2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘O/Lக்கு முன்பு தேர்தலை நடத்துக’

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா, அஜித் சிறிவர்தன 

இவ்வாண்டு டிசெம்பரில் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதர (O/L) பரீட்சைக்கு முன்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு, மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமாகிய அநுர குமார திஸாநாயக்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில், நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றியபோதே, இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார். 

சட்டமூலத்துக்கான திருத்தங்கள், செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, இவ்வாண்டில் இத்தேர்தல்களை நடத்த முடியுமென, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளாரென, அவர் குறிப்பிட்டார். ஆகவே, இத்திருத்தங்கள், இவ்வாரத்துக்குள் அங்கிகரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 

தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு, அரசாங்கத்தாலும் ஒன்றிணைந்த எதிரணியாலும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அவர், “திருத்தங்களைப் படிப்பதற்கு, மேலதிக நேரத்தை, ஒன்றிணைந்த எதிரணி கோருகிறது. தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்பதற்காகவே அது இவ்வாறு கோருகிறது. தேர்தல்களை நடத்த வேண்டுமெனக் காட்டும் அரசாங்கமும், அதற்குச் சம்மதிக்கிறது” என்று அவர் தெரிவித்தார். 

இதன்போது, குறித்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை, அநுர குமாரவும் முன்வைத்தார். குறிப்பாக, வைப்புத் தொகையை, 1,500 ரூபாயாக மாற்றுவதற்கான திருத்தத்தை, அவர் முன்வைத்தார். தற்போதைய நிலையில், அரசியல் கட்சியொன்று, வைப்புத் தொகையில் மாத்திரம், சுமார் 25 மில்லியன் ரூபாயைச் செலவிட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், தேர்தலில் பெண்கள் தெரிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களைப் பெறுவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள், பெண் உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய நிர்ப்பந்திக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்டார். மாறாக, சிறிய கட்சியொன்று, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களைப் பெற்றாலேயே, பெண் உறுப்பினரை நியமிக்க நிர்ப்பந்திக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். 

இதற்குப் பதிலளித்த அவையின் தலைவர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் முன்வைத்த திருத்தங்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .