2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சொத்துப் பராமரிப்பாளர் தொடர்பில் டிசெ. 14இல் அறிவிக்கப்படும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் வைத்திருந்த, விற்ற குற்றச்சாட்டில் மரண தண்னைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார அவருடைய மனைவி மற்றும் தங்கைக்கு எதிரான வழக்கில், சொத்துப் பராமரிப்பாளர் தொடர்பான, முறைப்பாட்டாளர் தரப்பின் நிலைப்பாடு, சாட்சியப்பதிவு தினமான டிசெம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (27) அறிவித்தார். ராஜகிரிய ரோயல் பார்க், வெள்ளவத்தை சீகல் ரெசிடென்ஸ், விஜேராம மாவத்தை, நெதிமால ஆகிய பிரதேசங்களில் வீடுகளை வாங்கி பணச்சலவை செய்தனர் என்று,  சட்டமா அதிபரால், வெலே சுதா, அவருடைய மனைவி கயனி சுதர்ஷினி,

அவருடைய தங்கை வசுந்தரா ஆகியோருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டஇந்த வழக்கில், சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 18.2 மில்லியன் ரூபாய் தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட, சொத்துகளைப் பராமரிப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பராமரிப்பாளர் தொடர்பில் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தார். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவிநிலை கொண்ட அதிகாரியே நியமிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்த சட்டத்தரணி, இந்த வழக்கில், அவ்வாறானதொருவர் நியமிக்கப்பட வில்லை என்றும் இதுதொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பு விளக்கவேண்டும் எனவும் கோரியிருந்தார். 

அதுதொடர்பில் அறிவிப்பதற்கான தினமாக, நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே, இவ்விடயம் தொடர்பான தமது நிலைப்பாடு, சாட்சியப்பதிவு தினமான டிசெம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும் என, தெரிவித்தார். 

இதனையடுத்து, வழக்கின் சாட்சியப்பதிவுக்கான தினங்களாக டிசெம்பர் 14, 15ஆம் திகதிளை, நீதிபதி அறிவித்தார்.  

2008ஆம் ஆண்டு, கல்கிஸை பிரதேசத்தில் வைத்து, 7.05 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட வெலே சுதா, ஹெரோய்ன் விற்பனை மற்றும் வைத்திருந்த வழக்கில், குற்றவாளியான இனங்காணப்பட்டு மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X