2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான திட்டம் ‘ரணிலின் திட்டமே’

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழ்ச்சிகளுக்குப் பின்னால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்துகொள்ளவே இவ்வாறு பிரதமர் ரணில், இவ்வாறு ஜனாதிபதியைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

புஞ்சி பொரளையில் உள்ள, சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த, அவ்வணியின் எம்.பிகளான எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, டிலான் பெரேரா ஆகியோரே, கூட்டாக மேற்கண்டவாறு தெரிவித்தனர். எனினும், தங்களது கருத்துகளுக்கான ஆதாரங்கள் எவற்றையும், அவர்கள் வெளியிட்டிருக்கவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே, பொலிஸ் திணைக்களம் இயங்குவதாகக் கூறிய அந்த அணி, ஆகவே ஜனாதிபதி தன்னைப் பாதுகாத்துகொள்ள, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சட்டமும் ஒழுங்கும் அமைச்சை, தனக்குக் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும், அவர் கேட்டுக்கொண்டனர்.

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சியை அம்பலப்படுத்திய, ஊழல் எதிர்ப்புப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்டுள்ள குரல் பதிவில் உள்ள குரல், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டால், இந்தச் சூழ்ச்சிக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பது உண்மையாகும் என, டிலான் பெரேரா எம்.பி, இதன்போது கூறினார். மேலும், ஜனாதிபதி படுகொலை செய்யப்பட வேண்டும் என்கிற அரசியல் நோக்கம், பிரதமர் ரணிலுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்குப் போலியான ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதும், தற்போது கண்டறியப்பட்டுள்ளதென, எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.
(படப்பிடிப்பு: சமந்த பெரேரா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .