2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஹிட்லர்’ மீதான காதல்

மொஹமட் பாதுஷா   / 2018 ஜூலை 01 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடோல்ப் ஹிட்லரின் மனதுக்குள், எந்தளவுக்கு அன்பும் கருணையும் காதலும் இருந்தது என்று தெரியாது. ஆனால், உலக சரித்திரக் குறிப்புகளின்படி, ஒரு சர்வாதிகாரியாகவே ஹிட்லர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்.  

ஈவா பிரவுண் அல்லது ஹிட்லரின் வாழ்க்கையில் வந்த மற்றைய இரு பெண்களும், எந்தளவுக்கு ஹிட்லரைக் காதலித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.    

ஆனால், ஹிட்லரை வேறு ஒரு கோணத்தில், நல்ல ஆட்சியாளராகப் பார்க்கின்றவர்களும், அவரது போக்கை வரவேற்கின்ற சிலரும், நம்மோடு இருக்கின்றார்கள் என்பதைச் சில சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.   

மகாத்மா காந்தி என்கின்ற மிகப் பெரும் தேசபிதாவை, இத்தனை தசாப்தங்களாகக் கொண்டாடி வந்த இந்திய துணைக்கண்டம், அவரைச் சுட்டுக்கொன்ற கோட்சேயை, ஒரு வன்முறையாளனாகவே சித்திரித்திருந்தது.   

ஆனால், சில வருடங்களுக்கு முன்னர், கோட்சேயின் பக்கம் கூறப்பட்ட காரணங்களில் நியாயம் இருப்பதாக, ஒரு தரப்பினர் சொன்னார்கள். அத்தோடு, கோட்சேக்குச் சிலை வைக்கும் முயற்சிகளும் இடம்பெற்றன.   

காலவோட்டத்தில் ஒரு தியாகி, தேச விரோதி போலவும், ஒரு வன்முறையாளன் வீரனைப் போலவும், பார்க்கப்படமாட்டார்கள் என்பதற்கு, எவ்வித உத்தரவாதங்களும் இல்லை.   

இதனை ஆணித்தரமாக உணர்த்துவது போல, இன்னுமொரு சம்பவம் அண்மையில் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றது. அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்  அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகளே, இவ்வாறான உணர்வையும் வேறுபல சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கின்றன.  

“நாட்டைக் கட்டியெழுப்ப இராணுவ ஆட்சிதான் அவசியம் என்றால், அதைக் கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ய வேண்டும். அதன்மூலம், ஹிட்லரைப் போல, நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்’ என்று வெண்டருவே உபாலி தேரர் அறிவுரை கூறியிருக்கின்றார்.   

ஹிட்லரைப் போல மாறி, தனது அரசியல் சாணக்கியத்தை கோட்டாபய நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.   

இக்கருத்து, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கின்றது. பிரதமர் உள்ளடங்கலாக, ஆளுந்தரப்பில் உள்ள பல அரசியல்வாதிகள், இக்கருத்தை விமர்சித்திருக்கின்றார்கள்.   

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேரர் மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ஹிட்லரைப் போல உயிர்களைக் கொன்று, ஆட்சி நடத்துமாறு நான் கூறவில்லை; எனது நீளமான கருத்துரை சுருக்கப்பட்டு, ஒரு விடயம் மட்டும் எடுத்தாளப்படுகின்றது’ என்று வெண்டருவே உபாலி தேரர் வருத்தம் வெளியிட்டிருக்கின்றார்.   

உண்மையிலேயே, வெண்டருவே உபாலி தேரர் சொல்லாத ஒரு விடயத்தை, ஊடகங்கள் வெளியிட்டிருந்தால் அது முழுத்தவறாகும். ஆனால், சிங்கள ஊடகங்கள், ஒரு தேரர் விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவும் மாட்டா. எனவே, முன்பு வெளியான செய்தி மற்றும் தேரரின் பிந்திய விளக்கம் ஆகியவற்றில் இருந்து, சில விடயங்கள் புலனாகின்றன. 

1. இந்த ஆட்சியில், பௌத்த உயர்பீடங்கள் குறிப்பாக, அஸ்கிரிய பீடம் திருப்தி அடையவில்லை   
2. கோட்டாபய ராஜபக்‌ஷ போன்ற ஒருவர், அடுத்த ஆட்சியாளராக வர வேண்டும் என்ற விருப்பமும் எண்ணமும் வெண்டருவே உபாலி தேரர் போன்றோருக்கு இருக்கின்றன.  

3. ஹிட்லரைப் போல ஆட்சி செய்வதை, ஒரு பெரிய தவறாக, அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம் நிலைத் தலைமை பார்க்கவில்லை.   

சுருங்கக் கூறின், உலக சரித்திரத்தில் இருந்தும், இலங்கையின் அனுபவங்களில் இருந்தும், பௌத்த பீடங்களின் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்ற சிலர், இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே, வெண்டருவே உபாலி தேரரின் கருத்து, ‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு​ சோறு பதம்’ஆக எடுத்துக் காட்டுகின்றது.   

அடோல்ப் ஹிட்லர், சுமார் 20 மில்லியன் மக்களை மிலேச்சத்தனமாகக் கொன்றார்; லியோபோல்ட்டும் 20 மில்லியன் பேரைப் பலியெடுத்தார்; முசோலினி, இடி அமின் எனக் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது. அதில் நியாயங்களும் இல்லாமலில்லை.   

ஆனால், கோடிக்கணக்கானதும் இலட்சக்கணக்கானதுமான மக்களின் படுகொலைகள் முன்னே, அந்தக் காரணங்கள் எல்லாம் நியாயப்படுத்தப்படக் கூடியவை அல்ல. எனவே, உலகின் 99 சதவீத மக்கள், இவர்களையெல்லாம் மோசமான ஆட்சியாளர்களாகவே, பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.  

அதிலும் குறிப்பாக, சர்வாதிகாரம் பற்றிக் குறிப்பிட்டதும் உடன் ஞாபகத்துக்கு வருகின்ற ஒருவராக, ஹிட்லர் இருக்கின்றார். 

இவ்வாறான, ஒரு பிழையான முன்னுதாரணத்தையே வெண்டருவே உபாலி தேரர், கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் முன்மொழிந்திருக்கின்றார்.   

இப்போது தேரர், “அப்படியில்லை, இப்படித்தான் சொன்னேன்” என்று கூறினாலும், கோட்டாபய பின்னர், “என்னிடம் தனிப்பட்ட ரீதியில் கூறப்பட்ட ஆலோசனையை, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றோர், ஏன் இத்தனை ஆர்வத்துடன் கையாள்கின்றனர்’ என்று கூறியிருக்கின்றார். எனவே, அஸ்கிரிய பீடத்தின் முக்கிய தேரர் ஒருவர் கூறிய அறிவுரை என்பது, ஒருவருக்கு மட்டுமானதல்ல; முழு நாடும் சம்பந்தப்பட்டது; அது முழுநாட்டுக்குமானது என்பதை மறுக்க முடியாது.   

சாந்தியையும் சமாதானத்தையும் உயிர்கள் மீதான காருண்யத்தையும் போதிக்கின்ற பௌத்தமதத்தின் முக்கிய தேரர்கள், உலக மக்களால் சர்வாதிகாரியாக நோக்கப்படுகின்ற ஹிட்லரைப் போல் அல்லது இராணுவ ஆட்சியாளரைப் போல், இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதும், அப்படியானவர்களை முன்னுதாரணமாகக் கூறுவதும் தவறாகும்.   

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடு துளிர்விடத் தொடங்கி, ஆறு தசாப்தங்கள் கடந்து விட்டன. இதில், மூன்று தசாப்தங்கள் ஆயுத மோதலில் கழிந்து விட்டன.   

இந்த வடுக்களைக் கடந்த 10 வருடகால நல்லிணக்க முயற்சியாலும் சீர்செய்ய முடியாது போயிருக்கின்றது. அத்துடன், இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி என்பது பொய்யல்ல. அதில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் பங்களிப்பு, மிக முக்கியமானது என்பதையும் மறுக்க முடியாது.   

யுத்தத்தால் முப்பது வருடங்கள் ஏற்பட்ட உயிரிழப்புகளை, கஷ்டங்களைப் பார்க்கின்ற போது, சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை மன ஆறுதல் தருகின்ற விடயமே.   

ஒரு சில தமிழர்களும் இந்த நிலைப்பாட்டில் இருக்கலாம். ஆனால், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட விதத்தில், இன்னுமொரு பக்கம் இருக்கின்றது.   

அதாவது, யுத்த முடிவு என்பது, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முறியடித்தது என்ற வலியை விடவும், கடைசி யுத்தத்தில் அநியாயமாகப் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலிகொள்ளப்பட்டு விட்டார்கள் என்ற தமிழ் மக்களின் கவலை வலியது.   

இங்குதான் யுத்தக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளும் மேலெழுகின்றன. எனவே, யுத்தத்தை ராஜபக்‌ஷகள் மட்டுமே களத்தில் நின்று வெற்றி கொள்ளவில்லை என்றாலும், அவர்களே இன்று இந்த வெற்றிக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதற்குப் பங்களிப்புச் செய்த பலர், இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டதாகக் குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது.   

இப்படியான நிலையில், யார் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்களோ, அவர்கள் மீதே, அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழித்ததற்கான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இது நியாயமில்லை என்று யாரும் கூற முடியாது.   

இப்படிப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று, சர்வதேசத்தைத் தமிழர்கள் கோரி வருகின்ற நிலையிலேயே, அஸ்கிரிய பீடத்தின் தேரர், கோட்டாபய ராஜபக்‌ஷ போன்ற ஒருவர், ஆட்சிக்கு வருவதற்கான மறைமுக ஆசீர்வாதத்தை வழங்கியிருப்பதாகத் தெரிகின்றது.   

யுத்தம் முடிவடைந்தமை, முஸ்லிம்களில் கணிசமானோருக்கு மகிழ்ச்சியை அல்லது நிம்மதியைக் கொண்டு வந்தாலும், அதற்குப் பின்னரான இனவாதத்தின் எழுச்சியென்பது, அதைவிடப் பயங்கரமாக இருந்தது; இருக்கின்றது.   

தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கிய பிரச்சினை விரிவடைந்து, அளுத்கமை, பேருவளையில் கோரத் தாண்டவத்தை ஆடியது.   

இந்தச் சந்தர்ப்பத்தில், இதற்கெதிராகப் பௌத்த தேரர்கள் சிலர் குரல்கொடுத்த போதும், அஸ்கிரிய பீடம் போன்ற முக்கிய பௌத்த பீடங்கள், முஸ்லிம்களின் அழிவுக்காகக் கண்டனம் கூட வெளியிட்டதாக ஞாபகமில்லை.   

இந்த இனவாத சக்திகளுக்கு, ராஜபக்‌ஷ ஆட்சியும் குறிப்பாக, கோட்டாபய ராஜபக்‌ஷ முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றே, முஸ்லிம்கள் நம்பினர். இதனால், முஸ்லிம்களும் ராஜபக்‌ஷகளின் ஆட்சியில் விருப்பமற்றவர்களாகவே இருந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.   

இப்போது, நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இன்றைய ஆட்சியிலும் அம்பாறை, திகண மற்றும் கண்டி போன்ற இடங்களில் திட்டமிட்ட இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.   

இந்தத் தருணங்களில், அஸ்கிரிய பீடத்தின் வெண்டருவே உபாலி தேரர் போன்ற முக்கிய தேரர்கள், இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டு, இனவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அக்கறை காட்டவில்லை என்பது, முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையான விடயமாகும்.   

இவ்வாறு வடக்கில், சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், முஸ்லிம்களின் உயிரும் சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக முன்னிற்காத சில தேரர்கள், இவ்வாறான நடவடிக்கைகளால் நாடு வீழ்ச்சியடையும் என்பதை உரக்கச் சொல்லாத பௌத்த பீடங்கள்.... இன்று, கடும்போக்காளர்களை அடுத்த ஆட்சியாளராக்க முனைவதும், அதற்காக, அபிவிருத்தி என்று பெரிதாக எதையுமே செய்திராத ஹிட்லரை முன்னுதாரணமாகக் கூறுவதும், பெரும் அச்சத்துடனான சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது.   

சிறுபான்மை மக்களாலும் மதிக்கப்படுகின்ற, அமரர் மாதுளுவாவே சோபித தேரர் போன்ற பல முற்போக்கு பிக்குகள், பௌத்த செயற்பாட்டாளர்கள் முன்னின்றே, 2015 இல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.   

ஆனால், இந்த ஆட்சியும் பெரிதாக  பெரும்பான்மை மக்களினதோ சிறுபான்மைச் சமூகங்களினதோ திருப்தியைச் சம்பாதிக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. அத்துடன், அரசியல் களமும், இன்றைய ஆட்சியாளர்கள் இன்னுமொருமுறை ஆட்சிக்கு வருவதற்கு, சவால்மிக்கதாக மாறிக் கொண்டிருக்கின்றது.   
தமிழர்கள், இந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு முன்னரேயே, எப்படியாவது  சிறந்த தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்பதில், முனைப்புடன் இருக்கின்றனர்.   

இரண்டு ஆட்சியிலும், இனவாதம் கோலோச்சுவதால், ‘கிட்டத்தட்ட எல்லாம் ஒன்றுதான்’ என்ற நிலைக்கு, முஸ்லிம்கள் வந்திருப்பதாகச் சொல்ல முடியும். குறிப்பாக, மஹிந்த, கோட்டாபய போன்றோர், முஸ்லிம்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டத்தொடங்கியுள்ளனர்.   

இப்பின்னணியில், மாகாண சபைத் தேர்தலை நடாத்தினாலும், நடாத்தாவிட்டாலும் இன்னும் ஆகக் கூடியது 495 நாள்களில், நல்லாட்சியின் ஆயுள்காலம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

 அதன்பின்னர், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றாலும், தமிழர்களில் கணிசமானோர் மஹிந்த தரப்பின் வேட்பாளரை அல்லது, ‘மிக்க அறிவுடையோர் பாதை’ என்ற அமைப்பின் ஊடாக, நகர்ந்து கொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையோ ஆதரிப்பார்கள் என்று சொல்வது கடினம்.   

மஹிந்தவின் வேட்பாளராக வருபவரை, முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் ஆதரிப்பர் என்று ஊகிக்க முடியுமாயினும், கோட்டாபயவுக்கு அந்த ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.   

இவ்வாறான சூழலில், சிங்களக் கடும்போக்கு சக்திகளும் பெருந்தேசியமும், சிறுபான்மை மக்களால் கடும்போக்காளராக நோக்கப்படுகின்ற ஒருவரை, ஜனாதிபதியாக்க முயற்சி செய்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது.   

ஜனநாயக விரோதமான, ஓர் இராணுவ ஆட்சிபோல் அது அமைந்தாலும் பரவாயில்லை என்று, அஸ்கிரிய பீடத்தின் வெண்டருவே உபாலி தேரர் போன்றோர் கருதுகின்றார்களோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   

மேற்படி தேரரின் கருத்தை, இலங்கைக்கான ​ேஜர்மன் தூதுவர் ஜொன் ரொட், வன்மையாகப் கண்டித்துள்ளார். 

இதேவேளை, “ஹிட்லராக மாறுமாறு, புத்தர் உபதேசம் செய்யவில்லை. அவ்வாறான ஆலோசனை, எனக்குக் கூறப்பட்டிருந்தால், அதை மறுத்திருப்பேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.   

“நாட்டுக்கு, ஹிட்லரோ, இடிஅமீனோ தேவையில்லை” என்று, அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.   
அஸ்கிரிய பீடத்தின் தேரர் ஒருவர், ஹிட்லரை முன்னுதாரணமாகக் காட்டியதை, மஹிந்த ராஜபக்‌ஷவோ, கோட்டாபய ராஜபக்‌ஷவோ தவறாக நோக்கவில்லை. 

அத்துடன், ‘ஹிட்லரைப் போன்ற ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்பதில், தவறில்லை’ என்ற தொனியில் மஹிந்த கருத்துச் சொல்லி இருக்கின்றார்.   

வெண்டருவே உபாலி தேரரின் கருத்து தொடர்பில், முக்கிய பௌத்த பீடங்கள் கருத்துரைக்கவும் இல்லை.   
இன்னும் ஒன்றரை வருடங்களில் அல்லது அதற்கு முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது, இப்போதைய ஜனாதிபதியோ, பிரதமரோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வேட்பாளரோ, கோட்டாபய ராஜபக்‌ஷவோ அல்லது வேறு யாருமோ களத்தில் குதிக்கலாம். அதில் மக்கள் விருப்பப்படி யாராவது தேர்ந்தெடுக்கப்படலாம். அது வேறுவிடயம்.   

ஆனால், ஜனநாயக விரோத இராணுவ ஆட்சி அல்லது கொடுங்கோல் ஆட்சியாளரை முன்மாதிரியாகக் கொண்ட ஆட்சி முறை ஒன்றுக்கு, மத குருமாரோ, பொதுமக்களோ, செயற்பாட்டாளர்களோ எவ்விதத்திலும் ஆசீர்வாதம் அளிக்கக் கூடாது என்பதே வேண்டுதலாகும்.   

இலங்கை, மீண்டும் ‘பூச்சியத்தில்’ இருந்து பயணிக்க, யாரும் முன்னிற்கக் கூடாது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .