2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்தால் சிக்கல்

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலப்படம் செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, “இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசுடமையாக்குவது குறித்தும் உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“அண்மைய காலங்களில் இடம்பெற்று வந்த மண்ணெண்ணெய் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஒரு லீற்றருக்கு 44 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சாதாரண மக்களின் நிலையை கருத்தில்கொண்டு அரசாங்கம் அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

“டீசலின் பாவனை தற்காலத்தில் அதிகரித்து வருவதால் மண்ணெண்ணெய் பாவனை குறைவடையுமென அமைச்சு எதிர்பார்த்திருந்தது. ஆனால், திடீரென மண்ணெண்ணெய் பாவனை அளவுக்கு அதிகமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலைப்பாடு குறித்து அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின் போது டீசலுடன் மண்ணெண்ணெய், கலப்படம் செய்து விற்பனை செய்யும் விவகாரம் அம்பலமானது.

“பஸ்> லொறி உள்ளிட்ட வாகனங்களுக்குக் கலப்படம் செய்யப்படாமல், மண்ணெண்ணெய் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் நிரப்பப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இனிவரும்; காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால், அதில் ஈடுபடுவோருக்கும் சூத்திரதாரிகளுக்கும் எதிராகக் கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

“சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை, மடக்கிப்பிடிப்பதற்கென பெற்றோலிய வளத்துறை அமைச்சு தனியான பிரிவொன்றை நிறுவியுள்ளது. அப்பிரிவு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களைக் கண்டறிந்து, அந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்கும்.

“சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும், எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசுடமையாக்குவது குறித்தும் உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளோம்.

“எவ்வாறாயினும், கடந்த நாட்களில் மண்ணெண்ணெய் விற்பனை அதிகரித்தபோது 44 ஆயிரத்து 137 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடத்தில் பெற்றோலிய வளத்துறை அமைச்சுக்கு 5>460 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதலிரு மாதங்களில் 2,146 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

 “ஆகையால், சாதாரண மக்களுக்கு நிவாரண அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளை, முறைக்கேடாகப் பயன்படுத்​துவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X