2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’எதிர்க்கத் துணிச்சல் இல்லாதவர்களே பிரஜாவுரிமையை பறிக்க முயற்சி’

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிச்சல் இல்லாதவர்கள், விசேட நீதிமன்ற சட்டமூலத்தை நிறைவேற்றி அதனூடாக அவரின் பிரஜா உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறார்கள்” எனத் தெரிவித்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளி விவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், “பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது” என்றார்.

பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை எதிர்த்து தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என்பதை உணர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, அவருக்கெதிராக விசாரணைகளை மேற்கொண்டு, அவரின் பிராஜா உரிமையைப் பறிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

“நாட்டை ஊழலற்றதாக்குவதற்கும், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்காகவும் விசேட நீதிமன்றம் அமைப்பதாகக் கூறப்பட்டாலும், இது திருடர்களை தண்டிப்பதற்கானதல்ல. மாறாக மக்களின் அபிமானத்தை வென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பத்தினரையும் சிறையில் அடைப்பாதற்கான முயற்சியே இதுவாகும்.

“பாரிய ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழு எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதைவிட, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபையில் பல ஆயிரம் அமெரிக்க டொலர் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதியமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இது தொடர்பில் எப்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்?” என்றும் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

மேலும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்கான சட்டமூலம் முறையாக நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், அந்தச் சட்டமூலம் மீது மீண்டும் விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படவேண்டுமென ஜி.எல்.பீரிஸ், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக, சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X