2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’குருந்தூரை குருந்தியாக மாற்றும் படத்தை கிழித்தெறி’

Editorial   / 2021 ஜனவரி 20 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நிரோஷினி விஜயராஜ்

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (19) அமர்வில், விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்துரைத்த அவர், 'தமிழர்களின் நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது எனவும், மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஆகையால், இதற்கு அவசரமான தீர்வு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினோம். இருப்பினும், இந்த வாரம் முழுவதும் நில அளவை செய்யப்படவுள்ளது என்றார். 

அதேபோல், குருந்தூர் பகுதிக்கு அண்மையில் சென்றோம். இதன்போது, அங்குள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டு, பாதைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டு இருந்தன. அத்துடன், நூல்களால் எல்லையிடப்பட்டும் இருந்தது. அத்துடன், கட்டுமானத்துக்கான அத்திபாரமும் வெட்டப்பட்டிருந்தது. இதைக் கேட்டபோது, தொல்லியல் இடம் எனத் தெரிவிக்கப்பட்டது' என்றார்.

இந்தப் பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், 2018 ஆம் ஆண்டில், தமிழர்கள் இங்கு வழிபடத் தடையில்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இங்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்ட, இந்தப் பகுதியை புத்தமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சாடினார்.

'கடந்தாண்டு டிசெம்பர் மாதம், இந்தப் பகுதியில் நிலஅளவை முன்னெடுக்கப்பட்டு, எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு, வரைபடமொன்று தயாரிக்கப்பட்டது. இந்த நிலஅளவைப் பணி, முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவை அதிகாரிகளால் முன்னெடுக்காது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரியால் முன்னெடுக்கப்பட்டது' என்றார். 

அந்த நிலஅளவை அடிப்படையிலேயே, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அந்த இடம் குருந்தி விகாரைக்குச் சொந்தமானது என அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வரைபடம் உடனடியாக இரத்துச்செய்யப்பட்டு, இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டுமென்றுஇ அவர் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .