2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கந்தப்பளையில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு

J.A. George   / 2021 ஜனவரி 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில் நேற்று (17) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.

பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வீடுகளை அமைப்பதற்கு காணியை வழங்க மறுப்பு தெரிவித்த கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளர், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, நேற்றிரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், தோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், முகாமையாளர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றமையினால், சம்பவ இடத்தில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 305 வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காணிகளை வழங்க தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புக்களை மேற்கொண்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, தோட்ட முகாமையாளர் பெருந்தோட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .