2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டணிக்குள் கருத்து மோதல்?

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


அழகன் கனகராஜ்  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட்ட கட்சிகளுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அக்கூட்டணிக்குள் முரண்பாடுகளும் வலுப்பெற்றுள்ளனவென, உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

தொகுதிகளில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், கூட்டணிக்குக் கிடைத்த போனஸ் ஆசனங்களை, கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கிடையே பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையே, அந்தக் கருத்து மோதல்களுக்குக் காரணமென அறியமுடிகின்றது.  

கருத்து மோதல்களை அடுத்து, கொழும்பில் கடந்த சில நாட்களாக உயர்மட்ட ரீதியில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்பட​வில்லையென்றும் அறியமுடிகின்றது.  

மலையகத்தையும் கொழும்பையும் மையப்படுத்தி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையின பிரதானக் கட்சிகளுடன் இணைந்து, சிறுபான்மையினக் கட்சிகள் கூட்டணியாகவும் தனியாகவும் போட்டியிட்டன.  

அதில், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியில் களத்தில் குதித்திருந்தன.  

அந்தக் கூட்டணி, சில இடங்களில் தனித்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் சில மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் போட்டியிட்டது.   
அதேபோல, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆகியனவற்றுடன் இணைந்து கூட்டணியாகவும், சில இடங்களில் சேவல் சின்னத்தில் தனித்தும் போட்டியிட்டன.  

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்தன் பின்னர், தொகுதி ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் பிரகாரம், போனஸ் ஆசனங்கள் கிடைத்துள்ளன. அதனைக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிக்கு அல்லது கட்சிகளுக்குப் பகிர்ந்தளிப்பதி​லேயே பிரச்சினைகள் எழுந்துள்ளனவென அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .