2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’அவசரகால நிலையை நீக்க வேண்டாம்’

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும்வகையில், பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை, விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் நீக்கவேண்டாமென, பாதுகாப்புத் தரப்பினர், அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுச் சம்பவங்களையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கடந்த 6ஆம் திகதியன்று அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றையதினம் மாலை வெளியிடப்பட்டதுடன், இந்த அவசரகால நிலை, 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருக்குமென, அறிவிக்கப்பட்டது.  

அதனடிப்படையில், அவசரகால நிலைமை, இன்று(16) வௌ்ளிக்கிழமையுடன் நீக்கிக்கொள்ளப்படவேண்டும். எனினும், ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டுக்குத் திரும்பியதன் பின்னரே, அதுதொடர்பில் தீர்மானம் எடுப்பாரென ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.  

நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்ற அதிருப்திகரமான பாதுகாப்பு நிலைமையை மீட்சியுறச் செய்வதற்கான நடவடிக்கையாகவே, அவசரகால நிலைமை 10 நாட்களுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென, அறிவிக்கப்பட்டிருந்தது.  

குற்றவியலில் எரிச்சலூட்டும் பகுதியை அடக்குதல், சமூகத்தை உடனடியாக மறுசீரமைத்தல் மற்றும் பொலிஸார் அதேபோல பாதுகாப்புப் படையினர் சரியான முறையில் வலுவாக இருப்பதற்கு ஏதுவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையிலே​யே, கண்டி நிர்வாக மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நிறைவடையும் வரையிலும், அவசரகால நிலையை நீக்கவேண்டாமென்றே, பாதுகாப்புப் பிரிவினர் அரசாங்கத்தின் கோரியுள்ளனர்.  

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது, விரிவான அறிக்கையொன்றையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பாதுகாப்புத் தரப்பினர் கையளிக்கவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

அதுமட்டுமன்றின், பாதுகாப்புத் தலைமையதிகாரி, பாதுகாப்பு பிரதானிகள் பங்கேற்ற வாராந்த பாதுகாப்பு நிலைவரம் தொடர்பிலான கடந்தவாரக் கூட்டத்தின் போது, மேற்படி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு, அதுதொடர்பிலான அறிக்கையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புதன்கிழமை (14) கையளிக்கப்பட்டுள்ளது.  

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் 70 சதவீதமானவை நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ளதையும் குறுகிய காலத்தில் விரைவாக விசாரணை செய்துமுடித்து அறிக்கையிடவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாதுகாப்புத் தரப்பினர் உறுதியளித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

ஆகையால், கண்டி சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் அவசரகால நிலையை நீக்கவேண்டாமென, பிரதமரிடம் ​கையளித்துள்ள அறிக்கையை, ஜப்பான் விஜயத்தை முடித்துகொண்டு, நாளை (17) நாடு திரும்பவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பாதுகாப்புத் தரப்பினர் கையளிக்கவுள்ளனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.  

ஏழு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் அவசரகால நிலைமை முதன்முறையாக மார்ச் மாதம் 6ஆம் திகதி மாலை பிரகடனப்படுத்தப்பட்டது.  

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சிவில் யுத்தத்​தின் காரணமாக, நாட்டில் அவசரகாலச் சட்டம் மூன்று தசாப்த காலமாக அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .