2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சரத்தை திருத்தும் அதிகாரம் உள்ளது’

Niroshini   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றின் பரிந்துரையின் பேரில், நபரொருவரின் குடியுரிமையை நீக்குவது தொடர்பில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அரசமைப்பின் சரத்தைத் திருத்தம் செய்வதா அல்லது இல்லையா என்பது பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கே இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் நேற்று (06) தெரிவித்தார்.   

அந்த வகையில், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.   

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியனவற்றின் அறிக்கைகள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்றது.   

சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்ற அந்த விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சம்பந்தப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையிலேயே, பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.   

அரசியலமைப்பின் 81(1)ஆவது சரத்தில்,   

யாதேனும் நபரொருவர் செய்த அல்லது செய்யாமல் கைவிட்ட ஏதேனும் செயற்பாட்டின் காரணமாக, அந்த நபரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று, 1978ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் (சமூகமளிக்காத உறுப்பினர்களும் உட்பட) நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் குறையாத ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு மேற்படாத காலமொன்றுக்கு நீக்கவும் அந்த நபர் எம்.பி.யாக இருக்கும் பட்சத்தில் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவும் முடியும் என்று விதந்தரைக்கப்பட்டுள்ளது.   

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“இரண்டாவது அறிக்கையான பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் சட்டங்கள் பற்றி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன. சட்டங்களுக்கு மேலதிகமாக அரசமைப்பின் 81ஆவது சரத்தை திருத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பிலும் சபையால் பரிசீலித்து பார்க்க வேண்டியிருக்கும். ஏனெனில், அரசியல் உரிமைகள் பற்றிய அந்த அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது.  

“நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பு விடுப்பதற்கான அதிகாரம் மட்டுமே எனக்கு இருக்கிறது. அழைப்பு விடுத்ததன் பின்னர் அதை எத்தனை நாட்கள் என்று முடிவுசெய்து கொள்வது கட்சித் தலைவர்கள் தீர்மானமாகும். அந்த வகையில், இன்று (நேற்றுச் செவ்வாய்க்கிழமை) கூடுவதற்கும் மீண்டும் எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் கூடுவதற்கும் கட்சித்தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எம்.பிக்கள் பலரும் இன்று சபையில் இல்லாமையால் அந்த யோசனை உகந்ததென நான் கருதுகிறேன்.   

“ஆகவே, இன்று (நேற்றுச் செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து எமது கருத்துகளை முன்வைத்து, ஏனையவர்கள் பின்னர் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.   

திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தை நாடி உத்தரவும் பெறப்பட்டுள்ளது. சில சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுமுள்ளனர்.   

“பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் இந்த நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. சுமார் 30 பேருக்கு எதிராக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த சபையில் அங்கம் வகிப்பவர்களும் இருக்கின்றனர்.   

“குறிப்பாக, அந்த வழக்கு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்த சபையால் பரிசீலிக்கப்படுவதற்கு மேலும் சில யோசனைகள் இருக்கின்றன. மத்திய வங்கி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள் சிலவற்றை திருத்தம் செய்வது அதிலொன்றாகும்.   

“நாம் ஏற்கெனவே சில புதிய சட்டங்ளை தயாரித்து வருகிறோம். அதற்கு மேலதிமாக தேவையானவற்றையும் தயாரித்து வருகிறோம்.  

“இதேநேரம், இதுவரை பிணைமுறி விவகாரம் தொடர்பான கோப் அறிக்கை பற்றி எடுக்கப்பட்டு நடவடிக்கைகளின் விவரங்கள் பற்றி சட்ட மா அதிபரிடம் தாம் கேட்டிருந்ததாகவும், அந்த வகையில், கோப் அறிக்கை பற்றி சட்ட மா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கைகளின் விவரங்களையும் சபைக்குச் சமர்ப்பிப்பதாகவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .