2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அம்மாவை எங்களிடம் தா’

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  (சீ.ஐ.டி), வாக்குமூலமளிப்பதற்கு வந்திருந்த போது, அங்கு பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சீ.ஐ.டிக்கு செல்லும் பிரதான வீதியை மறித்தே, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், வாக்குமூலம் அளிப்பதற்காக, மஹிந்தவுடன் வருகைதந்திருந்த, ஷிரந்தி ராஜபக்ஷ பெரும் சிரமப்பட்டார்.

இருவரும் ஒரு காரிலும், புதல்வர்கள் மூவரும் மற்மொரு காரிலுமே, வருகைதந்திருந்தனர். அவர்களுடன், அவர்களின் சட்டத்தரணிகளும் வந்திருந்தனர். அங்கு, ஆதாரவாளர்கள் புடைச்சூழ்ந்து கொண்டமையால், காரிலிருந்து இறங்கி, திணைக்களத்துக்கு செல்வதற்கு, மஹிந்தவும் ஷிரந்தியும் பெரும் சிரமப்பட்டனர்.   

செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக, சிரிலிய சவிய வேலைத்திட்டத்துக்காக, வழங்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின், நிறத்தை மாற்றியமை தொடர்பிலேயே, ஷிரந்தியிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.   

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு நேற்றுக் காலை 10:05க்கு வருகைதந்த அவர், 12:35க்கு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவருடைய பாரியாரும், திணைக்களத்துக்கு சென்று திரும்பும் வரையிலும், அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள், “அம்மாவை எங்களிடம் தா, மஹிந்த ஆட்சியே எமக்கு வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.   

அங்கு, பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், விசேட அதிரடிப்படையினர் உஷார் நிலையில் இருந்தனர். அத்துடன், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.   

இதேவேளை, மஹிந்த-ஷிரந்தியின் புதல்வர்களில் ஒருவரான ஒருவரான ரோஹித ராஜபக்ஷ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலும் (எப்.சீ.ஐ.டீ), நேற்று (15) ஆஜராகி, வாக்குமூலமளித்தார்.   

சீனாவின் சுப்ரீம் சட் 1 என்ற செய்மதி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கே ரோஹித அழைக்கப்பட்டிருந்தார். அவர், அங்கு பொறியியலாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலமளிப்பதற்கு, காலை 10 மணிக்கு சென்றிருந்த அவர், மாலை 3:45க்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, ஷிரந்தி ராஜபக்ஷ, சீ.ஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த விவகாரம் தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கு அவர்களுடைய இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு. இன்று (16) அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .