2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’உணர்ச்சிவசப்படுகிறார் சம்பந்தர்’

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜம்

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்று (16) ஆற்றிய உரை, "உணர்வுபூர்வமாக இருந்தது" என, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதம் நேற்று (16) நடைபெற்றபோது, இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, "எதிர்க்கட்சித் தலைவர், உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அவரது உரையை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த கூறியதாவது,

“யாரும் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தினோம். எமது காலத்திலேயே அபிவிருத்திகள் இடம்பெற்றன" என்றார்.

"தொழில் வாய்ப்பு, வர்த்தகம், விவசாய நிவாரணம், வெளிநாட்டு முதலீடு, அபிவிருத்தி இவை அத்தும் இல்லாத இந்த நேரத்தில், வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏன், பெற்றோலும் கூட நாட்டில் இல்லை.

"இந்த அரசாங்கம், மிகப்பெரிய வரிச் சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கிறது. புதிய தொழில்நுட்பம், புதிய பெருந்தெருக்கள், துறைமுக அபிவிருத்தி, கைத்தொழில் வளர்ச்சி என அனைத்தும், எமது அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றன. இந்த அரசாங்கத்தின் காலத்தில் எங்கேயாவது ஒரு சிறு வீதியையேனும் அபிவிருத்தி செய்திருக்கிறார்களா? இல்லை.

"கடனைப் பற்றிப் பேசுகிறார்கள். எமது ஆட்சிக் காலத்தில், பெரும் கடன் சுமை இருந்ததாகவும் அதனால் தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். குறிப்பாக பிரதமர் உரையாற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதனைச் சுட்டிக்காட்டுகிறார்.

"வொக்ஸ்வோகன் நிறுவனத்தை இலங்கைக்கு கொண்டுவந்து, 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறிய அவருடைய உறுதிமொழிகள் போலத்தான், அவரது பொய் அமைந்திருக்கிறது.

"இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகாலப் பகுதியில், 2 ஆயிரத்து 773 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனைப் பெற்றிருக்கிறது. 2009 முதல் 2014 வரை நாம் பெற்றுக்கொண்ட கடன் தொகையையும் பார்க்க இது அதிகமானதாகும். நாம் கடன் பெற்றுக்கொண்டோம், அதேபோல நாம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களையும் செயற்படுத்தினோம். எமது காலத்திலேயே அபிவிருத்திகள் இடம்பெற்றன.

"வடக்கில் பாரியளவு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களைச் செய்தோம். அரச நிறுவனங்கள், நீதித்துறைக் கட்டங்கள், சுற்றுலாத்துறை சார்ந்த விடயங்கள் என அனைத்தையும் விருத்தி செய்தோம். நாம், அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கும்போது, அவற்றை வைத்துச் சாப்பிட முடியுமா எனக் கிண்டல் செய்தவர்கள், இன்று அதனை மேம்படுத்துவது குறித்து சிந்திக்கிறார்கள்.

"அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர், அதிவேக நெடுஞ்சாலை ஒன்றையேனும் அமைக்க முடிந்ததா? நாட்டில் வாழும் சாதாரண அடிமட்ட மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாமல், வரிச்சுமையை அதிகரித்து வரவு - செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்லாது, இந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு காலம் தாழ்த்துகிறது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X