2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’7 நாள் காலக்கெடுவில் தனியார் பஸ்கள் ஓடும்’

Editorial   / 2021 ஜனவரி 18 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ்  உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு வழங்குவதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வழங்கிய வாக்குறுதியை அடுத்து, பணிப்புறக்கணிப்புக்கான அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தாங்கள் முன்வைக்கும் ஆறு அம்சக் கோரிக்கைகளுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு வழங்காவிடின், பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக, தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன எச்சரித்திருந்தார். அதனடிப்படையில், நேற்று (17) நள்ளிரவு முதல் பகிஸ்கரிப்பிலும் குதிக்கப்போவதாக அறிவித்திருந்தார். 

'கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் தனியார் பஸ்  போக்குவரத்துச் சேவை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட நிவாரண நிதி, தென்மாகாண சபை ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த நிவாரணமும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை' என அச்சங்கம் குற்றம் சாட்டியிருந்தது. 

கொவிட்-19 நோய் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அரசாங்கத்துக்கும் தனியார் பஸ்  சங்கத்தினருக்கும் முரண்பாடற்ற வகையில் பல திட்டங்களை முன்வைத்தோம் எனத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன, ஆனால், அவை செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில், தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்றார். 

கொவிட்-19 நோய் தொற்றால், முதல், இரண்டாம் அலைகளின் காரணமாக, தனியார் பஸ்  சேவையிலிருந்து சுமார் 600 பேர் சேவையைக் கைவிட்டுள்ளார்கள். இவர்கள் வாழ்வாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

எங்களுடைய பணிப்பகிஸ்கரிப்பு அறிவிப்பு வெளியானதன் பின்னர், வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், எங்களுடைய ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்தோம். 

தனியார், அரச பஸ் சேவைகளை ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும், நவம்பர், டிசெம்பர் மாதத்துக்கான லொக்சீட் கட்டணம் அறவிடலை இரத்து செய்தல், லீசிங் வசதிகளை வழங்கல், கடன் நிவாரணத்தை வழங்கல், போக்குவரத்துச் சேவையில் ஈடுப்படும் பஸ்களுக்கு  சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கல் ஆகியனவே சங்கத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தன.


இதுதொடர்பில் ஒருவார காலத்துக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக, இராஜாங்க அமைச்சர் உறுதிமொழியை வழங்கினார் எனத் தெரிவித்த கெமுனு விஜேவர்தன, அதையடுத்தே பணிப்பகிஸ்கரிப்பு அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .