2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்வித் துறையில் தீவிர மாற்றம்

Editorial   / 2018 மே 25 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

இனிவரும் காலங்களில், கல்வித்துறையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டு வருவதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வியமைச்சில் நேற்று (24) இடம்பெற்ற கர்ப்பிணி ஆசிரி​யைகளுக்கான புதியவகை ஆடையொன்றை அறிமுகப்படுத்திவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், “நம் நாட்டின் கல்வித்துறைக்கு, காலத்துக்கு ஏற்றவாறான மாற்றமொன்று தேவைப்படுகிறது. அதற்கமைய, ஆசிரியைகள், தமது கர்ப்பகாலத்தில் பாடசாலைக்கு அணிந்து செல்வதற்கான புதிய வகை ஆடையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.   

இத்திட்டத்தை, துறைசார் அறிவுமிக்க நிபுணர்களின் அறிவுறுத்தலுடன் மேற்கொண்டுள்ளதாகவும் கல்வித்துறையில் இதுபோன்ற பல தீவிரமான மாற்றங்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படுமென்றும் குறிப்பிட்டார். 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இந்நாட்டில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறிய அமைச்சர், வருடாந்தம் 10 ஆயிரம் பேர், பிரசவ விடுமுறையில் செல்கின்றமையால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால், ஒவ்வொரு பாடசாலைக்கும் மேலதிக ஆசிரியர் கு​ழாமொன்றை நிறுவ உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.  

அத்துடன், பாடசாலைச் சீருடைகளை, மாணவர்களுக்குச் சௌகரியமான முறையில் மாற்றியமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் அகில விராஜ், மாணவர்கள் வசிக்கின்ற பிரதேசங்களின் காலநிலையை மையப்படுத்தி, சீருடைகளின் நிறம் தீர்மானிக்கப்படுமென்றும் கூறினார்.   

மேலும், அதிக புத்தங்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ளும் மாணவர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்கு வெளிநாட்டுப் புலைமைப்பரிசில்களையும் சுற்றுலாப் பயணங்களையும் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதென, அமைச்சர் மேலும் கூறினார்.   

6 வடிவங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சீருடையை, அணிய வேண்டுமென்ற கட்டாயம் இல்லாததோடு, கர்ப்ப காலத்தில், ஆசிரியைகளின் விருப்பத்துக்கமைய, அவர்கள் இவற்றைப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .