2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இறந்தவர்களை நினைவுகூர்தல் தேசத் துரோகக் குற்றமா?’

Editorial   / 2018 மே 26 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறந்தவர்களை நினைவுகூர்தல் தேசத் துரோகக் குற்றமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர்  வி.ஜனகன், தனியார் வங்கியொன்றின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 18ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில்  நினைவேந்தல் நிகழ்வினை செய்தமை தொடர்பில், குறித்த வங்கியின் முகாமையாளர் ஒருவரும் சிற்றூழியர் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர்  வி.ஜனகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“போர் நடந்து பல்லாயிரம் மக்கள் இறந்த இடத்தில் இருக்கும் தனியார் வங்கி,  மக்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளத் தவறியதா  என்ற கேள்வியே என்  மனதில் எழுகின்றது.

“கிளிநொச்சியில் இயங்கும் இந்தக் கிளையில் இருந்த ஊழியர்கள் செய்தது, நிறுவனம் ஒன்றின் வரையறைகளுக்குள் வரவில்லை என்றாலும், அதனைக் கையாளும் போது, அங்கு உள்ள மக்களின் மனநிலையையும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்.

“அந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அந்தக் கொடிய போரில் தங்கள் உறவுகளை இழந்தவர்களாக இருக்கலாம்; அவர்களுக்கு மற்றவர்கள் போல் துக்கம் அனுஷ்டிக்கத் தேவை ஏற்பட்டிருக்கலாம். ஒரு வேளை இதனை அந்த வங்கியின்   தலைமை விரும்பாமல் இருந்தால் கூட, அப்பிரதேச மக்களின் உணர்வுளுக்கு மதிப்பளித்து, அந்த ஊழியர்களை இடைநிறுத்தாது, இந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தங்கள் கிளைகளில் இடம்பெறாமல் தடுப்பதற்கான அலுவலக ரீதியான கட்டளையைப் போட்டிருக்கலாம்.

“அது சரி, வங்கியின் தலைமையே, நீங்கள் கூறிய அறிக்கையில் இன, மத ரீதியான செயற்பாடுகளுக்கு எமது வங்கி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியாயின், கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு ஏன் உங்கள் கிளைகளை அலங்கரிக்கிறீர்கள்? வெசக், பொசன் வரும்போது அலங்கரிப்பது மட்டும் அல்லாமல் உங்கள் ஊழியர்கள் தன்சல் (அன்னதானம்) வழங்குகிறார்களே? தைப்பொங்கலுக்கு பொங்குகிறீர்கள். சிங்கள, தமிழ் புது வருடத்துக்கு அந்தக் கொண்டாடங்களையும் செய்கின்றீர்கள்.

“அந்த இடத்தில் மாபெரும் துயரச் சம்பவம் இடம்பெற்றதை நினைவுகூர்கிறார்கள். இதேபோல் தானே சுனாமியால் மக்கள் இறந்ததும்  நினைவுகூரப்பட்டது.  அப்போதும் உங்கள் பல கிளைகள் இந்த அனுதாப நினைவுகூரலை செய்தார்கள். அது தவறாகவில்லையா?

“இந்த விடயம் தொடர்பில் தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் எமது கட்சியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசனுடன் கலந்துரையாடியுள்ளேன்.  

“இந்த நடவடிக்கையானது நிச்சயமாக நல்லிணக்கத்துக்கான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு. மிக விரைவில் இந்த நடவடிக்கை தொடர்பில்  அமைச்சர் குறித்த தரப்பினருக்குத் தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .