2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வெள்ளை யானையை’ கண்டு தடுமாறும் அரசாங்கம்

மொஹமட் பாதுஷா   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் இருந்தும் கூட, தமது அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதில் எண்ணிலடங்கா களச் சிக்கல்களை, சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன.   
தற்போது கொண்டுவரப்படவுள்ள உத்தேச 20ஆவது திருத்தத்தின் ஊடாகவும், மாகாண சபைகள் சட்டத் திருத்தத்தின் ஊடாகவும் ஜனநாயக உரிமை சார்ந்த, மேலும் பல சவால்களைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.   

நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை, ஒரே நாளில் நடாத்த வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்காலம் முடிவடைந்த பிற்பாடும், பல மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் காலத்தைப் பிற்போடுவதற்கு, அரசாங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள், கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன.   

2015 ஜனவரி எட்டாம் திகதி, இருந்த உறுதிப்பாட்டை இழந்திருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் இணக்கப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், இன்று உடனடியாகத் தேர்தல் ஒன்றில் குதிப்பதற்குச் சற்று பின்வாங்குவது போல் தெரிகின்றது.   

“13 பிளஸ் தருவோம்’ என்று சொல்லிக் கொண்டு ஆட்சிபீடம் ஏறிய, இந்த அரசாங்கமானது, இப்போது 13 ஐக்கூடத் தற்காலிகமாகப் பலவீனப்படுத்துகின்ற அல்லது செயலிழக்கச் செய்கின்ற திருத்தத்தை கொண்டு வரப்போகின்றது என்பதை ஜீரணிக்க முடியாததாகையால், இதற்கெதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.   

அத்துடன், தேர்தல் தொடர்பான கண்காணிப்புச் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அமைப்புகள், சிவில் அமைப்புகள் எனப் பலதரப்பினர், உயர்நீதிமன்றத்தில் சுமார் 10 வரையான மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்புலத்தோடு, அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், இலங்கையில் 1988ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழ், ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.   

உண்மையில், வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்களே இவ்வாறான ஒரு சட்ட ஏற்பாட்டையும் மாகாணங்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அவாவி நின்றனர். ஆனால், கேட்காமலேயே அந்த வரப்பிரசாதம் வடகிழக்குக்கு வெளியிலுள்ள மக்களுக்கும் கிடைத்தது.   

இருப்பினும், ஆரம்பம் தொட்டு இன்று வரையும், மாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளை யானை என்று வர்ணிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.   

அதாவது, மத்தியில் குவிந்து கிடக்கின்ற அதிகாரங்களை மாகாண ரீதியாகப் பகர்ந்து கொடுப்பதற்கே, இந்த முறைமை கொண்டு வரப்பட்டது. என்றாலும், நாடு இருந்த நிலையில், எல்லா அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்குக் கொடுத்தால், குறிப்பாக முன்னைய வடகிழக்கு (இன்றைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு) கொடுத்தால், மூக்கணாங்கயிற்றை அறுத்துக் கொண்டு, மாகாணங்கள் தம்பாட்டில் ஓடிவிடுமோ எனப் பயந்த அரசாங்கங்கள், பல முக்கிய அதிகாரங்களை, மாகாண சபைகளுக்கு வழங்கியிருக்கவில்லை.   

குறிப்பாக, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுகாலவரைக்கும் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்படவில்லை. வடக்குக்கும் கிழக்குக்கும் இதுபோன்ற அதிகாரங்கள் செல்வதை ஒரு பாரதூரமான விடயமாக அரசாங்கங்கள் பார்ப்பதால், இவ்வதிகாரங்களை எந்த மாகாணமும் இன்னும் சுகிக்கவில்லை.   

இன்னும் சொல்லப்போனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, சிங்களப் பெருந்தேசியத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்ற மற்றைய ஏழு மாகாண சபைகளுக்கும், இவ்வாறான அதிகாரங்கள் தேவைப்படவும் இல்லை. அதை மத்திய அரசாங்கமே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.   

உலகின் ஓரிரு நாடுகளில் உள்ள அரியவகை வெள்ளை யானைகளை வைத்துக் கொண்டு, ஒருசாதாரண கறுத்த யானை செய்கின்ற வேலையைக் கூட செய்ய முடியாது.   

ஆனால், அதைப் பராமரிப்பதற்கும் வளர்ப்பதற்கும் பெரும் செலவு ஏற்படும். எனவேதான், எதிர்பார்த்த பலன்களைத் தராத, ஆனால், கௌரவத்துக்காகவும் பெயருக்காகவும் மட்டும் கட்டமைக்கப்பட்டுள்ள, இலங்கையின் மாகாண சபைகள் முறைமையும் வெள்ளை யானை என்று வர்ணிக்கப்படுகின்றது.   

ஆனால், ஒரு வெள்ளை யானைக்காகவே இன்று அரசாங்கம் அஞ்சுகின்றது அல்லது தடுமாறுகின்றது. அத்துடன், மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற பிரயத்தனமாகவே, 20ஆவது திருத்தமும் மாகாண சபை சட்டத்திருத்தமும் பரவலாக நோக்கப்படுகின்றது.   

நாட்டில் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற்றன. இதற்கமைய கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம், அடுத்த மாதம் முற்பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது. வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆட்சிக்காலம் இன்னும் ஒரு வருடத்திலும், தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வருடங்களிலும் நிறைவடையவுள்ளது. எனவே, முதலாவதாக ஆயுட்காலம் முடிவடையும் மூன்று சபைகளுக்கு உடனடியாகத் தேர்தல் ஒன்றை அறிவிக்க வேண்டியுள்ளது.  

இந்தக் கட்டத்தில்தான், அரசாங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘மாகாண சபைகளுக்கான தேர்தலை தனித்தனியாக நடத்துவது செலவு அதிகமானது என்பதால், ஒரே நாளில் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது.   

அது மட்டுமல்லாமல், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் உரிய பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டது.  

அதைத்தொடர்ந்து, சட்டவரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தையும் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலத்தையும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.   

இந்த வாத்தமானி அறிவித்தல்கள் கடந்த மூன்றாம் திகதி வெளியாகியுள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி, சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அணிநிலைப் பிளவுகள், பொதுவாக நல்லாட்சியின் பங்காளர்கள் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் என்பவற்றின் பின்னணியில் நோக்கும்போது, இந்த 20ஆவது திருத்தத்தையும் மாகாண சபை தேர்தல் சட்டத்தின் மீதான திருத்தத்தையும் நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.   

ஆனால், அதைவிட முக்கியமாக, மாகாண சபைகள் முறைமைக்காகத் தவமிருந்து, அதைப் பெற்றவர்கள் என்ற வகையில், அதில் ஏற்படப்போகின்ற சட்ட ரீதியான மாற்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான, தேர்தலைப் பிற்போடுவதால், முஸ்லிம்களும் தமிழர்களும் சந்திக்கப்போகின்ற பாதகநிலைகள் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான வர்த்தமானி, ‘எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடாத்துவதற்கான’ சட்ட ஏற்பாட்டை உள்ளடக்கியுள்ளது. அதேநேரம், 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வர்த்தமானியானது, ஒரே தினத்தில் தேர்தல் நடாத்துதல் என்ற ஏற்பாட்டுக்கு மேலதிகமாக, மேலும் பல முன்மொழிவுகளைக் கொண்டிருக்கின்றது.   

குறிப்பாக, ‘அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி, நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும். அத்திகதி இறுதியாகத் நிறுவப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவு திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது’ என அதன் ஒரு பிரிவு கூறுகின்றது. ‘ஒரே தினத்தில் தேர்தல் நடக்கும் குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் குறிப்பிட்ட திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படும்’ அத்துடன், ‘குறித்துரைக்கப்பட்ட திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும்’ என்று அடுத்தடுத்த பிரிவுகள் குறிப்பிடுகின்றன.   

நாட்டில் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் சற்று தயங்குகின்றது. குறிப்பாக, இன்னும் சில வாரங்களில் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலிரண்டு மாகாணங்களிலும் எந்தப் பெருந்தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறுமோ, இருக்கின்ற பலமும் இழந்து போய்விடுமோ என்ற உள்ளச்சம் இரண்டு பெரும் கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்பட்டுள்ளது எனலாம்.  

 அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் யாருடைய ஆட்சி உருவாகும்; அதனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கேள்விகள் ‘கொழும்புக்கு’ ஏற்பட்டிருக்கின்றது.   

இத்தனைக்கும் நடுவில், இம்மாகாண சபைகளின் தேர்தல் பிற்போடப்படும் என்று அரசாங்கம் உறுதியாக அறிவிக்கவில்லை என்றாலும், சட்டத்தையும் யாப்பையும் திருத்துவதற்கும் எடுத்துவரும் நடவடிக்கைகள் உரிய நாளில் தேர்தல் இடம்பெறாதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இலங்கையின் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் மாகாண சபைகள் இரண்டு அடிப்படைகளில் கலைக்கப்படலாம். முதலமைச்சரின் ஒப்புதலுடன் மாகாண சபைகள் ஆளுநரால் கலைக்கப்படலாம் அல்லது விசேட சூழ்நிலைகளின் கீழ், ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாகாண ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரலாம்.  

 ஆனால், ஆட்சிக்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக கருதப்படாது. இந்த கடைசி வகையறாவுக்குள்ளேயே கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்கள் உள்ளடங்குகின்றன எனலாம்.   

இந்நிலையில், எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஏதுவாக யாப்பு மற்றும் சட்டத் திருத்தங்களை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றுமாயின் என்ன நடக்கும்?  

 இந்த மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது என்பதற்காகவும் தேர்தலை ஒரே நாளிலேயே நடத்த வேண்டியுள்ளது என்பதற்காகவும் அரசாங்கம், ஏனைய 6 மாகாண சபைகளை முன்கூட்டியே கலைக்குமா? அது சாத்தியமில்லை.   

உத்தேச திருத்தத்தில் உள்ள ‘குறித்துரைக்கப்பட்ட திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும்’ என்ற பிரிவின்படி, இம் மூன்று மாகாண சபைகளுக்குமான காலம் முடிவடையும் போது வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு ஒருவருடம் முன்கூட்டியும், தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் முன்கூட்டியும் முடிவுக்கு கொண்டு வரப்படுமாயின், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கு கவலைகள் இருக்காது.   

ஆனால் அது சாத்தியமில்லை என்பதுடன், ‘ஒரே தினத்தில் தேர்தல் நடக்கும் குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் குறிப்பிட்ட திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படும்’ என்ற உத்தேச சட்ட ஏற்பாட்டின்படியே அரசாங்கம் செயற்படப் போகின்றது என்ற அனுமானங்களும் வெளியாகியுள்ளன.   

இதன் அர்த்தம் என்னவென்றால், கடைசியாக 2019ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தின் ஆட்சி, ஆட்சிக்காலம் முடிவடையும் வரை வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக 8 மாகாணங்களினதும் ஆட்சி நீடிக்கப்பட்டு, ஊவாவின் பதவிக்காலம் முடிவடைந்த பிற்பாடு, எல்லா மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடைபெறலாம் என்பதாகும். இதுவே இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.   

கபே, பெப்ரல் போன்ற தேர்தல் கண்காணிப்புசார் அமைப்புகளும் வேறு சிவில் அமைப்புகளும் இதனைக் கடுமையாக ஆட்சேபித்துள்ளன. சில அமைப்புகள் உயர்நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளன.   

ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களை உண்டுபண்ண நினைக்கின்ற கூட்டு எதிர்க்கட்சியும் ‘உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.   

சிறுபான்மை அரசியலைப் பொறுத்தமட்டில், 20ஆவது திருத்தம், மாகாண சபை சட்டத்திருத்தம் பற்றி பிரதான தமிழ், முஸ்லிம் அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் பொதுவெளியில் தம்முடைய நிலைப்பாட்டை இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.   
13இற்கும் மேலான அதிகாரங்களைத் தருவதாக சொன்ன அரசாங்கம், 20ஆவது திருத்தத்தின் ஒரே நாளில் தேர்தல் நடாத்தும் முறையை அறிமுகப்படுத்துமாயின், அது எதிர்காலத்தில் நாட்டுக்கு அனுகூலத்தைக் கொண்டு வரலாம். ஆனால், முதற்கட்டமாக ஒரேநாளில் நடத்தும் திட்டத்தை அமுல்படுத்த விளைகின்ற போது, 8 மாகாணங்களில் உள்ள மக்கள் தங்களுக்குரிய மாகாண சபைகளை நிறுவுவதற்கான ஜனநாயக உரிமை தற்காலிகமாக பலிகொடுக்க வேண்டியுள்ளது.  

ஒவ்வொரு மாகாண சபையையும் 5 வருடங்கள் ஆட்சி செய்வதற்காகவே மக்கள் ஆணை வழங்குகின்றனர். ஆனால், அதை விட அதிக காலம் அந்த ஆட்சியை வைத்திருக்க முனைவது மக்களாணைக்கு புறம்பானதாகவும் அமையும்.

அதுமட்டுமன்றி, ஆட்சிக்காலம் முடிவடைந்ததற்கும் தேர்தல் நடைபெறுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில் தமிழர்கள், முஸ்லிம்களின் அதிகாரம் வலுவிழந்து போவதுடன், மத்திய அரசாங்கம் அதாவது பெருந்தேசியக் கட்சிகளின் நிழல் ஆட்சியே நடைபெறுவதற்கும் சாத்தியமிருக்கின்றது.

எனவே, சிறுபான்மைக் கட்சிகள், 20ஆவது திருத்தம், மாகாண சபை தேர்தல் சட்ட திருத்தம் ஆகியவற்றில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆய்ந்தறிந்து முடிவெடுக்க வேண்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .