2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜனாஸா எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2020 நவம்பர் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கொவிட்-19 தொற்று நோயால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள்,  உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ, வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் எரிக்கப்பட வேண்டும் என்று கோரி இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயரத்ன, தனிமைப்படுத்தலில் இருப்பதால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, அவர் சார்பில் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே, இவ்வழக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக, நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நேற்று (25) மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட விசேட நகர்த்தல் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை விசேடமாக முன்னெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானத்ததற்கமைவாக இன்று இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், பைஸர் முஸ்தபா, விரான் கொரயா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு, எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பல தரப்பினராலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பல மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ஜூன் மாதம் 08ஆம் திகதியும் ஜூலை மாதம் 13ஆம் திகதியும் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தன. எனினும், இதுவரை தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .