2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கதவுகள் திறக்கப்பட்டுள்ளன’

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பா.நிரோஸ் 

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுப்பட்டார். அதற்காக உயர் நீதிமன்றத்தில் வியாக்கியானத்தைக் கோரியிருந்தார்” என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், “இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதற்காவே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.  

“இந்நிலையில், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.  

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,  

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்பூரில் மாநாடுகளை நடத்தியும், ஜனாதிபதி ஜப்பானுக்கு சென்றும் இலங்கைக்கு முதலீட்டாளர்களை அழைக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், இலங்கையில் உள்ள சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, எந்த முதலீட்டாளர்களும் இங்கு வரப்போவதில்லை” என்றார். 

“தற்போதைய அரசாங்கம் ஸ்தீரமற்ற நிலையிலேயே உள்ளது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மறுநாள் தாம் எந்த அமைச்சுப் பதவியில் இருக்கப்போகின்றோம் என்பதை அறியாத நிலையில் உள்ளனர். அதனால் இலங்கைக்கு முதலீடுகள் வராது. 

“இந்த நிலையில், ஊழல் மோசடிகள் தொடர்பில், விசேட நீதிமன்றம் அமைக்கப்படுமென தெரிவிக்கின்றனர். விசேட நபர்களை இலக்குவைத்து இந்த நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இதற்கெதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.  

“அமைச்சர் மஹிமந்த அமரவீர, புதிய மாற்றம் ஒன்றை விரைவில் எதிர்பார்க்கவுள்ளதாக, நம்பிகை வாக்குறுதியை கூறியிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இருக்க முடியாது” என்றும் அவர் கூறியிருந்தார்.  

“கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2 வருடங்களுக்கு மேலாக கூட்டாட்சி தொடராது என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது கூட்டாட்சி தொடரப்படும் என்கிறது. அதனால் அரசாங்கம், மலைக்கு வைத்த இலக்கு எலியின் மீதுதான் பதிந்தது என்பதே வெளிப்படுகின்றது. 

“ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை இராணுவத்துக்கு எதிராக, சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

“இராணுவத்தினரிடம் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளாமையே இதற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறினாலும் அது பொய்யான விடயமாகும். வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இலங்கையில் இடம்கொடுக்க வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் எதிர்பார்ப்பாகும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .