2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘எதிர்கால சந்ததிக்காக நாட்டு வளங்களைப் பாதுகாப்போம்’

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த  ஆட்சியில், அரச சொத்துகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பல இடைநடுவில் கைவிடப்பட்டனவெனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கத் தயாராகவுள்ள மாணவர்களுக்காக அரச சொத்துகள் பாதுகாக்கப்படும் என்பதுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும்  விரைவில் நிறைவுப்பெறும் எனவும் தெரிவித்தார்.

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், நாட்டு மக்களின் மனதில் இருந்து மரண பயம் தற்போது நீங்கியுள்ளது. பயங்கரவாதத்தால் ஏற்பட்ட  அச்சம் நீங்கினாலும், பெற்றோருக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலை, தங்களது பிள்ளைக்கு சிறந்த பாடசாலை கிடைகாதா என்பதாகும்.

அரசியல் ரீதியாக கடந்த காலத்தில் பலர் எம்மிடம் வந்து, தமது பிள்ளைகளை சிறந்த பாடசாலையில் இணைத்துத் தருமாறு கோரினர் எனத் தெரிவித்த அவர், பெற்றோரிடம் இந்த அச்சம் இன்னும் நீங்கவில்லை என்றார்.

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்கின்றபோதே அதிகளவில் போலி ஆ​வணங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் பொய்யுரைக்கின்றனர். இது பெற்றோரின் தவறல்ல, இவ்வாறான நடைமுறையை மாற்றியமைக்க வேண்டிய எமது கடப்பாடாகும்  என்றார்.

கடந்த அரசாங்கம் எமது வேலைத்திட்டங்களை நிறுத்தியது. உர நிவாரணங்களை நிறுத்தியது. மத்தல விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக்கியது.  கொழும்பில் மிதக்கும் வர்த்தக சந்தையை அழிவடையச் செய்தது. இவ்வாறு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த ஆட்சியில் முடங்கின எனவும் தெரிவித்தார்.

நாம் இன்று பழிவாங்கும் படலத்தை நிறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவர்களால் கடந்த அரசாங்கம் வழங்கிய உயர் பதவிகளைக் கொண்டு, நாட்டை  நடத்தி வருகிறோம். யாரை நியமித்தாலும், அவர்கள் தங்களது சேவைகளை சரிவர செய்ய வேண்டுமென்றே நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உட்பட பெரும்பாலானோர் எதிர்க்கட்சியினரே உள்ளனர். எமக்கு 96 பேர் மாத்திரமே உள்ளனர். இதனால், சில சட்டமூலங்களை நாம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்காது உள்ளோம் எனத் தெரிவித்த அவர், இந்நிலை மாற்றமடைய வேண்டும் என்பதை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எமது வேலைத்திட்டங்களை நாட்டில் பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர். எனவே, நாட்டு வளங்களை ஒருபோதும் விற்​பனை செய்ய மாட்டோம் எனத் தெரிவித்த பிரதமர், நாட்டு வளங்களைக் கொண்டு நாட்டை  மேலும் அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .