2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னேற்றமடைகிறது’

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கானச் செயற்பாடுகள், படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, அவசரப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடும்போக்காளர்களே இலாபமடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்துவதற்கு, இரண்டு வருட காலம், தமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக, அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

நேற்று (22) இரவு, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மனித உரிமைகள், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கிய ஜனாதிபதி, இந்த அனைத்து நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங்களையும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டே முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இந்த விஜயத்துக்கு முன்னர் தான் கையொப்பமிட்டதாகவும் அதன் நடவடிக்கைகள் செயற்றிறனாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசமைப்பு தொடர்பான உத்தேச வரைபை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு படையினர் வசமுள்ள கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட  ஜனாதிபதி, வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவை நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, முறையாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டுவதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையாளர் ஹுஸைன், முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கான பயணம், மேலும் விரைவுபடுத்தப்படுமாயின் மகிழ்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்தார். காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிய ஆணையாளர் ஹுஸைன், அந்த அலுவலகத்துக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் நியமனங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது, இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை தயாராகவுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .