2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஜூன் 06 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   

 வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பாரம்பரிய முறையிலான கரையோர மீன்பிடியையும் நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடியையும் ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாத வகையில் காலங்காலமாகப் பேணி வருகின்றார்கள்.   

கடல் வளத்தை அழிக்கும் தொழில் நடவடிக்கைகளை எந்தவொரு தருணத்திலும் அவர்கள் அனுமதித்திருக்கவில்லை. அப்படியான, மக்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்துக் கொண்டுதான், வெளித்தரப்புகள் ஈட்டிகளை நீட்டி வருகின்றன.  

 தென் இலங்கை, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், 500க்கும் அதிகமான படகுகளில், கடந்த சில மாதங்களாக வடமராட்சிக் கிழக்குக் கடலில் கடலட்டை பிடித்து வருகின்றனர்.  

 கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் பெற்றிருப்பதாகக் கடலட்டை பிடிப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், வடமராட்சி கிழக்கு பகுதியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதியையோ, வாடிகளை அமைப்பதற்கான அனுமதியையோ, மருதங்கேணி பிரதேச செயலகத்திடமோ, பருத்தித்துறைப் பிரதேச சபையிடமோ அல்லது வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்திடமோ அனுமதியைப் பெற்றிருக்கவில்லை.   

இவ்வாறான நிலையில், கடலட்டை பிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்களை நடத்த முனைந்தால், பொலிஸாரும் புலனாய்வாளர்களும் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக, வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறுகின்றனர்.   

 வடமராட்சி கிழக்கு மீனவர்கள், கடல் வளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடி முறைகளுக்கு, எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கின்றார்கள். கணவாய், இறால் பிடிப்புப் பருவத்தில், இலை குழைகளைக் கடலில் போட்டு, அதிகளவான கணவாய்களையும் இறால்களையும் பிடிக்கும் தொழில் முறையொன்று இருக்கின்றது. ஆனாலும், அந்தத் தொழில் முறையால், கடல் வளமும் மீன் இனப்பெருக்கமும் சிதைவடையும் சூழல் இருப்பதால், அதைத் தவிர்த்தே வந்திருக்கின்றார்கள்.    

அத்தோடு, தங்கூசி வலை உள்ளிட்ட எந்தவொரு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையையும் வடராட்சி கிழக்கு மீனவர்கள், முன்னெடுத்ததும் இல்லை; அனுமதித்தும் இல்லை. அப்படியான நிலையில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான படகுகள், வடமராட்சி கிழக்கின் கடல் வளத்தை அப்பட்டமாக அழித்துக் கொண்டிருப்பதை, எவ்வாறு அனுமதிப்பார்கள்?   

 யாழ். மாவட்டத்தில், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி, சில மாதங்களுக்கு முன்னர் வரையில், கடலட்டை பிடிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.   

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்தது.   

அதுவும், கரையிலிருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலான கடலில் மட்டுமே தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், வடமராட்சி கிழக்கை நிர்வகிக்கும் தரப்புகளான பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றின் அறிவுக்கு எட்டாத வகையில், வடமராட்சி கிழக்கு கடலில், கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தால் அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.   

 வடமராட்சி கிழக்கை ஆக்கிரமித்துள்ள கடலட்டை பிடிப்பாளர்கள், ஐந்து கிலோ மீற்றருக்கு உள்பட்ட, குறிப்பாக இரண்டு கிலோ மீற்றருக்கு உட்பட்ட கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுகின்றார்கள்.   

இதனால், கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கரைவலை, கட்டுமரத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.   

 முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சில மாதங்களுக்கு முன்னர் வரையில், சாலைக் கடற்பகுதியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான தென் இலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  

அவர்கள், வடமராட்சிக் கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியைத் தாண்டி கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்து, கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதனால், கடலட்டை பிடிப்பாளர்களுக்கும் பிரதேச மீனவர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. இவ்வாறான நிலையில், கடலட்டை பிடிப்பாளர்கள், வடமராட்சி கிழக்குக் கடலை, முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருப்பதை எவ்வாறு சகித்துக் கொள்வார்கள்.   

 தாய் நிலத்தைப் பாதுகாப்பதற்குக் காலங்காலமாக எவ்வாறு துணை நின்றார்களோ, அதைப் போலவே, கடலைப் பாதுகாப்பதற்கும் பெரும் அர்ப்பணிப்பைச் செய்தவர்கள் வடமராட்சி கிழக்கு மக்கள்.   
 கடலட்டை பிடிப்பாளர்கள் இரவு நேரங்களில் கடலுக்கு அடியில் பெரும் ஒளியைப் பாய்ச்சக்கூடிய மின் விளக்குகளைச் செலுத்திக் கொண்டும், இலை குழைகளைக் கடலுக்குள் வகை தொகையின்றிக் கொட்டிக் கொண்டும், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், கரையோரங்களில் வாழும் மீன்கள், ஆழ்கடலை நோக்கிச் செல்கின்றன.   

இனப்பெருக்கத்துக்காக ஆழம் குறைந்த கடல் பகுதியான, கரையோரங்களை நோக்கி வரும் மீன்களும் இவ்வாறான அச்சுறுத்தல்களால் கரைக்கு வருவதில்லை. இதனால், கரையோர மீன்பிடியின் அனைத்துக் கட்டங்களும் தவிர்க்கப்படுகின்றன.   

 வருடத்தில் சுமார் 8 மாதங்கள் கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டால், அந்தக் கடலின் வளம் மிக விரைவாக அழிக்கப்பட்டு விடும். இதற்கு, தென் இலங்கைக் கரையோரங்கள் நல்ல சாட்சி. இன்றைக்கு தென் இலங்கையில் கரையோர- பாரம்பரிய மீன்பிடி என்பது வெற்றுக் கனவாகி விட்டது.   

ஒரு காலம் வரையில், முதலாளிகளாக இருந்த கரையோர மீனவர்கள், இன்றைக்கு கூலித் தொழிலாளியாகி விட்டார்கள். அவ்வாறான நிலையை, வடக்கு, கிழக்கிலும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் பெரு முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் உண்டு. அதன் ஒரு கட்டமாகவும் கடலட்டை பிடிப்பாளர்களின் ஆக்கிரமிப்பைக் கொள்ள முடியும்.   

 வடக்கு மாகாணத்திலேயே, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களே இன்னமும் அத்துமீறிய குடியேற்றங்களை பெருவாரியாக அனுமதிக்காத மாவட்டங்களாக இருக்கின்றன.   

இதனால், தமிழ் இன விகிதாசாரம் அந்த மாவட்டங்களில் இன்னமும் பேணப்பட்டு வருகின்றது. அதைக் குலைக்க வேண்டும் என்கிற எண்ணம், அரசாங்கத்துக்கும்  அதன் ஏவல் சக்திகளுக்கும் உண்டு.   

 யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான அரச காணிகளைக் கொண்ட பிரதேசம் வடமராட்சி கிழக்கு. அந்தக் காணிகளைக் காட்டிக் கொண்டு, வெளியார்களைக் கொண்டு வந்து குடியேற்றும் திட்டங்களை முன்னெடுப்பதற்கான தொடர் முனைப்புகளின் போக்கில் பல திட்டமிடல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.   

மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் அதன் ஒரு பகுதியானது என்கிற அச்சம் பிரதேச மக்களுக்கு உண்டு. அதன் தொடர்ச்சியாக, வடமராட்சி கிழக்கு கடற்கரையோரக் காணிகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்படும், ஆக்கிரமிப்பைக் கொள்ள முடியும்.  

 கடலட்டை பிடிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களிலோ,  நடவடிக்கைகளிலோ யாழ். மாவட்டத்தின் வேறு எந்தத் தரப்புகளும் இதுவரையில் இணைந்து கொண்டிருக்கவில்லை.   

தமிழர் தாயகத்தை பாதுகாப்போம் எனும் கோசத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் பேசும் சக்திகள் கூட இணையவில்லை.  வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள், தமது நிலத்தையும், கடலையும் பாதுகாப்பதற்காக நியாயமான போராட்டங்களை நடத்துவதற்கு பெரும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்கள்.   

அந்தப் போராட்டங்கள், இன ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்காத அளவில் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். ஆனால், ஆக்கிரமிப்பின் வடிவங்களை அந்த மக்களின் தலைகளில் தொடர்ந்தும் இறக்கி வைக்க வெளித்தரப்புகள் முயலும் போது, அதைப் பொறுத்துக் கொண்டிருக்கவும் மாட்டார்கள்.   

அவ்வாறான நிலையில், சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைவான தீர்வொன்றை நோக்கி நகர வேண்டும். இப்போது, வடமராட்சி கிழக்கு மக்களோடும், மீனவர்களோடும் தமிழ் அரசியல் சக்திகளும் ஊடகங்களும் உண்மையான அக்கறையோடு நிற்க வேண்டும். அதுதான், இவ்வாறான தொடர் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்களைத் தக்க வைக்க உதவும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X