2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஜூன் 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது.   

அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த பல விளக்கங்கள் இருந்துள்ளன. அவையும் ஒருமனதானதாக இருந்ததில்லை.   

இன்று ஜனநாயகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், வெறுமனே ஜனநாயகத்தை மட்டும் விளக்குவனவல்ல. நாம் வாழும் சூழலையும் அதன் அரசியல் போக்கையும் நோக்கையும் கூட விளக்குகின்றன.   

இதனால், ஜனநாயகம் குறித்த வினாக்களும் விடைகளும், நாம் வாழும் உலகின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தை விளங்க உதவும்.   

கடந்த மாதம், வெனிசுவேலாவில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி நிக்கலெஸ் மடூரா மீண்டும் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகி உள்ளார். வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பை, அமெரிக்கா இழந்துள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைகள் குறைப்படுகின்றன.   

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், சரியும் எண்ணெய் விலைகள் என்பன, வெனிசுவேலாப் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள நிலையிலும், ஜனாதிபதி மடூராவை, வெனிசுவேலா மக்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளார்கள்.   

வெனிசுவேலாவில் சர்வாதிகாரமும் கொடுமையான அடக்குமுறையும் நிலவுகிறது. மக்கள் ஆட்சியாளர்களை வன்மையாக எதிர்க்கிறார்கள்.  அரசாங்கத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் நிகழ்கின்றன. 

இதுவே வெனிசுவேலா பற்றி, எமக்கு ஊடகங்கள் தொடர்ந்து வழங்கி வரும் சித்திரம். 
அப்படிப்பட்ட ஓர் ஆட்சியை, அந்நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள் என்றால், எமக்கு வழங்கப்பட்டுள்ள சித்திரத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது.   

வெனிசுவேலா, பொருளாதார நெருக்கடியில் இருப்பது உண்மை. எண்ணெய் மையப் பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்ட வெனிசுவேலாவில், சரிந்துள்ள எண்ணெய் விலைகள், பாரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன.  

 சமூக நல அரசாங்கமாக ‘பொலிவாரியப் புரட்சி’யின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸ், அறிமுகப்படுத்திய சமூக நலத்திட்டங்களை, முழுமையாக வழங்க இயலாமல் அரசாங்கமும் மடூராவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.  

 அதேபோல, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி மடூரா, மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதை நோக்க வேண்டும்.   

கொள்கை வகுப்பாளர்கள் கோரும் ஆட்சிமாற்றம்   

அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றதும் செல்வாக்கு மிக்கதுமான ‘Foreign Policy’ சஞ்சிகை, அமெரிக்காவின் வௌியுறவுக் கொள்கை தொடர்பான சிந்தனைகளின் மையம் என அறியப்படுவது.   

அச்சஞ்சிகையின் அண்மைய இதழ், வெளிப்படையாகவே வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கோரி நின்றது. ‘It’s Time for a Coup in Venezuela’ என்று தலைப்பிட்ட கட்டுரையின் உப - தலையங்கம், ‘இராணுவத்தில் உள்ள தேசியவாதிகளால் மட்டுமே, சட்டரீதியான அரசமைப்பு ஜனநாயகத்தை மீளநிலைநாட்ட முடியும் (Only nationalists in the military can restore a legitimate constitutional democracy) என்று கோருகிறது.   

‘Foreign Policy’ சஞ்சிகையிலுள்ள இக்கட்டுரை, மூன்று முக்கிய விடயங்களைச் சொல்கிறது.   
முதலாவது, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக ஏங்குகிறார்கள். இப்போது அவர்கள், அதை வெளிப்படையாகக் கூறுவது, அவர்களின் இயலாமை மற்றும் ஆற்றாமையின் வெளிப்பாடாகும்.   

அதேவேளை, ஆட்சிமாற்றத்தை வெளிப்படையாகக் கோருவதானது, அமெரிக்காவின் கொள்கை வகுப்புக் கட்டமைப்பின் உயரடுக்குகளில் உள்ளவர்களுக்கு, அதற்கான விருப்பு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்க முடியும். எனவே, அமெரிக்க அரசாங்கமானது, அவசரமாக ஆட்சிமாற்றம் ஒன்றுக்கு முயல்கிறது. 

அண்மைய தேர்தலில், ஜனாதிபதி நிக்கலெஸ் மடூராவின் வெற்றியானது, அமெரிக்காவை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.   

இரண்டாவது, வெனிசுவேலா இராணுவத்தில் உள்ள தேசியவாதிகளை, ஆட்சிக்கவிழ்ப்புக்கு முனையுமாறு கோருகிறது.   

வெனிசுவேலாவில் ஆட்சிமாற்றத்தைச் சாத்தியமாக்கக்கூடிய ஒரே தரப்பு, வெனிசுவேலா இராணுவமேயன்றி, மக்கள் அல்ல என்ற முடிவை, இக்கட்டுரை அறிவிக்கிறது.   

அதேவேளை, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஜனநாயகத்தின் பெயரால், இராணுவத்தில் உள்ள நேசசக்திகளுடன் இணைந்து, ஆட்சிமாற்றமொன்றை உருவாக்க வேண்டும். இது அவசியமானதும் அவசரமானதுமாகும். இல்லையெனில், இன்னொரு கியூபாவை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என, இக்கட்டுரை அமெரிக்க வௌியுறவுக்  கொள்கை வகுப்பாளர்களை எச்சரிக்கிறது.   

மூன்றாவது, ஆட்சிக் கவிழ்ப்பை ஜனநாயகத்தின் பெயரால் நிறுவ வேண்டும் என்று, இக்கட்டுரை வாதிடுகிறது. அதைச் செய்யாது விட்டால், இன்னொரு மோசமான சர்வாதிகாரம், இலத்தீன் அமெரிக்காவில் தோற்றம் பெறும் என்றும், இது 1980களில் இருந்த இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரங்கள் போலவாகிவிடும் என்றும் இக்கட்டுரையில் எச்சரிக்கப்படுகிறது.    

ஆனால், 1970 மற்றும் 80களில் இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரங்கள் அனைத்தும், அமெரிக்க ஆசீர்வாதத்துடனேயே உருவாக்கப்பட்டு, வழிநடாத்தப்பட்டன என்ற கதையை, இக்கட்டுரை சொல்லவில்லை.   

இராணுவத்தின் மூலம், ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பது ‘பழைய பாணி’; 1970களில் இதே பாணியில் தான், ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை, இராணுவப்புரட்சி மூலம், இலத்தீன் அமெரிக்கா எங்கும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அகற்றியது.   

சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள அக்கட்டுரை, இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பிலான தகவல்களை, நோக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டுகிறது.   

முதலாவது, வெனிசுவேலா இராணுவத்தின் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது என்பதாகும். 
இரண்டாவது, மூன்றாமுலக நாடுகளில், மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வாறு முடிவுகட்டப்படுகின்றது என்பது தொடர்பிலானது.   

இராணுவச்சதியை மக்கள் முறியடித்த கதை  

சஞ்சிகை கோருவது போன்றதோர் இராணுவச்சதி, 2002ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் அரங்கேறியுள்ளது.   
அந்தக் கதை சுவையானது. 1998ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஹியூகோ சாவேஸ், சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையை உயர்த்தி, அதை மக்கள் நலனுக்குத் திருப்பி விட்டார்.   

அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில், சர்வதேச தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாகச் சட்டமியற்றினார். 2001இல் சாவேஸ், 49 மக்கள் நலச் சட்டங்களை நிறைவேற்றினார்.  

 பெரும் பண்ணையார்களிடம் உபரியாக இருந்த நிலங்களைப் பெற்று, நிலமற்றோருக்கு விநியோகிப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.    இச்சீர்திருத்தங்களைத் தடையின்றி நிறைவேற்ற, அரசாங்கத்துக்கு முழு அதிகாரமளிக்கும் சட்டத்திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.  

எதிர்க்கட்சிகள், சாவேஸ் ஜனநாயகத்துக்கு விரோதமாக அதிகாரத்தைத் தம்மிடம் குவித்து, சர்வாதிகாரியாக மாறிவருவதாகக் குற்றம் சுமத்தி, போராட்டங்களில் ஈடுபட்டன.  

2002 பெப்ரவரியில், விமானப்படையின் கேர்னல் ஒருவரின் தலைமையில், இராணுவத்தின் ஒரு பிரிவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.   

சாவேஸ், இராணுவத்தைச் சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி விட்டதாகவும், மக்களின் நம்பிக்கையை அவர் இழந்து விட்டதாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவ உயரதிகாரிகள் பேட்டியளித்திருந்தனர்.   

2002 ஏப்ரல் ஆறாம் திகதி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில், சர்வதேசக் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட, முறைகேடுகளில் ஈடுபட்ட 19 அதிகாரிகளை, வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சாவேஸ்.   
இதை எதிர்த்து, எண்ணெய் நிறுவனத்தின் அலுவலக ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  நாட்டில் எண்ணெய் உற்பத்தி முடக்கப்பட்டது.    

2002 ஏப்ரல் ஒன்பதாம் திகதி, அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம், குறைந்தளவு ஆதரவையே பெற்ற போதிலும், எண்ணெய் நிறுவன ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்துக்கு, வலதுசாரி தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.  

முன்னரே திட்டமிட்டபடி, போராட்டங்களை ஆதரித்து எல்லா எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.  
 நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள், மற்ற ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் பரவவுமில்லை; பாதிக்கவுமில்லை. 20 உயர்நிலை அதிகாரிகள், “சாவேஸ் பதவி விலக வேண்டும்” எனத் தொலைக்காட்சியில் பேட்டியளித்தனர்.   

இதையடுத்து, ஜனாதிபதி மாளிகைக்குள் இராணுவம் நுழைந்து, சாவேஸைக் கைது செய்தது. சாவேஸ் பதவி விலகிவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன.    

வெனிசுவேலா வர்த்தக சங்கத் தலைவரான பேட்ரோ கர்மோனா தற்காலிக ஜனாதிபதியானார். இவ்வாறாக, ‘மக்கள் போராட்டம்’ என்ற போர்வையில், ஜனாதிபதி சாவேஸ் தூக்கி எறியப்பட்டார்.  

இதன்பின்னர், பதவி இறக்கப்பட்ட தங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக, நாடெங்கிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள், வீதிக்கு வந்தனர். இராணுவமும் பிளவுபட்டது.   

தான் பதவி விலகவில்லை என்றும், சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் தகவலை, இராணுவத்திலுள்ள தனது ஆதரவாளர்கள் மூலம், சாவேஸ்  வெளியிடுகிறார். ஜனாதிபதி மாளிகையைச்  சுற்றி வளைத்த மக்கள், சதிகாரர்களைச் சிறை வைத்தனர்.  

 இராணுவத்திலுள்ள சாவேஸின் ஆதரவுப்பிரிவு, அப்போது உதவிக்கு வந்து, ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து, சதிகாரர்களைக் கைது செய்ததுடன், சாவேஸை மீண்டும் ஜனாதிபதியாக்கியது.  
இதில் கவனிப்புக்கு உரிய விடயம் யாதெனில், இப்போதும் அமெரிக்காவுக்குச் சார்பானவர்கள், வெனிசுவேலா இராணுவத்தில் உள்ளார்கள்.  

சாவேஸ், நீண்டகாலம் இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு இராணுவ வீரர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு.   

அதேயளவு மரியாதையையும் கட்டுப்பாட்டையும், தற்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் மடூரா கொண்டவரல்ல; எனவே, இன்னோர் இராணுவச் சதிக்கான வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க கருதுகிறது.   

சமூக நல அரசின் ஒவ்வாமை  

1998ஆம் ஆண்டு, சாவேஸ் பதவிக்கு வந்தது முதல், வெனிசுவேலாவை ஒரு சமூக நல அரசாக மாற்றினார்.  
 எண்ணெய் வளம்மிக்க வெனிசுவேலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை, ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நின்றார் சாவேஸ்.   

சர்வதேச ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமை ஆக்குவது; இந்நிறுவனங்களில் சர்வதேச முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக, ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும் தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவியமை; நிலச்சீர்திருத்தத்தின் மூலம், விவசாயத்தை உயிர்ப்பித்து, சுயசார்புத் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைத்தமை போன்ற கைங்கரியங்களை சாவேஸ் மேற்கொண்டார்.    

சர்வதேச நிதி முகவர் நிறுவனங்களது நெருக்குவாரங்களால், கடந்த மூன்று தசாப்தங்களாக, மூன்றாம் உலக நாடுகளிலுளள அரசாங்கங்கள், சமூகப் பொறுப்புகளைக் கைவிட்டு வருகின்றன.   

இச் ‘சீர்திருத்தங்கள்’, ‘மீள் கட்டமைத்தல்’ என்கிற பெயர்களில், புதிதாக உருவாகி வந்த முதலாளி வர்க்கத்தில் சர்வதேச மூலதனத்துக்கு, நெருக்கமான பகுதியினரது நெருக்குவாராங்களாலும் நடைபெறுகிறது.   

உலகமயமாக்கல், சுயாதீனமான சந்தை, சந்தைச் சக்திகள், தாராளமயம் போன்றவை முன்தள்ளப்படுகையில், சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பு எனும் வகையில், அரசாங்கத்தின் வகிபாகம், அதாவது நவ தாராளவாதச் சொல்லாடலில் ‘ஆயா அரசு’, உலகில் பரவலாகத் தாக்குதலுக்கு உட்பட்டு உள்ளது.   

இந்நிலையில் சுயசார்புப் பொருளாதாரத்தையும் சமூக நல அரசாங்கத்தையும் வெனிசுவேலா உருவாக்குவதை, அமெரிக்காவும் பல்தேசியக் கம்பெனிகளும் சர்வதேச நிதி மூலதனமும் விரும்பாது. இதனாலேயே ஆட்சிமாற்றமொன்றை நிறைவேற்ற இவை கூட்டாக முனைகின்றன.   

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?  

சாவேஸின் மரணத்தைத் தொடர்ந்து, பதவியேற்ற நிக்கலஸ் மடூரோ, தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வந்திருக்கிறார்.   

ஆனாலும், சமூக நலத்திட்டங்களைச் செய்வதை அவர் நிறுத்தவில்லை.   

குறிப்பாக, வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மில்லியன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  

 இதன் மூலம் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்களுக்குத் தங்குவதற்கான வீடு வழங்கப்பட்டுள்ளது. 32 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதொரு நாட்டில், இவ்வீட்டுத் திட்டம் மிகப்பெரியதாகும்.  

 அதேவேளை, இவ்வீட்டுத்திட்டம் 2019ஆம் ஆண்டு முடிவுக்குள், மேலதிகமாக ஒரு மில்லியன் வீடுகளைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது.   

1980களில் சர்வதேச நிதிநிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டதன் பின்னர் நிகழ்ந்ததை, வெனிசுவேலா மக்கள் அறிவார்கள்.   

அதேபோல, சுயசார்புப் பொருளாதாரமே சமூக நல அரசாக, வெனிசுவேலாவைத் தொடர்ந்து வைத்திருக்கும் என்ற உண்மை, மக்களுக்குப் புரிந்துள்ளது.   

இப்பின்னணியில், ஜனநாயகம் குறித்த கேள்வியை மீண்டுமொரு முறை, நாம் கேட்டுப் பார்க்கலாம்.  
 வெனிசுவேலா மக்கள் விரும்பும் ஜனநாயகத்தை, அவர்கள் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். அந்த ஜனநாயகம், அமெரிக்காவின் விருப்புக்குரியதல்ல. 15 ஆண்டுகளுக்கு முன், ஜ.நாவில் சாவேஸ் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் பகுதியுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது தகும்.   

“நாம், நம்பிக்கையுடன் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. யோசிப்பதற்கான மாற்று வழிகள் உருவாகி விட்டன. வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இளம் தலைமுறை வந்து விட்டது. இவை எல்லாம், கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அதுபோலவே, அமெரிக்கா மற்றும் நவதாராளவாத உலகம் பற்றிய பிம்பங்களும் சிதைந்து விட்டன.   

இந்த வழிமுறைகள், ஏழ்மையையே உற்பத்தி செய்பவை. இதை இனி யாரும் நம்பத் தயாராக இல்லை.  
நாம் இனி, புதிய உலகத்தை வரையறுக்கத் தொடங்கலாம். பொழுது புலரத் தொடங்கிவிட்டது.   

இதை நீங்கள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் காணலாம். இந்த நம்பிக்கையளிக்கும் பார்வையை, நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒரு புதிய படை புறப்பட்டுள்ளது.   
நாங்கள் தெற்கிலிருந்து வந்தவர்கள். இந்தப் பூமியைக் காப்பாற்ற, நமக்குப் புதிய வழிகள் வேண்டும். பூமியை ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றியாக வேண்டும். 

இந்த நூற்றாண்டிலேயே அந்தக் காட்சியை, அந்தக் காலத்தை நாம் விரைவாக எட்டி விடுவோம். அந்தப் புதிய விடியல், நம் குழந்தைகளுக்கானது”.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X