2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘20ஆவது திருத்தத்தை கொண்டு வருவோம்’

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள ஜே.வி. பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கத்தை கருத்திற்கொண்டு, அதன்பின்னரே அதுதொடர்பில் தீர்மானிக்கப்படுமெனத் தெரிவித்தார்.  

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னரே, தனிநபர் பிரேரணையைக் கையளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும், அதில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கவேண்டுமென்று வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,  

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், அமைச்சர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்துகொண்டதால் அவரின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. அந்த நெருக்கடியான தருணத்தில், நாம்தான் ஆதரவளித்து, 17ஆவது திருத்தத்தையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கினோம். 

“எது எவ்வாறிருப்பினும், நிறைவேற்று அதிகார​ம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கி, ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

“அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறான வாக்குறுதியை வழங்கியே ஆட்சிபீடமேறினார். எனினும், அவரும் நிறைவேற்றவில்லை. எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் நாம், எதிர்ப்பையே வெளிப்படுத்தி வருந்துள்ளோம். 

“இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்புடனும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனும் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. 

“எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு, ஜே.வி.பியால் மாத்திரம் முடியாது. அதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .