2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

100க்கும் அதிக தொற்றாளர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக, பிசிஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாத நிலையில், வீடுகளுக்குள்ளேயே தொற்றாளர்கள் முடங்கியுள்ள நிலைமையொன்று, மத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முடங்கியுள்ள தொற்றாளர்களின் வீடுகளில், சிரேஷ்ட பிரஜைகள், குழந்தைகள் எனப் பல தரப்பினரும் காணப்படுவதால், அவர்களின் சுகாதார நிலைமை கேள்விக்குள்ளாகியுள்ளதென, சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் வீரசூரிய, இவ்வாறு வீடுகளில் முடங்கியுள்ள தொற்றாளர்களுக்காக, புதிய சிகிச்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார்.

நுவரெலியா மாவட்டத்தின் கந்தேஎல மற்றும் மாத்தளை மாவட்டத்தின் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற இடங்களில், சிகிச்சை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அவற்றில், சுமார் 1,450 கட்டில்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தில், தற்போது வீடுகளில் முடங்கியுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கையை சரியாகச் சொல்ல முடியாதுள்ளதாகவும் நூற்றுக்கும் அதிகமானோர், அவ்வாறு வீடுகளில் முடங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் வீடு திரும்பியதும் ஏற்படும் வெற்றிடங்களுக்கு, வீடுகளில் முடங்கியுள்ளோர் உள்வாங்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .