2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

​அவசரகால நிலை நீங்கியது

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையை அடுத்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலை, நேற்று முன்தினம் (17) நள்ளிர​வுடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, நாடு திரும்பினார்.

இவ்வாறு நாடு திரும்பிய ஜனாதிபதி, நாட்டில் நடைமுறையில் இருக்கும் அவசரகால நிலையை நீக்கும் அதி விசேட வர்த்தமானியில், கைச்சாத்திட்டுள்ளார்.

இந்நிலையில் தனது ஜப்பான் விஜயத்தை, வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, குறுகியகால மற்றும் நீண்டகால இலாபங்களை ஏற்படுத்திக்கொண்டு, தான் நாடு திரும்பியுள்ளதாக, அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியான நிலைமையைக் கருத்திற்கொண்டு, நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசரகால நிலையை நீக்குவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில், இனங்களுக்கிடையே ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கடந்த 6ஆம் திகதி செவ்வாய்க்கிழ​மையன்று, நாட்டுக்குள், அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கலகங்கள் மற்றும் கலவரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை, மேற்படி அவசரகால நிலைமையின் கீழ் முன்னெடுத்த பொலிஸார், தற்போதைக்கு, நாட்டுக்குள் அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே, மேற்படி அவசரகால நிலை, நீக்கப்பட்டது. இது தொடர்பான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2062/50 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி, நேற்று முன்தினம் (17) நள்ளிரவு வெளியிடப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .