத்திலுள்ளவர்களிடம் முந்திக் கொண்டிருந்தாலும் கிராமங்களின் வாழ்வு எல்லாவற்றையும் தூக்கி வீசிவிடுகிறது. இதனைத்தான் வெளிநாடு என்கிற ஒன்று பிடித்துக் கொள்கிறது. அதனுடன் இணைந்து கலாசாரச் சீர்கேடான பாலியலும் இணைந்து கொள்கிறது.

பெரும்பாலும் கணவன் வெளிநாடுகளுக்குச் சென்ற குடும்பங்களில், பின்தங்கிய பகுதிகளில், இத்தகைய கலாசாரச் சீர்கேடு அதிகம் இருக்கிறது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தவிரவும் கிராமத்திலிருந்து தூர இடங்களுக்கும், வேறு கிராமங்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களிலும், இவ்வாறான கலாசாரச் சீர்கேடு என்கிற பாலியல் தொழில்கள் இல்லாமலில்லை. 

கூடுதலாக ஆண்கள் வெளிநாடுகள் என்று சொல்லுகிற மத்திய கிழக்குக்குக்குச் செல்பவர்களின் குடும்பங்களில் நடக்கிறது. அது கொலை, மரணம் வரை கொண்டு செல்வதுதான் கவலை. 

இதன் அடுத்தபடியாகத்தான், ஆண்கள் என்கிற குடும்பத்தலைவன் இல்லாத வீட்டுப் பெண்கள், அதுவும் வெளிநாட்டில் இருக்கிறவர்களின் பெண்கள், முச்சக்கர வண்டிகளையே அதிகம் பயன்படுத்தவது வழக்கம்.

இலகு, நம்பிக்கை என்றெல்லாம் இதற்குப் பல காரணங்கள் சொல்வதுண்டு. இந்த விடயங்களின் காரணமாகத் தாயும் மகனும் கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஏறாவூர் பற்று பிரதேசத்தின் சவுக்கடியில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

இந்த இரட்டைக் கொலையுடன் உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், இறுதியில் தாயும் மகனும் அல்லது தாய் மாத்திரம் வழக்கமாகப் பயன்படுத்தும் வாகனம் முச்சக்கர வண்டி. அந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் மற்றொருவரும் இணைந்து மேற்கொண்டது கொள்ளை முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது தடுப்பிலுள்ளார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

மரணமான பெண், சம்பவ தினம் வழமையாக வாடகைக்கு அமர்த்தும் முச்சக்கர வண்டியில் சென்று, நகைகளை மீட்டுக் கொண்டு, மிகுதிப்பணத்துடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

இவரது நடவடிக்கைகள், பணப்பரிமாற்றம், நகைகள் என்பவற்றைப் பார்த்த முச்சக்கர வண்டிச்சாரதி, அவரது நண்பருடன் இணைந்து, அன்றிரவு வீட்டின் கூரை ஊடாக உள்ளே நுழைந்து தாயையும் மகனையும் கொலை செய்து விட்டு, நகை, பணம் என்பவற்றைக் கொள்ளையடுத்துவிட்டுத் தலைமறைவாகியிருந்தனர். 

இருந்தாலும், பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் கொலைகாரர்களைத்தேடிப் பல வலைகளை விரித்துக் கண்டு பிடித்தார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற கொலைகளுக்குத் தண்டனைகள் கிடைத்தாலும் மரணமானவர்கள் திரும்பி வரப்போவதில்லை.

நம்பிக்கையின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் சென்றுவரும் எத்தனையோ பெண்கள், இப்போது மனப் பயத்தில் இருக்கிறார்கள். குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அவருடைய நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து செய்திருக்கும் கொடூரம் அப்படிப்பட்டதல்லவா? நம்பிக்கையுடன் வாழ்வையும் பயணங்களையும் நடத்தும் அத்தனைபேரும், இவ்வாறானவர்களால் சிந்திக்கவேண்டித்தான் இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணங்கள் தேடவேண்டியதில்லை. குடும்பங்கள் என்பவை, கணவன் - மனைவியின் இணை பிரியாத ஒன்று என்பதும் ஒருவருக்கு ஒருவரே பாதுகாப்பென்பதும் பண்பாடு, பாரம்பரியம், சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கிறது. இதனை மறந்து, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கமைய, இப்போதைய சூழலுக்கேற்றவாறு வாழ முனைவது, வாழ்க்கையைச் சிலசந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாகவே மாற்றிவிடுகிறது.

வெளிநாட்டு மோக ஆசைக்குத் தீர்வு வேண்டுமாக இருந்தால், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதுடன் உறவினர்களினதும் விழிப்புணவர்வு தேவையாகும். மாற்றம் மனங்களில் ஏற்படாத வரையில், கிராமத்தில், மாவட்டத்தில், நாட்டில் இல்லாத தொழிலைத் தேடி வெளிநாடுதான் செல்வோம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .