2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2ஆவது நாளாகவும் புறக்கணிப்பு

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்ரமணியம் பாஸ்கரன்  

 

காணாமற்போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு, நேற்று (15), கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இந்த அமர்வுக்கும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்று அரசாங்கம் பதில் கூறவேண்டுமெனக் கோரி, கடந்த வருடம் பெப்ர​வரி மாதம் 20ஆம் திகதியன்று, கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த போராட்டம், நேற்றைய தினம், (15) 511ஆவது நாளாகத் தொடர்ந்தது.  

இந்நிலையில், பல தடவைகள் தம்மைச் சந்தித்த ஜனாதிபதி, தமக்கான தீர்வைத் தராத நிலையில், இந்த அலுவலகமானது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே காணப்படுமென்றும் எனவே, இந்தக் காணாமல் போனோர் அலுவலகம் தமக்குத் தேவையில்லையென்றும் தெரிவித்தே, நேற்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

இருப்பினும், குறித்த கலந்துரையாடலுக்கு வருகைதந்த காணாமற்போனோர் அலுவலகப் பணியாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் சென்று, அவர்களுடன் கலந்துரையாடி, அமர்வுக்கு வந்து தமது பிரச்சினைகளைத் தெரிவிக்குமாறு கோரினர். அத்துடன், காணாமற்போனோர் அலுவலகத்தின் வருங்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கினர்.  

இதன்போது, காணாமற்போன தமது உறவினர்களின் புகைப்படங்களைக் கைகளில் ஏந்தியவாறு, சரணடைந்த உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஒப்பாரியிட்டு அழுதுபுலம்பியதோடு, அமர்வைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால், 9 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய காணாமற்போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு, 10 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டது. இதில், பொதுமக்களில் 12 பேரும், கிராம சேவகர்களும், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரும் மாத்திரமே கலந்துகொண்டு, காணாமற்போனோர் தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .