2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சட்டத்தரணியிடம் விளக்கம் கோரவில்லை’

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையிலுள்ள 160 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்று தெரிவித்த கருத்துத் தொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணியான லக்ஷான் டயஸிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம் கோரியுள்ளது என்று வெளியான செய்தி பொய்யானது என, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, அவ்வாணைக்குழுவால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இலங்கையின் அரச ஊடகத்தால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது எனத் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில், அவ்வாறான முடிவொன்று எடுக்கப்படவில்லை என, சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அத்தோடு, இவ்விடயம் சம்பந்தமாக, நீதியமைச்சரால், சங்கத்துக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் எந்தக் கடிதம் தொடர்பாகவும் ஆராயப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மாறாக, லக்‌ஷான் டயஸின் சட்டத்தரணி உரிமத்தை இல்லாது செய்யப் போவதாக, நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, சட்டத்தரணிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், நீதியமைச்சரின் குறித்த கருத்து, கண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தனர். இன்னும் சில உறுப்பினர்கள், குறித்த விடயம், சட்டத்தரணிகள் சங்கத்தில் ஆராயப்படுவதற்கு விமர்சித்ததோடு, நீதியமைச்சரை நியாயப்படுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் தலையிட்ட சங்கத்தின் தலைவர், பிரமாணப் பத்திரத்தின் வடிவில், லக்‌ஷான் டயஸின் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்ததோடு, அதற்கு மேலாக எதுவும் கலந்துரையாடப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயத்தில், சட்டத்தரணிகள் சங்கத்தைச் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, உறுப்பினர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த ஆணைக்குழு, தனது உறுப்பினர்கள் மீதே விசாரணையை மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டது. 

சட்டத்தரணிகள் சங்கம், அரசினுடையதோ அல்லது நீதியமைச்சினுடையதோ ஓர் அங்கம் கிடையாது என்று தெரிவித்த அந்த அறிக்கை, சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையைத் தவிர, நீதியமைச்சருக்கு, விசேட உரிமைகள் எவையும் கிடையாது என்றும் தெரிவித்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .