2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சைட்டத்தை மூடமாட்டோம்’

Nirshan Ramanujam   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்

மாலபேயில் அமைந்துள்ள, தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்), ஒருபோதும் மூடிவிடப் போவதில்லை எனவும், அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் எனவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று முற்பகல் ஆரம்பமானது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு, உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.   

இதன்போது அவரால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

சபையில் கேள்வியெழுப்பிய தினேஷ் எம்.பி, சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் போக்கு, மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்ததுடன், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார். அத்தோடு,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரினார்.  

அவரது கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, “சைட்டம் தொடர்பான வர்த்தமானி, முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. அதனை நீங்கள் தான், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள். அதற்கான ஆவணங்கள் இங்கே இருக்கின்றன. இப்போது எங்களைக் குற்றஞ்சுமத்துகிறீர்கள்.   

“சைட்டம் நிறுவனத்தை, ஒருபோதும் மூடிவிட மாட்டோம் என்பதை நான் இங்கு மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எதிர்வரும் திங்கட்கிழமை, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிப்பார்” என்றார். இதன்போது சபையில் பெரும் குழப்பநிலை தோன்றியது.  

இந்நிலையில் அங்கு எழுந்துநின்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்தார். இதன்போது, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால், நாடாளுமன்றத்தைக் கேலிக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என, சபாநாயகர் எச்சரித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .