2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘செப். 2 தீர்க்கமானது’

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு, செப்டெம்பர் 2ஆம் திகதி, தீர்க்கமானதாக இருக்குமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றது.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது ஆண்டு நிறைவு விழா, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அதன்போது, நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பொன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவாரென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தால், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மூன்றாவது சக்தியாக மாறிவிட்டதென, கட்சியின் முக்கியஸ்தர்கள் எடுத்துரைத்துள்ளனர். இந்த நிலைமை தொடருமாயின், எதிர்காலத் தேர்தல்களில், பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இதனையடுத்தே, நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பது தொடர்பான முக்கியமானதோர் அறிவிப்பு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியன்று விடுக்கப்படலாமென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தின் போது, வெகுவாக பிரஸ்தாபிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. ஆகையால், எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியீட்ட வேண்டுமாயின், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகவேண்டுமென, பல்வேறு தரப்பினரும் ​ஆலோசனை வழங்கியுள்ளனர் என்றும், அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்தே, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியன்று, முக்கியமானதோர் அறிவிப்பு விடுக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X