2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்துக்கு மீண்டும் முஸ்தீபு

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.  

மாலபேயிலுள்ள “சைட்டம்” தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இணக்கம் காணப்படாத யோசனைகள், அரசாங்கத்தின் நிலை​ப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால், மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதைத் தவிர்க்க முடியாது என்று, அந்தச் சங்கத்தின் குழு உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.  

தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, சைட்டம் நிறுவனத்துக்கு மாணவர்களைச் சேர்த்து கொள்ளுதல் மற்றும் பட்டங்களை வழங்குதல் ஆகியனவற்றைக் கைவிட்டு, சட்டரீதியான நடவடிக்கையை அவசரமாக எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும், சைட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முற்றிலும் மாறுபட்ட விவகாரமே ​தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, தங்களால் இணக்கம் காணப்படாத கருத்துகளை அடிப்படையாக வைத்துக்கொண்டே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.  

சைட்டம் நிறுவகம் தொடர்பிலான அடிப்படை மதிப்புகளை சட்டமா அதிபர் ஊடாக, உயர்நீதிமன்றத்துக்கு முன்வைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.  

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் அல்லது அந்தப் பேரவையின் சுயாதீனத்துக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது இணக்கம் தெரிவித்திருந்தார்.  

அதேபோல, “சைட்டம் பிரச்சினையில், ஏற்பட்டுள்ள அடிப்படை முரண்பாடுகளுக்கு, மக்களுக்கு தீங்கு ஏற்படாதவகையில், தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்து, புதிய அனுமதிக்காக வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது, இணக்கம் தெரிவித்திருந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

நாட்டில் உருவாகியுள்ள தொற்றுநோய்த் தன்மையைக் கவனத்தில் கொண்டும், ஜனாதிபதியுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை நாம் கைவிட்டிருந்தோம். ஜனாதிபதி கேட்டதற்கு இணங்க, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்தோம். நிறுத்தவில்லை. 

எனினும்,எங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்படாத விடயங்கள், அரசாங்கத்தின் அறிக்கையில் உள்ளன. அவை தொடர்பில், நாம் கலந்தாலோசிக்கின்றோம். எம்முடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அரசாங்கம் செயற்படாவிடின், கடந்த வௌ்ளிக்கிழமை தற்காலிகமாக கைவிட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்னும் இரண்டொரு நாட்களில் மீண்டும் தொடர்வோம் என்றும் அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.  

மாலபேயிலுள்ள “சைட்டம்” தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் அடங்கிய விசேட அறிவிப்பொன்றை, ஜனாதிபதி செயலகம், ஞாயிற்றுக்கிழமை விடுத்திருந்தது. 

இதற்கமைய, நிபந்தனைகள் அடங்கிய அரச வர்த்தமானி அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் முழுமையாக நிறைவுசெய்யும் வரை, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்களை இணைத்துக்கொள்வதையும் பட்டம் வழங்குதலையும் இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனினால் வெளியிடப்பட்டிருந்த அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  

வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்கியுள்ள நிபந்தனைகளை நிறைவுசெய்யும் வரை, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர்களை இணைத்துக்கொள்வதை நிறுத்துதல் மற்றும் பட்டம் வழங்குதலை நிறுத்துதல். 

மருத்துவக் கல்விக்குரிய ஆகக்குறைந்த தராதரங்களின் செல்லுபடியாகும் தன்மைச் சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனால், மருத்துவக் கல்வியின் ஆகக் குறைந்த தராதரத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரித்தல். 

இலங்கை மருத்துவச் சபையின் தன்னாதிக்கம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மைக்கு, எந்தவொரு நிறுவனத்தினதும் நபர்களினதும் அழுத்தம் இருக்கக்கூடாது. 

சைட்டம் நிறுவனத்தில் தற்போது கல்விகற்கும் மாணவர்களின் பாடநெறிகளை, இலங்கை மருத்துவச் சபையின் அங்கிகரிக்கப்பட்ட முறைமைகளுக்கமைய தயாரித்தல் மற்றும் தற்போது பட்டத்தை நிறைவு செய்துள்ள மாணவர்களின் பட்டத்தை, இலங்கை மருத்துவச் சபையில் பதிவு செய்யக்கூடிய முறைமையை தயாரித்தல். 

சைட்டம் நிறுவனம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுதல். 

இதற்கு மேலதிகமாக, சைட்டம் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்து, அரச மற்றும் தனியார் ஒருங்கிணைந்த கருத்திட்டமாகச் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 

சைட்டம் நிறுவனத்துக்குரிய மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. 

சைட்டம் நிறுவனத்துக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்காக, பங்குச்சந்தையில் நுழைதல் அல்லது அரச மற்றும் தனியார் நிதியுடனான நிதியத்தை நிறுவுதல் தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்தி, பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

மேற்குறித்த விடயங்கள் மற்றும் அவற்றில் உள்ளடக்கப்படாத ஏதாவது சிக்கல்கள் இருப்பின், அவற்றைத் தீர்த்துவைப்பதற்காக, உரிய தரப்பினருடன் புதிய அணுகுமுறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் மூலம், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் உள்ளிட்ட விடயங்களும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களே, தங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாதவை என, அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .