2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்குள் மூவினத்தவரும் ‘வெவ்வேறு நாட்டவராக பயணிக்க முடியாது’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க இந்நாட்டுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை எங்கள் தாய்நாடு. நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள், கல்விக் கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியைத் தேடவும் வேண்டும்” என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தனது பேஸ்புக்கில் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியக் கட்சிகளின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன், மேற்கண்டவாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் கட்சிகள் சொல்லியோ சொல்லாமலோ, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, ஒரு முனைப்பில், ஒரு செய்தியைச் சொல்லி, வடக்கு, மலையகம், கிழக்கு, மேற்கு, தெற்கு என நாடு முழுவதிலும் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையான சிங்கள பெளத்த மக்களும், வேறு முனைப்பில் இன்னொரு செய்தியைச் சொல்லி வாக்களித்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதற்காக, ஒருசில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது நபர்கள், “நாங்கள் சொன்னோமே, கேட்டீங்களா” என்ற பாணியில் பேசக் கூடாதெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது செய்தியை அவர்கள் புரிந்துக்கொள்வதைப் போன்று, சிங்கள மக்களின் செய்தியை நாமும் புரிந்துக்கொள்ள முயல வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர், தேர்தல் முடிவுகள் வழங்கியுள்ள மகிழ்ச்சியின் பேரால், ஆங்காங்கே சிலர் முன்னெடுக்கும் அசம்பாவிதச் சம்பவங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவை முடிவுக்கு வருமென நம்புவதாகவும், தனது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .